Published : 29 Jul 2016 13:06 pm

Updated : 14 Jun 2017 15:31 pm

 

Published : 29 Jul 2016 01:06 PM
Last Updated : 14 Jun 2017 03:31 PM

பாலய்யா டா!

‘கபாலி' திரைப்படத்தில் ரஜினிகாந்த் தோன்றும் முதல் காட்சியில் அவர் சிறையில் ஒரு புத்தகத்தைப் படித்துக்கொண்டிருப்பார். அதன் தலைப்பு 'மை ஃபாதர் பாலய்யா'. அந்தப் புத்தகம், தெலங்கானா பகுதியைச் சேர்ந்த ஒய்.பி.சத்யநாராயணா என்ற தலித் பேராசிரியரால் ஆங்கிலத்தில் எழுதப்பட்ட சுயசரிதை. 'ஹார்ப்பர் காலின்ஸ்' பதிப்பகத்தால் கடந்த 2011-ம் ஆண்டு இந்தப் புத்தகம் வெளியிடப்பட்டது.

மடிகா சாதியைச் சேர்ந்த நரசய்யா, அவரது மகனின் பெயரும் நரசய்யா, (தந்தையின் பெயரை மகனுக்கும் வைக்கின்ற வழக்கம் அக்காலத்தில் இருந்திருக்கிறது) அவரது பேரன் பாலய்யா, பாலய்யாவின் மகன் ஒய்.பி.சத்யநாராயணா என நான்கு தலைமுறையினரின் கதையைச் சொல்கிறது இந்த சுயசரிதைப் புத்தகம்.


நரசய்யா நிலம் இல்லாத கூலி விவசாயி. நிஜாமின் கடுமையான அடக்குமுறைக் காலத்தில் நிலப்பிரபுத்துவ முறையில் கூலி வேலை பார்த்தவர். அவரது மகனான நரசய்யா, தனது மனைவியை காலரா நோய்க்குப் பலி கொடுத்துவிட்டுத் தனது மகன் பாலய்யாவோடு ஊரை விட்டுக் கிளம்புகிறார். அவரது தாய்மாமன் உதவியோடு நிஜாமின் இரயில்வே துறையில் வேலைக்குச் சேர்கிறார். நிலப்பிரபுத்துவத்திலிருந்து விடுபட்ட ஒரு தலித் குடும்பம் அதன் பிறகு நகரத்தில் மற்றொரு விதமாக சாதியப் பாகுபாடுகளை அனுபவிக்கத் தொடங்குகிறது.

சித்தியின் ஆதர‌வில் வளரும் பாலய்யா அரைகுறைப் படிப்போடு ரயில்வே துறையில் வேலைக்குச் சேர்கிறார். திருமணமும் செய்துகொள்கிறார். இதற்கிடையில் அவருக்கு வேறொரு பெண்ணின் தொடர்பும் உண்டாகிறது. அந்த உறவில் பிறந்தவரே இந்தச் சுயசரிதையை எழுதியவர்.

தனது குழந்தைகள் அனைவரையும் ஒன்றாகவே கருதி வளர்க்கும் பாலய்யா கல்வி பெற்றால்தான் கடைத்தேற முடியும் என்று உறுதியாக நம்புகிறார். படித்தால் ரயில்வே துறையில் வேலை கிடைக்கும் என்பது முக்கியக் காரணம்.

அந்தக் குடும்பத்தில் உணவு, உடை, இருப்பிடம் என்று அடிப்படை வசதிகளில் குறைபாடுகள் இருந்தாலும் குழந்தைகளின் கல்விக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது. கடைசியில் ஒய்.பி.சத்யநாராயணாவும் அவரது இரண்டு சகோதரர்களும் தாங்கள் படிக்கும் பாடங்களில் முனைவர் பட்டம் பெறுகிறார்கள். கல்வியின் முக்கியத்துவத்தையும் சாதிமுறையின் அவலங்களையும் பற்றியதாக இந்தப் புத்தகம் அமைந்திருக்கிறது.

திரைப்படத்தில் கதாபாத்திரங்களின் குணாம்சத்தை வெளிப்படுத்த அவர்கள் படிக்கும் புத்தகத்தைக் காட்டுவது ஒரு உத்தியாகப் பயன்படுத்தப்படுகிறது. 'கபாலி' படத்தில் ஒடுக்கப்பட்டவர்களுக்குக் குரல் கொடுக்கிற மக்கள் தலைவராக ரஜினி நடித்திருக்கிறார். அவரது அரசியல் அடையாளத்தைச் சுட்டிக்காட்டும் விதத்தில் அவர் புத்தகம் படிக்கும் காட்சி இடம்பெற்றிருக்கறது.

இந்தப் புத்தகத்தை எழுதிய சத்யநாராயணா ஹைதராபாதில் உள்ள ஓஸ்மானியா பல்கலைக்கழகத்தில் வேதியியல் துறைப் பேராசிரியராகவும் ஹைதராபாதில் உள்ள மற்றொரு கல்லூரி ஒன்றின் முதல்வராக 25 வருடங்களும் கல்விச் சேவை செய்தவர்.

ஒரு ஆங்கில நாளிதழுக்கு சத்யநாராயணா அளித்த பேட்டியில், "இந்தப் புத்தகம் விரைவில் தமிழில் வெளிவரவுள்ளது. ‘கபாலி' படத்தின் கதையை எழுதிய குழுவில் உள்ள பெண் எழுத்தாளர்களில் ஒருவர்தான் இந்தப் புத்தகத்தைத் தமிழில் மொழிபெயர்த்திருக்கிறார். ஹார்வார்ட் பல்கலைக்கழகம் உள்ளிட்ட உலகத்தின் பல பிரபல பல்கலைக்கழகங்களில் இந்தப் புத்தகம் இடம்பெற்றுள்ளது. ஆனால் அப்போது, கல்வியாளர்கள் உள்ளிட்ட சிலரிடம் மட்டுமே அந்தப் புத்தகம் புழங்கியது. ஆனால், இது ரஜினி நடிக்கும் படத்தில் பயன்படுத்தப்பட்டிருப்பதை அறிந்து ‘கபாலி' இயக்குநர் பா.இரஞ்சித்துக்கு எனது நன்றியைத் தெரிவித்தேன். இனி, அது நிறைய மக்களைச் சென்றடையும் என்று நம்புகிறேன்" என்று கூறியுள்ளார்.

மகிழ்ச்சி!


கபாலிதிரைப்படம்ரஜினிகாந்த்முதல் காட்சிசிறை

Sign up to receive our newsletter in your inbox every day!

You May Like

More From This Category

environment-and-caste

சூழலும் சாதியும்

இணைப்பிதழ்கள்

More From this Author

x