காதல் வழிச் சாலை 24: கொஞ்சம் நிலவு... கொஞ்சம் நெருப்பு...

காதல் வழிச் சாலை 24: கொஞ்சம் நிலவு... கொஞ்சம் நெருப்பு...
Updated on
3 min read

காதல் என்பது அழகான உணர்வு என்றுதான் பலரும் அனுமானித்துவருகிறோம். ஆனால் அதை உணர்வு என்று சொல்வதைவிட உந்து சக்தி என்று சொல்வது பொருத்தமாக இருக்கும் என்கின்றனர் உளவியலாளர்கள். காதல் வயப்படும்போது மூளையில் சுரக்கும் டோபமைன் (Dopamine) என்னும் வேதிப்பொருள் மகிழ்ச்சி, புத்துணர்வு, உத்வேகம், புதியதொரு சக்தி போன்றவற்றைக் கொடுத்து நம்மை ஊக்குவிக்கும். காதல் என்பது பரிணாம வளர்ச்சிக்கேற்ப நம்மைத் தகவமைத்துக்கொள்வதற்கான இயற்கையின் சூத்திரம் என்றும் சொல்லலாம்.

பசி, தூக்கம் போன்று அடிப்படையான வேட்கைதான் காதல். காதல் கைகூடினால் உலகமே நம் பின்னால் வருவதைப் போன்ற மகிழ்ச்சியும், அது கூடாவிட்டால் உலகின் அனைத்துத் துயரங்களும் நம் தலை மீது வந்து உட்கார்ந்துகொண்டதைப் போன்ற சோகமும் நம்மைத் தாக்கிவிடும்.

திரும்பக் கிடைக்காத அன்பு

காதல் தோல்வியுடன் வேறெந்தத் துயரத்தையும் ஒப்பிட்டுச் சொல்வது கடினம். நாம் காதலிக்கிறோம், ஆனால் எதிர்த் தரப்பில் நம் மீது காதல் இல்லை. இருவருமே காதலிக்கிறோம், ஆனால் காலத்தின் கோலத்தில் காதலில் மண் விழுந்து பிரிந்துவிடுகிறோம். இந்த இரண்டுமே காதல் தோல்விதான். திரும்ப நமக்குக் கிடைக்காத இந்தக் காதலை Unrequited love என்று சொல்வார்கள்.

நமக்கே தெரியாமல் நமக்குள் இருக்கும் வெற்றிடத்தை நிரப்பிக்கொள்வதற்காக வெளியே ஒருவரைத் தேடுகிறோம். நமக்கு மிகவும் பிடித்த குணாதிசயங்கள், பண்புகள் கொண்டவர்களைக் காணும்போது காதலில் விழுகிறோம். பெற்றோரிடமும் மற்றோரிடமும் கிடைக்காத ஒன்று அவரிடத்தில் இருப்பதாக நினைத்து மனதைப் பறிகொடுக்கிறோம். ஆனால் அந்த அன்பு திரும்பக் கிடைக்காதபோது கடும் ஏமாற்றமே மிஞ்சுகிறது.

விலகினாலும் விலகாத நேசம்

காதல் நிராகரிக்கப்படும் போது பல கட்டங்களை நாம் தாண்ட வேண்டியிருக்கிறது. முதலில் எதிர்ப்பும் மறுப்பும் (Protest). “இல்லை… எப்படி அவர் என்னை நிராகரிக்கலாம்? என் உலகமே அவன்தான் என்றிருக்கும் போது எப்படி என்னைப் புரிந்துகொள்ளாமல் போகலாம்?” - இப்படியான புலம்பல்கள்தான் முதலில் இருக்கும். நிஜம் இதுதான் என்று புரிந்துகொண்டு அந்த நிராகரிப்பை ஏற்றுக்கொள்வதெல்லாம் அடுத்த கட்டம். இதைவிட வினோதம் என்ன தெரியுமா? அவர் நம்மை விட்டு விலகிச் செல்லச் செல்ல அவர் மீதான காதலும் பிடிப்பும் அதிகரித்துக்கொண்டே போகும்.

கோபம் அதிகரிக்கிற அளவுக்குக் காதலும் அதிகரிக்கும். இன்னும் என்னவெல்லாம் செய்து அவரைக் கவரலாம், ஏதேனும் அதிசயமாக நடந்து அவர் நம்மைத் திரும்பிப் பார்க்க மாட்டாரா என்ற பரிதவிப்பு கூடிக்கொண்டே போகும். இதுதான் காதலின் விந்தை! இதை frustration attraction என்று சொல்கிறார்கள். அதாவது நிராகரிப்பினூடே வரும் ஈர்ப்புப் பிணைப்பு என்கிறார்கள்.

