

பொருளாதார தேக்க நிலை பல்வேறு துறைகளில் கடும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ள போதிலும், பணம் கொழிக்கும் துறையாக வளர்ந்து வருகிறது ஃபேஷன் துறை. நடுத்தர மக்களிடையே வாங்கும் சக்தி அதிகரிப்பதே இதற்கு முக்கியக் காரணமாகும்.
சிறப்பாக வடிவமைக்கப்பட்ட ஆடைகளை, தரமான ஆடைகளை அணிய வேண்டும் என்ற விழிப்புணர்வு மக்களிடையே அதிகரித்திருப்பது இத்துறை வளர்ச்சிக்கு முக்கியக் காரணம் என்கிறார் ஆடை வடிவமைப்பாளர் விக்ரம் பத்னிஸ். ஒவ்வொரு கால கட்டத்திலும் இந்திய ஃபேஷன் துறை வளர்ச்சிப் பாதையிலேயே சென்று வருகிறது. இதற்கு முக்கியக் காரணமே ஆறு மாதத்துக்கு ஒரு முறை புதிய வடிவமைப்பில் ஆடைகள் வருவதுதான்.
இந்தியாவில் உள்ள நடுத்தர குடும்பங்களின் எண்ணிக்கை 5.5 கோடியாக உள்ளது. நடுத்தர குடும்பத்தினர் ஆண்டுக்கு சராசரி செலவு ஒரு லட்சம் கோடி டாலரை (ரூ. 65 லட்சம் கோடி) தாண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்தியாவிற்குத் தடம் பதிக்கும் வெளிநாட்டு நிறுவனங்கள் நடுத்தர வருவாய்ப் பிரிவினர் வாங்கும் வகையிலான தயாரிப்புகளையே விற்பனைக்கு வைக்கின்றன. இதனால் வெளிநாட்டு பிராண்டுகள் இப்போது இந்திய மக்களிடையே மிகவும் பிரபலமாகி வருகின்றன.
மேலும் மாறிவரும் சூழ்நிலைக்கேற்ப மாறுதல்களைத் தகவமைத்துக் கொள்வதே ஃபேஷன் துறையின் வளர்ச்சிக்கு மிக முக்கியக் காரணமாகும். மாறிவரும் சூழ்நிலைக்கு ஏற்ப சேலை மாறியதே இத்துறையின் வளர்ச்சியை காட்டுகிறது. இப்போது சர்வதேச அளவில் இந்திய சேலைக்கு மிகப் பெரும் அங்கீகாரம் கிடைத்துள்ளதோடு, அது சர்வதேச ஆடையாக மாறிவிட்டது.
சினிமா நடன இயக்குநராக இருந்து ஆடை வடிவமைப்பாளராக மாறி சர்வதேச அளவில் பிரபலமாக உள்ளவர் விக்ரம் பத்னிஸ். வடிவமைப்புக்கென எவ்வித படிப்பும் பயிலாமல், கற்பனைத் திறன் மூலம் ஆடைகளை வடிவமைத்து பிரபலமானதாகக் கூறுகிறார் பத்னிஸ். பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சன், சல்மான் கான், ஷாருக்கான், ஐஸ்வர்யா ராய், ஜான் ஆப்ரஹாம், கத்ரினா கைஃப், பிரியங்கா சோப்ரா, வித்யா பாலன் மற்றும் அக்ஷய் குமார் ஆகியோர் இவரால் வடிமைக்கப்ட்ட ஆடைகளுக்கு விளம்பர தூதர்களாக இருந்தது இவரை மேலும் பிரபலப்படுத்தியது.
ஆடை வடிவமைப்பு அவ்வப்போது மாறிவரும். ஆனால் இது சுழற்சி அடிப்படையிலானது. 1950-களில் அனார்கலி திரைப்படத்தில் மதுபாலா அணிந்த ஜாக்கெட் இன்றளவும் பெண்கள் மத்தியில் பிரபலமாக உள்ளது. பாபி திரைப்படத்தில் டிம்பிள் கபாடியா அணிந்த ஜாக்கெட் பிரபலம். ஒரு காலத்தில் பிரபலமாக இருந்த ஆடைகள் குறிப்பிட்ட காலத்துக்குப் பிறகு மீண்டும் பிரபலமாகும். இதுதான் ஃபேஷன் துறையின் நிலை என்று பத்னிஸ் குறிப்பிடுகிறார்.
உலக அழகிக்காக வடிவமைக்கப்படும் ஆடைகள் அண்டை வீட்டுப் பெண்களைச் சென்றடைந்தால் அதுவே வெற்றி என்கிறார் பத்னிஸ்.