பண்டிகைகளும் பேருந்துப் பயணமும்
தீபாவளி என்றாலே குதூகலமும் உற்சாகமும் நிறைந்ததுதான். தீபாவளியின் குதூகலத்திற்குப் பின்னால் சில வலிகளும் இருக்கின்றன. வீட்டிற்குச் செல்ல முடியாத வேலை, புதுத் துணி எடுக்க முடியாத பொருளாதார நிலை எனத் தீபாவளி நாளில் சிலர் துயரங்களையும் அடைவார்கள்.
இவையெல்லாம் ஒருபுறம் இருந்தாலும் மொத்த குடும்பமும் வீட்டில் குவிவதில் ஆரம்பித்து அனைவரும் சேர்ந்து தீபாவளிப் பிரார்த்தனைசெய்வது, பலகாரம் உண்பது, உறவினர்களிடம் அண்டை வீட்டாரிடம் இனிப்பையும் சந்தோஷத்தையும் பகிர்வது இவை பெரும் மன மகிழ்ச்சியை அளிக்கக்கூடியவை. இந்தச் சந்தோஷத்திற்காகப் பல மைல்கள் தாண்டி எல்லோரும் தங்கள் ஊருக்கு வருகிறார்கள். இம்மாதிரியான மனிதர்களால்தாம் தீபாவளி உயிர்ப்புடன் இருக்கிறது எனலாம்.
சென்னைக்கு வெளியில் உள்ள அனைத்து வீடுகளிலிருந்தும் ஒருவராவது சென்னைக்கு வந்திருப்பார். இவர்கள் அனைவரும் தீபாவளி போன்ற பண்டிகைக்காக ஒரே சமயத்தில் தத்தமது சொந்த ஊர்களுக்குச் செல்வதே ஒரு பெரிய பண்டிகைதான். கோயம்பேடு பகுதியெல்லாம் ஜனத்திரள் திரண்டிருக்கும். பேருந்துகளில் இடம் பிடிக்கப் போட்டி நடக்கும். பேருந்து முன்பதிவுக்கு எவ்வளவோ நவீன வசதிகள் வந்துவிட்ட பிறகு இன்னும் பலர் அந்தச் சமயத்தில்தான் பயணத் திட்டம் குறித்து முடிவெடுக்கிறார்கள். தொழிலாளர்கள் தீபாவளி போனஸை வைத்துதான் பயணத்தைத் தீர்மானிக்கிறார்கள்.
விழுப்புரம், திண்டிவணம், மதுரை போன்ற போக்குவரத்து கழகக் கிளைகளில் இருந்தும் தீபாவளியை ஒட்டிப் பல பேருந்துகளைப் பல தடங்களுக்கு இயக்குகிறார்கள். ஆனாலும் நாளுக்கு நாள் பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே இருப்பதால் எதுவுமே போதவில்லை.
தனியாகச் செல்பவர்கள் எப்படியோ ஜன்னல் கம்பிகளில் தொங்கிக்கொண்டு ஒரு கைக்குட்டையையோ, தங்கள் பைகளையோ அந்த இருக்கையின் மீது வைத்து இடம் போட்டுவிட முடியும். முன்பதிவு இல்லாமல் குடும்பத்தோடு வருபவர்களின் நிலை கவலைக்குரியது. சிலர் தங்கள் குழந்தைகளை ஜன்னல் கம்பி வழியாக உட்கார வைத்து இடம்போடுவதும் உண்டு. பண்டிகைக் காலத்தில் பேருந்தில் இடம் பிடிப்பது என்பது மாபெரும் சாகசப் போட்டி.
எப்படியோ முண்டியடித்துக்கொண்டு ஏறிவிட்டாலும் சேலம் மட்டும் ஏறு, தஞ்சாவூர் மட்டும் ஏறு என்று வழியில் உள்ள ஊர்களுக்குச் செல்லும் மக்களை இறக்கிவிடும் நடத்துனர்களுக்கும் ஓட்டுநர்களுக்கும் தெரியுமா இவர்களது துயரம்? தீபாவளி அன்று எத்தனை சிறப்புப் பேருந்துகள் இயக்கினாலும் இதுதான் யதார்த்தம். இவற்றையெல்லாம் மீறிப் பேருந்தில் ஏறிப் பெருமூச்சு விட்டால் அது ஆமைபோல் நகரும். பெரும்பாலும் சிறப்புப் பேருந்துகளை வேகமாக இயக்க மாட்டார்கள்.
ஆனாலும் சொந்த ஊரில் குடும்பத்துடன் கொண்டாடும் தீபாவளி இவை எல்லாவற்றையும் மறக்கச் செய்யும்.
