

புதிய இடங்களுக்குப் பயணம் செய்வதற்காகச் சிலர் பணியிலிருந்து விடுப்பு எடுத்துக்கொள்வார்கள். இன்னும் சிலர் தங்கள் பணியையே இப்படிப் பயணம் செய்வதற்காகப் பயன்படுத்திக் கொள்வார்கள். நான் இரண்டாவது வகை.
பணி நிமித்தமாகச் சமீபத்தில் பிரான்ஸ் நாட்டின் தலைநகர் பாரிஸுக்குச் சென்று வந்தேன். நவம்பர் மாதம் தொடங்கி டிசம்பர் முதல் வாரம் வரை அங்கு தங்கியிருந்தேன். அலுவலகப் பணிகளை முடித்துவிட்டு, கிடைக்கிற நேரத்தில் அருகிலிருக்கும் இடங்களுக்குச் சென்று சுற்றிப் பார்த்துவிட்டு வருவது வழக்கம். விடுமுறை தினங்களின் போது இதர நகரங்களுக்குச் சென்று ஓரிரு நாட்கள் தங்கியிருந்து அந்த நகரங்களின் சிறப்புக்களைத் தெரிந்துகொண்டேன்.
ஒளியின் தலைநகரம்
அப்படி ஒரு விடுமுறை தினத்தின்போது, நான் சென்ற நகரம் லியோன். பாரிஸ், மர்ஸெய்ல் ஆகியவற்றுக்குப் பிறகு பிரான்ஸ் நாட்டின் மூன்றாவது பெரிய நகரமாகும். அது பெரிய விஷயமல்ல. இந்த நகரம் ஐக்கிய நாடுகள் சபையின் யுனெஸ்கோ அமைப்பால் ‘உலகப் பாரம்பரியக் களம்’ என்று அங்கீகரிக்கப்பட்டிருப்பதுதான் அதன் உண்மையான பெருமை. உணவு வகைகளுக்கு அடுத்து இங்கு நெய்யப்படும் பட்டுத் துணிகளுக்கு உலகச் சந்தையில் மிகப்பெரிய வரவேற்பு இருப்பது குறிப்பிடத்தக்கது.
இங்கு ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் 8-ம் தேதி ‘ஃபெத் தெ லூமியர்ஸ்’ என்ற பெயரில் நான்கு நாட்களுக்கு ஒளி விளக்குகளின் திருவிழா நடைபெறும். அதன் காரணமாக இந்நகரம் ‘ஒளி விளக்குகளின் தலைநகரம்’ என்று அழைக்கப்படுகிறது. அத்தகைய பெருமை உடைய இந்நகரத்தைச் சேர்ந்தவர்கள்தான் சினிமாவைக் கண்டுபிடித்த லூமியர் சகோதரர்கள் என்பது கூடுதல் தகவல்!
இந்தியாவில் கார்த்திகை மாதத்தில் தீபங்கள் ஏற்றுவது எப்படி சிறப்பான ஒரு விஷயமாக உள்ளதோ, அதுபோலவே இங்கும் தீபத் திருவிழா கொண்டாடப்படுகிறது.
மேரியின் அருள்
சுமார் 16-ம் நூற்றாண்டில் அறிமுகமானது இந்த ஒளித் திருவிழா. 1643-ம் ஆண்டில் இந்நகரில் பிளேக் நோய் பரவியது. அந்த நோயிலிருந்து இந்நகரத்தைக் காப்பாற்றினால், மேரி மாதாவின் பெயரால் நகரம் முழுக்க ஒளி விளக்குகள் ஏற்றுவதாக மேரி மாதாவிடம் மக்கள் வேண்டிக் கொண்டனர். அப்படியே அந்நகரம் காப்பாற்றப்பட்டது. அன்றிலிருந்து இந்த ஒளித் திருவிழாவும் கொண்டாடப்பட்டு வருகிறது. இப்படி விளக்குகள் ஏற்றுவது தங்களையும் தங்கள் குடும்பங்களையும் பல்வேறு விதமான நோய்களிலிருந்து தங்களைக் காப்பாற்றும் என்று நம்புகின்றனர் இங்குள்ள மக்கள்.
‘பஸிலிக் த ஃபூர்வியர்’ மற்றும் ‘ப்ளாஸ் தெ தெரோஸ்’ ஆகிய இரண்டு விஷயங்கள்தான் இந்த ஒளித் திருவிழாவின் முக்கியமான அம்சங்களாக உள்ளன. முன்னது ஒரு தேவாலயம். அங்கு வண்ணமயான விளக்குகள் ஏற்றப்பட்டு வழிபாடு நடக்கும். பின்னது ஒரு சதுக்கம். அங்குள்ள கட்டிடங்களில் இந்தத் திருவிழாவின்போது பல விதமான ஒளி அலங்கார நிகழ்வுகள் நிகழ்த்தப்படும்.
இந்த நான்கு நாட்கள் திருவிழாவையொட்டி, இந்நகரத்துக்கு பிரான்ஸ் நாட்டின் இதர பகுதிகளிலிருந்தும் இதர நாடுகளிலிருந்தும் ஒவ்வொரு ஆண்டும் சுமார் 30 முதல் 40 லட்சம் சுற்றுலாப் பயணிகள் திரள்கிறார்கள். இந்த ஆண்டில் அந்த 40 லட்சத்தில் நானும் ஒருத்தி என்பதில் எனக்கு மகிழ்ச்சியும் பெருமையும். அங்கு நான் எடுத்த சில ஒளிப்படங்கள் உங்கள் பார்வைக்கு...
கட்டுரையாளர், புவியியல் தகவல் தொழில்நுட்ப ஆலோசகர்
தொடர்புக்கு: archana4890@gmail.com