நாடகமன்றோ நடக்குது

எந்தவொரு உறவும் துண்டிக்கப்படும்போது நம் மனம் கிடந்து அடித்துக்கொள்ளும். யாராவது உதவிக்கு வாருங்கள், எனக்கு நியாயம் சொல்லுங்கள் என்பதற்காக இயற்கை நமக்கு அளித்துள்ள தகவமைப்பு முறை இது. இதைப் புரிந்துகொண்டால் காதல் தோல்வியின்போது நாம் போரிடுவது ஏன் என்பது உங்களுக்குப் புரியும். டோபமைன் மற்றும் நார்ஃபினெஃப்ரின் (norepinephrine) ஆகிய இரண்டு வேதிப்பொருட்களும் நம் மூளையில் இந்த நேரத்தில் அதிகரித்துவிடும். நடக்கக்கூடிய அசம்பாவிதத்தைத் தடுத்து நிறுத்த வேண்டும் என மூளை சுறுசுறுப்படைந்துவிடுகிறது. எதையாவது செய்து நம் காதலைக் காப்பாற்றிக்கொள்ள வேண்டும் என்று ஒரு போர்வீரனைப் போல மனம் தயாராகிறது.

காதலில் விழும் ஆரம்பக் கட்டத்தில் நம் உணர்வு ஜாலங்களுக்குச் சூத்திரதாரி இந்த டோபமைன்தான் என்பதை நாம் ஏற்கெனவே குறிப்பிட்டிருக்கிறோம். காதலுக்குக் காரணமான அதே வேதிப் பொருட்கள்தான் காதல் நிராகரிக்கப்பட்டு அதை நாம் மறுக்கும் போதும் அதே அளவில் மூளையில் சுரக்கின்றன. காதலில் நமக்கான நியாயங்களைச் சொல்லிப் புலம்பித் தவிப்போம். ஆனால் அவர் என்ன செய்தாலும் அவர் மீது நமக்கு வெறுப்பு வராமல், காதல் வேகம் முன்பைவிட அதிகரிக்கிறதே என்று தவித்திருக்கி றீர்களா? காரணம் இதுதான். இந்த வேதிப்பொருட்கள் இரண்டு சூழலிலும் பிரவாகமாகப் பொங்கிவருவதால்தான் நமக்கு அப்படி ஏற்படுகிறது. அழுது கொண்டே சிரிப்பதைப் போல, வெயில் அடிக்கும்போதே மழையும் பெய்வதைப் போல இது நம் மன வானில் நடக்கும் வேதியியல் நாடகம்.

என்றென்றும் காதல்

ஒருதலைக் காதலால் தவிக்கும் போதும் காதலரால் கைவிடப்படும் போதும் கடும் ஆத்திரத்துக்கு (abandonment rage) உள்ளாகிறோம். வெறித்தனமான பற்றுதலாக இருந்த ஒன்று கடுமையான கோபமாக மாறுகிறது. இதற்கும் காரணம் நமது மூளையில் இருக்கும் பிணைப்புகள் (network). கடும் பசி நேரத்தில் சுவையான உணவு கிடைத்தால் எப்படி உணர்கிறோம்? கஷ்டப்பட்டுச் செய்த ஒரு வேலைக்குப் பாராட்டும் பதவி உயர்வும் கிடைத்தால் எப்படி மகிழ்வோம்? இவற்றுக்குக் காரணமான ‘ரிவார்டு மையங்கள்’ மூளையின் Prefrontal cortex பகுதியில் இயங்குகின்றன.

நிராகரிப்படுவதால் வரும் ஆத்திரத்துக்குக் காரணமான நரம்புப் பிணைப்புகளும் மேலே சொன்ன ரிவார்டு சென்டர்களுடன் நெருங்கிய தொடர்பில் இருப்பவை. எனவேதான் நமக்கு மகிழ்வளித்த ஒரு பொருள் மறுக்கப்படும்போது ஆத்திரத்தின் உச்சத்துக்குச் செல்கிறோம்.

