பண்றோம்... பின்றோம்..!- நம்பிக்கை தந்த செந்தமிழ்க் கூடல்

பண்றோம்... பின்றோம்..!-  நம்பிக்கை தந்த செந்தமிழ்க் கூடல்
Updated on
1 min read

நான் சென்னை அரும்பாக்கம் துவாரகதாஸ் கோவர்தன்தாஸ் வைணவக் கல்லூரியில் தமிழ் இலக்கியம் படிக்கிறேன். தமிழ் படிக்கிறோமே என்ற தாழ்வு மனப்பான்மையுடன்தான் கல்லூரியில் சேர்ந்தேன். ஆனால் தமிழ் படிக்கிறோம் என்று பெருமிதப்படவைத்தது எங்கள் தமிழ் இலக்கியத் துறை. மாணவர்களின் திறமைகளை வெளிக்கொண்டுவரும் நோக்கத்துடன் ஒவ்வொரு மாதமும் எங்கள் துறை சார்பில் ‘செந்தமிழ்க் கூடல்’ என்ற பெயரில் கூட்டம் நடைபெறும். நான்கு பேரைப் பார்த்தாலே பயந்துவிடும் மாணவர்கள்கூட இந்தத் செந்தமிழ்க் கூடல் நிகழ்ச்சியில் மேடையேறித் தங்கள் திறமைகளை வெளிப்படுத்தினார்கள். இப்போது எங்கள் துறை மாணவர்களுக்கு மேடை பயமே கிடையாது. தமிழால் என்ன ஆகும் என்று நினைத்த நான் தமிழால் எல்லாமே ஆகும் என்று புரிந்துகொண்டதும் இந்த நிகழ்ச்சியின் மூலம்தான்.

முதலாமாண்டு மாணவர்களை உற்சாகப்படுத்தும் நோக்கத்துடன் இந்த மாதம் நிகழ்ச்சி நடந்தது. நினைவாற்றலும் அவசியம் என்பதை உணர்த்தும் வகையில் 96 வகை சிற்றிலக்கியங்களை எங்கள் தோழி பட்டியலிட, குறிஞ்சிப் பாட்டில் வரும் 99 மலர்களின் பெயர்களைச் சொல்லிக் கைத்தட்டல் வாங்கினேன் நான். கல்லூரி மேடையில் கவிதை இல்லாமலா? சிரிக்கவைத்த ‘ஹைகூ’க்களுக்கு நடுவே மதுவிலக்கு, ஹெல்மெட் போன்ற தலைப்பில் வாசிக்கப்பட்டவை சிந்திக்கவும் வைத்தன. கண்ணன் பாட்டில் வரும் ‘கண்ணன் என் சேவகன்’ பகுதியை நடித்துக்காட்டி அசத்தினார் மூன்றாமாண்டு மாணவி கங்காதேவி.

அனைத்துக்கும் மகுடம் வைத்தது போல அமைந்தது ‘உழைப்பு’ என்ற தலைப்பில் இடம்பெற்ற நாடகம். இளங்கலைத் தமிழ் படிக்கும் ஒரு மாணவன் பிற துறைகளால் கவரப்பட்டுப் பணக்காரன் ஆக வேண்டும் என்று நினைக்கிறார். துணைக்குக் கடவுளையும் அழைத்துக்கொண்டு ஒவ்வொரு துறையாகச் செல்லும்போதுதான் பிற துறைகளில் இருக்கும் சிரமங்களும் தமிழ்த் துறையின் மேன்மையும் அவருக்குப் புரிகிறது. இந்த நாடகம் உற்சாகம் தந்தது என்றால் இன்னொரு நாடகம் உத்வேகம் தந்தது. தமிழ் படிக்கத் தயங்கும் ஒரு பெண், பெற்றோரின் உந்துதலால் தமிழ் படித்துக் கல்லூரிப் பேராசிரியையாக மாறும் நாடகம் அது. நாங்களே பேராசிரியராக மாறிய உணர்வை அது தந்தது. தமிழ் படித்தால் எந்தெந்த துறையில் சாதிக்கலாம் என்பதைப் பற்றி சிறப்பு விருந்தினர் சொன்னதைக் கேட்டதும் எங்கள் நம்பிக்கை அதிகரித்தது.

கல்லூரி என்பது கல்வி பயில மட்டுமல்ல, நம்மை பல்துறை வித்தகர்களாக மாற்றிக்கொள்ள உதவும் பாசறையும்தான் என்பதை எங்கள் தமிழ் இலக்கியத் துறை உணர்த்திவருகிறது.

- த. ப. சூரியா, மூன்றாமாண்டு தமிழ் இலக்கியம்.

ஹாய் ட்யூட்ஸ்... உங்கள் கல்லூரியில் நடைபெறும் இதுபோன்ற பயனுள்ள நிகழ்வுகளையும், உங்கள் அனுபவங்களையும் எங்களுடன் பகிர்ந்துகொள்ளுங்கள். பலருக்கும் அது வழிகாட்டியாக அமையலாம்..!

முகவரி: பண்றோம்... பின்றோம்!

‘இளமை புதுமை' தி இந்து, கஸ்தூரி மையம், 124,

வாலாஜா சாலை, சென்னை - 600 002.

மின்னஞ்சல் அனுப்ப: ilamaiputhumai@thehindutamil.co.in

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in