

கண்ணாடியை மென்மையான மனத்திற்கு ஒப்பாகச் சொல்கிறோம். கண்ணாடி வீட்டிற்குள் கல் எறியாதே என்னும் வார்த்தைப் பிரயோகம் அதிலிருந்துதான் உருவாகி இருக்கிறது. ஆனால், இந்த மென்மையான கண்ணாடி இன்று வானுயர் கட்டடங்களில் மிகப் பிரம்மாண்டமாகப் பயன்படுத்தப்படுகிறது. இதற்கு முதல் அட்சரம் போட்டது யார் தெரியுமா? பிலிப் ஜான்சன்.
கண்ணாடியால் கட்டப்படும் கட்டடங்களுக்கு இன்றும் ‘ஜான்சன் மாதிரி வீடுகள்’ என்று அழைக்கப்படுகின்றன.
வானுயரக் கட்டப்படும் கட்டடங்கள் பெரும்பாலும் கண்ணாடி ஆடை அணிந்து அழகு காட்டுகின்றன. இதற்கு வித்திட்டவர் பிலிப் ஜான்சன். முழுக்க முழுக்க கண்ணாடியால் வீடு கட்டிய முதல் மனிதர் இவர்.
நாகரிகம் உச்சத்தில் இருந்தாலும் கட்டுமானத் துறையில் கல்லும் மண்ணுமே ஆதிக்கம் செலுத்தின. அவற்றிலிருந்து மாறுபட்டுச் சிந்தித்துக் கண்ணாடியால் வீடு கட்டி, கட்டுமானத்துறை வரலாற்றின் புதிய அத்தியாயத்தைத் தொடங்கி வைத்தவர் ஜான்சன்.
முதல் கண்ணாடி வீட்டை அவர் 1949ஆம் ஆண்டு வடிவமைத்தார். பாரம்பரிய கட்டுமானப் பொருட்களை மட்டுமே மக்கள் நம்புகின்றனர். தொழில்நுட்பம் அசுர வேகத்தில் வளர்ந்து வந்தாலும் மாற்றங்களை நாம் அவ்வளவு எளிதில் ஏற்றுக்கொள்வதில்லை. மாற்று மணல் வந்து விட்டாலும், ஆற்று மணலை அள்ளுவதை நாம் நிறுத்தியபாடில்லை.
இம்மாதிரியான சூழல் இன்னும் இருக்க, கிட்டத்தட்ட இரு தலைமுறைகளுக்கு முன்பாக, கண்ணாடியால் வீட்டைக் கட்ட முடியும் எனக் கூறினால், அதை எத்தனை பேர் நம்பியிருப்பார்கள். ஆனால், அதைச் சாத்தியப்படுத்தினார் ஜான்சன். அவரின் முயற்சியால் இன்று வானாளவி நிற்கும் அனைத்துக் கட்டடங்களிலும் கண்ணாடிச் சுவர் பெரும் பங்கு வகிக்கிறது.
கண்ணாடிச் சுவர் பெரும்பாலும் சுற்றுலாத் தளங்களுக்கே ஏற்றவை என்ற கருத்து உண்டு. பல நாடுகளில் மலைப்பிரதேசங்களில், வீடுகள் மற்றும் விடுதிகள் கட்ட கண்ணாடிகள் பயன்படுத்தப்படுகின்றன. கண்ணாடி வீடு சகாப்தத்தைத் தொடங்கி வைத்தவரான பிலிப் ஜான்சன், 58 ஆண்டுகள் கண்ணாடி வீட்டில் வசித்தார்.
ஜான்சனின் முயற்சியால் அமெரிக்காவில் கண்ணாடி வீடுகள் பிரபலமடைந்தன.
கனமான கண்ணாடியால் கட்டப்பட்டாலும் கண்ணாடி வீடுகள் சேதமடைவதற்கான வாய்ப்புகள் அதிகம். இதனால் முழுக்க முழுக்க கண்ணாடியாலான வீடுகள் கட்டும் பழக்கம் குறைந்து, குறிப்பிட்ட அறைகளை மட்டும் கண்ணாடியில் கட்டும் வழக்கம் வந்தது.
சூழல் அக்கறையும் வேண்டும்
கண்ணாடி வீடுகளால், மணல், செங்கல், சிமென்ட், ஜல்லி, பெயின்ட் போன்ற இடுபொருட்களின் பயன்பாடு வெகுவாகக் குறைவதால், சூழலுக்கு உகந்த பொருளாகக் கண்ணாடி கருதப்படுகிறது. ஆனால், கண்ணாடிக் கட்டடங்களால் ஒரு அபாயமும் இருக்கிறது.
அமெரிக்காவில் ஆண்டு தோறும் லட்சக்கணக்கான பறவைகள் கட்டடங்களில்மோதி இறப்பதாக வரும் புள்ளி விவரங்கள் அதிர்ச்சியளிக்கின்றன. இதில், கண்ணாடிச் சுவர்களே கணிசமான பங்கு வகிக்கின்றன.
பெரிய கட்டடங்களில் பதிக்கப்படும் கண்ணாடிகளில் பிரதிபலிக்கும் மரங்கள், வானம் போன்றவற்றை நிஜமென்று கருதும் பறவைகள், தங்கள் வேகத்தைக் குறைக்காமல் அதை நோக்கி வேகமாகப் பறக்கின்றன. கண்ணாடிக்குப் பின் உள்ள அறைகளுக்குள் தெரிகின்ற அலங்கார செடி, கொடிகளில் அமர அவை, பயணத்தைத் தொடர்கின்றன. இதுதான் பறவைகள், கட்டடங்களில் மோதி உயிரிழக்க முக்கியக் காரணம்.
கண்ணாடி ஒரு திடப் பொருள் என்பது தெளிவாகத் தெரியும்படி, குறிப்பிட்ட அளவுகளில் “ஸ்டிக்கர்'களை ஒட்டுவதன் மூலம் இந்த உயிரிழப்பை வெகுவாகக் குறைக்கலாம். இரவில் இடம் பெயரும் பறவைகளுக்கு, எதிரே இருப்பது கண்ணாடிச் சுவர் எனத் தெரிவதற்கான பாதுகாப்பு ஏற்பாடுகளைச் செய்ய வேண்டும்.
உயரமான கட்டடங்களின் ஜன்னல்களில், வலைகள் பொருத்தினால், கண்ணாடிகளில் தெரியும் வானத்தின் பிரதிபலிப்பைப் பார்த்து அவைகள் குழம்பும் வாய்ப்புகள் குறையும். இது போன்ற நடவடிக்கைகளால் பறவைகளின் இறப்பை 80 சதவிதம் வரை குறைத்து, ஆண்டு தோறும் லட்சக் கணக்கான பறவைகளைக் காப்பாற்றலாம். இந்தியாவில் இது போன்ற அபாயம் அதிகமில்லை என்ற போதும், முன்கூட்டியே எச்சரிக்கை உணர்வுடன் செயல்பட்டால் தேவையற்ற இழப்புகளைத் தடுக்கலாம்.
இவற்றையெல்லாம் மீறிக் இன்று கண்ணாடிக் கட்டடங்கள் பெரிய வணிக வளாகங்கள், கார்ப்பரேட் நிறுவனங்கள் போன்ற கட்டங்களுக்கு அழகையும் கம்பீரத்தையும் சேர்க்கின்றன.