பூனைக்குப் பால் கொடுக்கிறோம். அது வெகுமதி (reward) எனப்படும். அதே பாலை பூனை சுவைத்துக் குடிக்கும்போது சடாரென்று பிடுங்கிவிடுகிறோம். உடனே அந்த இடத்தை விட்டு வெறியேறிவிடும் பூனை சமயத்தில் மேலே பாய்ந்து பிராண்டிவிடும் என்பது நாம் அறியாததல்ல. அதைப் போலத்தான் காதல் நிராகரிக்கப்படும்போது எழும் ஆத்திரத்துக்கும் மூளையின் செயல்பாடுகளே காரணம். ஆனால் உண்மையாக நாம் காதலித்திருக்கும் பட்சத்தில் எவ்வளவு ஆத்திரம் வந்தாலும் அந்தக் காதல் மட்டும் அழியாது.

அளவில் குறையலாம். அலங்காரத்தில் குறையலாம். ஆழம்கூடக் குறைந்து போகலாம். ஆனால் காதல் என்ற உணர்வு அழிந்து போகாது. பிரதிபலனை எதிர்பார்த்தும், ‘நான் கொடுப்பதை நீயும் கொடுக்க வேண்டும்’ என்ற எதிர்பார்ப்பிலும் வருவது ஒரு வகையில் சுயநலக் காதலே. அப்போது அந்தக் காதல் மறுக்கப்படும் போது வரும் ஆத்திரம்தான் அபாயகரமானது. பல பயங்கரங்களை ஏற்படுத்தக்கூடியது. நாம் செய்தித்தாள்களில் அடிக்கடி பார்க்கும் துர்சம்பவங்களுக்குக் காரணமானது.

எது தூய்மையான காதல்?

ஆனால் காதலுக்கான இலக்கணங் களுடன் மனதின் அடியாழத்திலிருந்து பிரதிபலன் பார்க்காமல் வரும் காதல் அப்படியானதல்ல. அது மறுதலிக்கப்பட்டால் நமக்குக் கோபம் வருமே தவிர கொலை வெறி வராது. ஆத்திரம் வரும், ஆனால் கண்மூடித்தனமாகத் தாக்கி உயிர் பறிக்கும் அளவுக்கு வன்மம் இருக்காது. அதீத வெறுப்பும் மனிதத்தன்மையற்ற சிந்தனையும் இருக்கும் இடத்தில் காதல் என்ற வார்த்தைக்கே இடமில்லை!

மனச்சோர்வினால் பாதிக்கப்பட்டிருந்த ஒரு கல்லூரி மாணவரிடம் பேசிக்கொண்டிருந்தேன். “காதலிலேயே தூய்மையானது எது?” என்று கேட்டார். “நீங்களே சொல்லுங்கள்” என்றேன். “ஒருதலைக் காதல்தான் மிகத் தூய்மையானது. ஏன் தெரியுமா? திரும்பக் கிடைக்காது என்று நன்றாகத் தெரியும். எந்தப் பலனும் இல்லை என்று நிச்சயமாகத் தெரியும். ஆனாலும் தொடர்ந்து காதலிக்கிறோம். சுய நலன் தொலைந்த அந்தக் காதல் நிச்சயம் புனிதமானது, பரிசுத்தமானது.

நான் அவளை அவளுக்காகவே காதலித்தேன். என்றென்றும் அவள் என் காதலிதான். கோயிலுக்குப் போகிறீர்கள். உங்கள் வேண்டுகோள் அனைத்தையும் கடவுள் நிறைவேற்றுகிறாரா? அட்லீஸ்ட் உங்களோடு உட்கார்ந்து குறைகளைக் கேட்கிறாரா? எதுவும் நடப்பதில்லை. ஆனாலும் கோயிலுக்குப் போகாமல் இருப்பதில்லையே நாம். அதுபோலத்தான் ஒருதலைக் காதலும். திரும்பக் கிடைக்காத இடத்திலும் எதிர்பார்ப்புகளற்று அன்பு செலுத்துவது தெய்வீகமானது என்றால் ஒருதலைக் காதலும் புனிதமானதுதானே!” என்றார் அந்த இளைஞர்.

நான் பேச்சிழந்து நின்றேன்.

எல்லாமே பேசலாம்!

ஹாய் ஃப்ரெண்ட்ஸ், மத்தவங்க கிட்டே பகிர்ந்துக்க முடியாமல் உங்க மனசுக்குள்ளேயும் ஆயிரம் கேள்விகள் அலையடிச்சுக்கிட்டு இருக்கலாம். அதை எல்லாம் எழுதி அனுப்பினால் மனநல மருத்துவரின் ஆலோசனையும் வழிகாட்டலும் கிடைக்கும்.

(பயணிப்போம்)
கட்டுரையாளர், மனநல மருத்துவர்.
தொடர்புக்கு: drmohanv18@gmail.com

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in