எக்சர்ஸைஸ் வித் ரம்யா: "அடக்கம்... அது ரொம்ப முக்கியம்!"

எக்சர்ஸைஸ் வித் ரம்யா: "அடக்கம்... அது ரொம்ப முக்கியம்!"
Updated on
2 min read

டி.வி. ஷோக்களில் தனது பேச்சின் மூலம் கவர்ந்து வந்த ரம்யா, தற்போது `ஸ்டே ஃபிட் வித் ரம்யா' என்ற யூடியூப் சேனல் தொடங்கி உடற்பயிற்சி ஆலோசனைகளை வழங்கிவருகிறார். இதை ட்விட்டர் தளத்தில் பலரும் பாராட்டி ஆதரவு தெரிவித்திருக்கிறார்கள். உடற்பயிற்சி ஆலோசனைகள் குறித்து ரம்யாவிடம் பயத்துடன் பேசியபோது...

உடற்பயிற்சியின் மீது எப்படி இவ்வளவு ஈடுபாடு வந்தது?

எனக்குச் சின்ன வயசுல இருந்தே எக்சர்ஸைஸ் மேல ரொம்ப ஆர்வம். டென்த் எக்ஸாம் லீவ்ல‌ எனக்கு உடம்பு சரியில்லாமப் போனதால‌ உடல் இளைச்சுது. நான் லெவன்த் போகும் போது என் ஃபிரண்ட்ஸ் எல்லாம் நீ ரொம்ப ஸ்லிம்மா அழகா இருக்கேன்னு சொன்னாங்க.

`உடம்பு இளைச்சதால நாம அப்படி இருக்கோம் போல'ன்னு நினைச்சு இனிமேல் வெயிட் போடாம இருக்கணும்னு எக்சர்ஸைஸ் பண்ண‌ ஆரம்பிச்சேன்.

டி.வி.க்கு வந்தப்புறம்தான் உடல் எடை எவ்வளவு முக்கியம்னு தெரிஞ்சுது. அதனால‌ ட்ரெட் மில், ஜிம், யோகா, ஜூம்பான்னு அத்தனையும் பண்ணுவேன். எனக்கு எது பண்ணினாலும் உடல் எடை குறையவே இல்லை.

மூணு வருஷத்துக்கு முன்னால ஃபங்க்ஷனல் ஃபிட்னெஸ்ங்குற பயிற்சியில‌ சேர்ந்து எக்சர்ஸைஸ் பண்ண ஆரம்பிச்சேன். பயங்கர சவாலா இருந்துச்சு.

அந்தப் பயிற்சி பற்றி கொஞ்சம் சொல்லுங்க...

நமது உடல் எடைக்குத் தகுந்த மாதிரி கடுமையா 21 நிமிடங்கள் உடற்பயிற்சி செய்யணும். இந்த உடற்பயிற்சியைக் குழுவா பண்ணனும்கிறதால‌, என் பக்கத்துல‌ இருக்கிறவங்களோடு போட்டி போட்டு செய்வேன். இதனால என்னோட வெயிட் வேகமா குறைய ஆரம்பிச்சுது.

இதனால என்னைப் பார்க்கிறவங்க பாராட்ட ஆரம்பிச்சாங்க. அது எனக்குள்ள‌ ஒரு புது நம்பிக்கையை ஏற்படுத்துச்சு. நான் நிற்கிற‌ விதம், நடக்கிற‌ விதம் என எல்லாமே மாறிச்சு.

உடற்பயிற்சியில் விருதுகள் எல்லாம் வாங்கியிருக்கீங்களாமே?

வெஜிடேரியன் சாப்பாடுதான் என்னோட டயட். `அதனால நம்மால் அதிக எடையை எல்லாம் தூக்க முடியாது'ன்னு நினைச்சேன். ஆனா 55 கிலோ எடையுள்ள நான், 70 கிலோ வெயிட் வரை தூக்க முடியுது. இதனால‌ என்னோட ட்ரெய்னர் என்னை ரொம்பவும் என்கரேஜ் பண்ணார்.

நாலு மாசத்துக்கு முன்னாடி சென்னையளவில் `பெஞ்ச் பிரஸ்' போட்டி நடந்துச்சு. என்னோட வெயிட் கேட்டகிரியில‌ நான் தங்கப் பதக்கம் ஜெயிச்சேன். அதே மாதிரி `ஸ்குவாட்' போட்டியிலும் தங்கப் பதக்கம் ஜெயிச்சேன்.

யூடியூப்பில் ஃபிட்னெஸ் சேனல் எல்லாம் ஆரம்பிச்சிருக்கீங்க..?

