மலை முகடுகளில் எதிரொலிக்கும் திருமணப் பாடல்!

மலை முகடுகளில் எதிரொலிக்கும் திருமணப் பாடல்!
Updated on
2 min read

பேருந்து நிறுத்தத்திலிருந்து கோடுதேன் மந்துக்குச் செல்லும் மலைச்சரிவிற்குள் இறங்கினோம். ஆழத்திற்குச் செல்லச் செல்ல பச்சை இருளின் குளிர்ச்சி உடலைச் சிலிர்க்கச் செய்தது. நகரத்தின் வாகனப் புகையும் இரைச்சலுமற்ற சூழல் அலாதியான அமைதியைத் தந்துகொண்டிருந்தது. சிறுசிறு பறவைகளின் குரல் என்னை இன்னும் பேரமைதிக்குள் இழுத்துச் சென்றது. பாறைகளும் நீர்ச்சரிவுகளும் என்னை உள்வாங்கி ஈர்த்துக் கொண்டிருப்பதான பிரமையைத் தந்தது.

சுற்றிலும் மலைச் சரிவுகள். அவற்றின் மடியில் தொட்டில் கட்டிவிட்டது போல மொத்தமாக ஏழெட்டு கான்கிரீட் வீடுகளே கொண்டதாக கோடுதேன் மந்த் அமைந்திருந்தது. எருமைகள் வீட்டுக்கு அருகிலேயே புல்லை மேய்ந்துகொண்டிருந்தன. தொதவர்களின் (Toda - தோடர்)குழந்தைகள் எருமைக் கன்றுகளைக் கொஞ்சிக்கொண்டிருந்தனர். அங்கே, கூன் விழுந்த மனிதர்கள் யாருமில்லை. மந்தின் நடுவே பிரம்மாண்டமாய் நின்ற நாவல் மரத்தை நோக்கித் தன் கைத்தடியை நீட்டி அதற்கு 800 வயது என்று மந்தின் 80 வயது மூத்த தொதவரான கொற்றவன் குட்டன் நிமிர்ந்த பார்வையில் கர்வத்தோடு சொன்னார். அதன் தண்டுப் பகுதியில் கோடாரியால் சிறிய சதுரம் வெட்டி அகல் விளக்கேற்றி மணமக்கள் வழிபடும் வழக்கமிருப்பதாகவும் கூறினார்.

மந்திலேயே ஒரு கோயில் இருக்கிறது. பஞ்சபூதங்களை அவர்கள் பஞ்சபாண்டவர்களாக வணங்குகிறார்கள். கோயில் மட்டுமே தொதவர்களின் பழம்பெருமை வாய்ந்த அரை வட்டமான பிரம்பால் அமைந்த குடிலாகக் காட்சியளிக்கிறது. மந்தைச் சுற்றிலும் கறுத்த நிறத்தில் முன்னை ஊசியாக வளைந்த, கொண்டை வளத்தான் (Bullbull) குருவிகள் ஓயாமல் புல்லாங்குழலைப் போன்ற இசையை எழுப்பிக்கொண்டிருந்தன.

பெண்கள் தங்கள் தலை முடியைச் சுருள் சுருளாக விழுதுகள் போல முகத்தில் படர அலங்கரித்திருந்தனர். சந்தன நிறச் சால்வையில் சிகப்பு, கருப்பு, நீல வண்ணங்களில் பலவித தையல் வேலைப்பாடுகளைக் கையாலேயே நூற்றுக்கொண்டிருந்தனர். நாள் முழுக்க அவ்வேலையைச் சிரத்தையாக மேற்கொண்டிருந்தனர். அவர்கள் இந்த வேலையை வாரக்கணக்கில் மாதக் கணக்கில் செய்வார்கள். அந்தச் சால்வை களைத்தான் ஆண்களும் பெண்களும் மேலே போர்த்தியபடி திருமண நிகழ்வின் கொண்டாட்டங்களில் கலந்துகொள்கின்றனர்.

தொதவர்களின் திருமணம்

தொதவர்களின் திருமண முறை முற்றிலும் வேறுபட்ட பழக்க வழக்கங்களைக் கொண்டது. முதலில் மணமகனுக்கு ஏற்ற மணமகளைப் பிறக்கும்போதே சாஸ்திரங்கள் செய்து பேசி முடிக்கின்றனர். இருவரும் பருவமடைந்து குடும்பம் நடத்துவதற்கான பருவம் வரும்போது அவர்களைக் கூட அனுமதியளிக்கிறார்கள். பிறகு மணமகள் கர்ப்பிணியாகி ஐந்திலிருந்து ஏழாவது மாதத்தில் அமாவாசைக்கு இரண்டு மூன்று தினங்களுக்கு முன்னர், திருமண வைபவம் வளைகாப்பு நிகழ்வோடு சேர்ந்து நடக்கிறது.

ஒருவேளை மணமகள் கர்ப்பம் தரிக்காவிட்டாலும் அதே மணமகனோடு வாழலாம். அல்லது வேறொரு மணமகனைத் தேடலாம். அதற்கு இருவரின் சம்மதமுமே முதன்மையாகிறது. பெண் வீட்டிலிருந்து சீதனமாக ஐந்தாறு எருதுகள் கொடுப்பது முன்பு வழக்கத்தில் இருந்திருக்கிறது. இப்போது தங்க நகைகளுக்கு மாறிவிட்டார்கள். என்றாலும் இவ்வளவு வேண்டுமென்ற வற்புறுத்தல்கள் இல்லை.

திருமண விழா நடனம்

முதல் நாள் இரவு முழுக்க ஒருவருக்கொருவர் கரம் கோத்துச் சுற்றி நின்றுகொண்டு பாரம்பரிய பாடல்களை பாடியாடிக் களிக்கின்றனர். கால்கள் மாற்றி கைகள் மாற்றி ஆடிக்கொண்டே அவர்கள் பாடும் அவர்களின் பாடல் மலை முகடுகளில் எதிரொலித்துத் திரும்புவதாக இருந்தது. தொதவர்களின் சடங்குகளில் விஷேசமாக வெவ்வேறு தாவர இலைகள் பயன்படுத்தப்படுகின்றன. இரண்டடிக் கம்பை ஊன்றி கம்பளியாலான தலைப்பாகை கட்டி ஒரு இலையிலிருந்து பாலை ஊற்றியும், பொங்கல் வைத்தும் வழிபடுகின்றனர்.

மணமகன் பச்சை விளாறுகளை ஒடித்து வில் அம்பு செய்து மணப்பெண்ணுக்குத் தருகிறார். நிறைவாக மணமக்கள் வயதில் மூத்த ஆண்கள், பெண்களென அனைவரின் முன்னேயும் மண்டியிட்டுக் குனிகிறார்கள். அவர்கள் இரண்டு கால்களையும் மாறிமாறி மெதுவாகத் தூக்கி உச்சந்தலையில் வைத்து மந்திரங்கள் சொல்வதுபோல அவர்களின் மொழியால் ஆசிர்வதிக்கிறார்கள்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in