எல்லைகளைக் கடந்த ‘நாவு’க்கரசர்

எல்லைகளைக் கடந்த ‘நாவு’க்கரசர்
Updated on
1 min read

நம் வாழ்க்கையில் இளமையில் செய்து முடித்தே ஆக வேண்டிய கடமைகளில் முக்கிய மானது, விதவிதமாகச் சாப்பிடுவதுதான்.

சிரிக்காதீங்க... கல்லைத் தின்றாலும் செரிக்கிற வயது என்று முதுமொழியே இருக்கிறது. இந்தக் கடமையை ரசித்து ருசித்து நிறைவேற்றியதோடு, அந்த அனுபவங்களை எல்லாம் தன் வலைப்பூவில் பதிவு செய்து வருகிறார் திருச்சி உறையூரைச் சேர்ந்த சுரேஷ்குமார்.

சென்னை முதல் குமரிவரை ஒவ்வொரு ஊரிலும் கிடைக்கிற சிறந்த உணவு வகைகளை எல்லாம் பெரும்பாலும் ருசித்துவிட்டேன் என்று சொல்லும் இந்த நாவுக்கரசருக்கு இப்போது 35 வயது. அதற்குள் 35 நாடுகளை வலம் வந்து, அந்நாடுகளின் சிறந்த உணவுகளையும் விழுங்கிவிட்டார், இந்த உணவுக்கரசர்.

பெங்களூரில் ஐ.டி. துறையில் வேலை பார்க்கும் இவருக்கு, வேலை நிமித்தமாக உலக நாடுகளுக்கெல்லாம் கம்பெனி செலவிலேயே சென்று வரும் வாய்ப்புக் கிடைத்திருக்கிறது.

“ஆரம்பத்தில், உணவுக்காக ஊர் ஊராகச் செல்கிற பழக்கம் எல்லாம் இல்லை. போகிற ஊரில் என்ன கிடைக்கிறதோ அதைச் சாப்பிடுவேன். முதலில் சிக்கன், மட்டன் தவிர எதையும் சாப்பிட மாட்டேன் என்று சொல்லிக்கொண்டு இருந்தேன். சீனாவில், பாம்பு, பல்லி, நாய் போன்றவைதான் எளிதாகக் கிடைத்தன. சிரமப்பட்டு முயன்று பார்த்தேன், பிடித்துவிட்டது. அதன் பிறகு எந்த நாட்டுக்குச் சென்றாலும் அந்தந்த ஊரில் எந்த உணவு சிறப்பானதோ அதைத் தேடிச் சாப்பிட்டேன்” என்கிறார்.

அந்தந்த நாட்டில், உள்ளூர் மக்களோடு உட்கார்ந்து சாப்பிட ஆரம்பிக்கும்போதுதான் அந்த நாடுகளைப் பற்றியும் கலாசாரம் பற்றியும் ஆழமாகப் புரிந்துகொள்ள முடியும் என்பதை வலியுறுத்துகிறார் சுரேஷ்குமார். அதன்பிறகு, எந்த டூர் என்றாலும், முன்கூட்டியே எங்கே என்ன சாப்பிடுவது என்று பிளான் பண்ணி டிராவல் பண்ண ஆரம்பித்திருக்கிறார். உணவு தொடர்பாக எழுதப்பட்ட பிளாக்குகளையும் படிக்கத் தொடங்கியிருக்கிறார். “அந்த அனுபவம் காரணமாக, 2012-ம்

ஆண்டு ஜூன் மாதம் ஒரு பிளாக் ஆரம்பித்தேன். கடல்பயணம் என்ற அந்த பிளாக்கில், என்னுடைய பயணங்களை மட்டுமின்றி, இதுவரையில் நான் ருசித்துள்ள 200 வகை உணவுகளைப் பற்றியும் எழுதிவிட்டேன். என்னைப் போல பிளாக்கைப் படித்துவிட்டுக் கடையைத் தேடுபவர்களின் வசதிக்காக அந்தக் கடைகளுக்குச் செல்லும் பாதையைக் காட்டும் மேப்களையும் பதிவிட்டிருக்கிறேன்” என்கிறார் சுரேஷ்குமார்.

“எந்த ஊருக்குப் போனாலும், பஸ் நிலையம் அருகே உள்ள கடையில் இட்லி, தோசையை மட்டும் சாப்பிடுவதில் என்ன இருக்கிறது? கொஞ்சம் காலாற நடந்தால் ஒவ்வொரு ஊரிலும் ஓர் அற்புதம் காத்திருக்கும் என்பது என் அனுபவப் பாடம். மதுரை மீனாட்சி பஜாரில் மோய்ஞா, மாமா பிரை போன்ற பர்மா உணவுகளும் கிடைக்கின்றன என்பதையும் இப்படித்தான் கண்டுபிடித்தேன்” என்கிறார் சுரேஷ்குமார். சிங்கிள் டீயை 2 லட்சத்திற்கு விற்கிறார்கள் என்ற தகவலறிந்து, சிங்கப்பூரில் குறிப்பிட்ட ஓட்டலுக்குச் சென்று வேடிக்கை பார்த்த சுவாரஸ்மான அனுபவத்தையும் எழுதியிருக்கிறார் சுரேஷ்.

வலைப்பூ முகவரி: >http://www.kadalpayanangal.com/

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in