உயரும் நில மதிப்பு

உயரும் நில மதிப்பு
Updated on
1 min read

சென்னை, கோவைக்கு அடுத்த படியாக நில மதிப்பு உச்சத்தில் இருப்பது கன்னியாகுமரி மாவட்டத்தில்தான். இதில் ஆச்சரியமான விஷயம் என்னவென்றால் மாவட்டத்தின் தலைநகரான நாகர்கோவிலைவிடவும்,எல்லையோரப் பகுதியான மார்த்தாண்டம் பகுதியில் நிலத்தின் விலை அதிகம். காரணம் இங்கு பணத்தை கொட்டிக் கொடுக்கும் ரப்பர் சாகுபடி நடப்பதுதான். ரப்பரில் இருந்து கிடைக்கும் தொடர் வருமானம் இப்பகுதியின் நிலமதிப்பை உச்சத்துக்குக் கொண்டுபோயுள்ளது.

தென் திருவிதாங்கூர் இந்து கல்லூரியின் பொருளாதாரப் பேராசிரியர் டாக்டர் சி.ஏ. ஷ்யாம் சங்கர் இது பற்றி குறிப்பிடும்போது,"நாகர்கோவிலில் நில மதிப்பு ஏறுமுகத்தில் சென்றுகொண்டிருக்கிறது. 5 ஆண்டுகளுக்கு முன்பு வரை அரசு நிர்ணயித்த விலை நிர்ணயப்படி சென்ட்டுக்கு ரூ. 2 லட்சமாக இருந்த நிலமதிப்பு, இன்று ரூ. 7 லட்சமாகக் கூடியிருக்கிறது. குமரி மாவட்டத்தின் தட்பவெப்பநிலை, அமைதியான சூழல், அதிகமான வழிபாட்டுத் தலங்கள் எனப் பாதுகாப்பான, அமைதியான வாழ்க்கைச் சூழல் இருப்பதால், அதிகமான வெளிமாவட்டவாசிகளும் பணி ஓய்வுக்குப் பிறகு நாகர்கோவிலைத் தேர்வுசெய்கிறார்கள்.

தமிழகத்திலேயே படித்தவர்கள் அதிகம் பேர் உள்ள மாவட்டம் கன்னியாகுமரி. இந்த மாவட்ட மக்கள் கல்விக்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பது வழக்கம். நாகர்கோவிலில் வரலாற்றுப் பெருமைமிக்க பல பள்ளி,கல்லூரிகள் இருக்கின்றன. கிராமங்களில் வசிக்கும் பலரும் கல்வி வசதிக்காக நகரை நோக்கி இடம்பெயர்வதாலும் ரியல் எஸ்டேட் தொழில் இங்கு கொடிகட்டிப் பறக்கிறது,”என்கிறார்.

ரியல் எஸ்டேட் தொழிலில் ஈடுபட்டுவரும் நாகர்கோவிலைச் சேர்ந்த எம்.சுந்தரிடம் கேட்டபோது, "நாகர்கோவிலில் நகர எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் ஒரு சென்ட் குறைந்தபட்ச விலையே ரூ. 10 லட்சத்தை தாண்டிவிட்டது. அதிகபட்சமாக மீனாட்சிபுரம் பகுதியில் சென்ட் ரூ.60 முதல் 65 லட்சம் வரை விலை போகிறது. ரியல் எஸ்டேட் என்று சொன்னதும் தமிழகத்தின் மற்ற பகுதிகளில் உள்ளதைப் போல் ஏக்கர் கணக்கில், நிலத்தை பிளாட் போடும் வழக்கம் குமரி மாவட்டத்தில் இல்லை. இங்கு பெரு நிலஉடமையாளர்கள் குறைவு. நன்செய் நிலமாக இருந்தால் 5 ஏக்கர் வரையிலும், புன்செய் நிலமாக இருந்தால் அதிகபட்சம் 20 ஏக்கர் வரையும்தான் இங்கே பிளாட் போடப்படுகிறது. விலை ஏறுமுகத்தில் இருந்தாலும்,பிளாட் போட இடம் இல்லாத அளவுக்குத் திணறிவருகிறது நாகர்கோவில்,” என்கிறார் இவர்.

அருகிலேயே கேரளத் தலைநகர் திருவனந்தபுரம் இருப்பதால், நாகர்கோவில் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் ரியல் எஸ்டேட் தொழில் கொடிக்கட்டிப் பறக்கிறது என்று சொல்லலாம்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in