நான் புரொபெஷனல் பாடி பில்டர் எல்லாம் கிடையாது. ஒரு ஸ்கூல் ஆரம்பிச்சு மத்தவங்களுக்குக் கற்றுக் கொடுக்கும் அளவுக்கு எனக்குத் தகுதியில்லை. நல்ல சத்தான உணவு சாப்பிடுங்கள், உடலை ஃபிட்டாக வைத்துக் கொள்ளுங்கள், நல்ல பழக்க வழக்கங்கள் பின்பற்றுவதன் முக்கியத்துவம்னு இந்த விஷயங்களை ஊக்குவிக்கத்தான் ஆசைப்படுறேன். என்னுடைய சேனலைப் பார்த்து யாருக்காவது `நாமும் இப்படி உடற்பயிற்சி செய்யணும்'கிற‌ எண்ணம் வரலாம். இல்லையா?

உடற்பயிற்சி சார்ந்து வேற என்னவெல்லாம் உங்களுக்குத் தெரியும்?

இரவு 10 மணிக்கு மேல் தனியாக வெளியே போனால்தான் பிரச்சினையே வருது. அந்த மாதிரி நேரத்தில் யாராவது நண்பர்களுடன் வெளியே செல்ல வேண்டும் இல்லையென்றால் வெளியே போகக் கூடாது. தனியாகப் பயணிப்பது என் பணியில் உண்டு. அப்போது தற்காப்புக்காக `பெப்பர் ஸ்ப்ரே' வைத்துக் கொள்வேன்.

அப்புறம் `க்ரவ் மகா'ங்கிற‌ தற்காப்புக் கலை தெரியும். அந்தக் கலையில்தான் `நாம் ரொம்ப டென்ஷன் ஆனாதான் நம்முடைய சக்தி என்னங்கிறதை தெரிஞ்சுக்க‌ முடியும்'னு சொல்லிக் கொடுத்தாங்க‌.

முன்பு போல தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் உங்களை அதிகம் காண முடிவதில்லையே?

இசை, நடனம், காமெடி, ரியாலிட்டி என எல்லா வகையான நிகழ்ச்சிகளை நிறைய பண்ணிட்டேன். மீண்டும் ஒரே மாதிரியான நிகழ்ச்சிகளையே பண்ணுவதில் எனக்கு விருப்பமில்லை. ஏதாவது ஒரு வித்தியாசமான நிகழ்ச்சியைக் கொடுத்தால் கண்டிப்பா பண்ணுவேன்.

`ஒ.கே கண்மணி' படத்துக்குப் பிறகு சினிமா வாய்ப்பு?

சினிமாவில் நடிச்சு முன்னணி நாயகியாகனும்கிற‌ எண்ணமே எனக்குக் கிடையாது. `ஓ.கே கண்மணி'யில் நடித்ததே மணிரத்னம் சார் கொடுத்த வாய்ப்பு என்பதால்தான். அந்தப் படத்தில் நடிக்கும்போது மணி சார் `உனக்கு இயல்பாவே நல்லா நடிக்க வருது. ஏன் இவ்வளவு நாள் நடிக்கலை'ன்னு கேட்டார். அப்போதான் சரி தொடர்ந்து நடிக்கலாம்னு முடிவு பண்ணேன்.

அதற்காக கிடைக்கிற வாய்ப்புகள் எல்லாத்தையும் ஏத்துக்க மாட்டேன். இன்னும் மூணு படங்கள்ல‌ நடிச்சாக்கூடப் போதும். அந்த மூணு படங்களின் கதாபாத்திரங்களுமே `இதை நாம‌ செஞ்சே ஆகணும்'கிற‌ எண்ணம் வந்தா மட்டுமே பண்ணுவேன்.

தொலைக்காட்சி, சினிமா, இப்போ ஜிம்... என்ன கத்துக்கிட்டீங்க?

நான் பெரிசா எதையும் சாதிச்சுட்டதா நினைக்கலை. எது நடந்தாலும் ரொம்ப அடக்கமாக இருக்கணும்கிறதை என்னோட அப்பா அம்மாகிட்ட இருந்து கத்துக்கிட்டேன். அதை இப்பவும் நான் ஃபாலோ பண்றேன். அது ரொம்ப முக்கியம்னு நினைக்கிறேன்!

ரம்யாவின் அதிகாரப்பூர்வ யுடியூப் சேனல்: >https://www.youtube.com/channel/UCBAiv_SaeHK9LM2CmAvZtng/videos

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in