

அது மதங்களைக் கடந்த காதல். அவர்கள் இருவரும் கம்ப்யூட்டர் இன்ஜினீயர்கள். கைநிறைய சம்பளம். பெண் இந்து. ஆண் வேறு மதம். கிட்டத்தட்ட ஆறு ஆண்டுகளாக இருவரும் மிகத்தீவிரமாகக் காதலிப்பதாகக் குறிப்பிட்டிருந்தார் அந்தப் பெண்.
“முதலில் நான் சம்மதிக்கவில்லை. நன்றாகப் பழகிய பிறகுதான் அவரை ஏற்றுக்கொண்டேன். வேற்று மதம் என்பதால் என் வீட்டில் ஆரம்பத்திலிருந்தே கடும் எதிர்ப்பு. அவர் தனியாக வந்து என் வீட்டில் பேசினார். பிறகு அவருடைய பெற்றோரும் வந்து பெண் கேட்டுப் பார்த்தனர். என் பெற்றோர் கடுமையாக மறுத்ததோடு அவரது மத நம்பிக்கைகளையும் கொச்சைப்படுத்தி அனுப்பிவிட்டனர். ‘நீ அவனுடன் போனால் நாங்கள் செத்துவிடுவோம்’ என்று இருவரும் தூக்குக் கயிறுடன் என் முன் உட்கார்ந்துகொண்டனர். அவர்களை மீறவும் மனம் வரவில்லை. ஆண்டுக்கணக்கில் எனக்காகக் காத்திருக்கும் என் காதலனையும் கைப்பிடிக்க முடியவில்லை. அவருக்கு வயதாவதால் வேறு பெண்ணைப் பார்க்கலாம் என்கிறார்களாம் அவரது வீட்டில். மனசே நொறுங்கிவிட்டது சார். ஏன்தான் அவனைப் பார்த்தோமோ என்று குழம்பித் தவிக்கிறேன்” என்று விரிகிறது அந்தக் கடிதம்.
தன் பிரச்சினைக்கு இரண்டு வழிகள்தான் தீர்வு என்பதையும் அவரே குறிப்பிடுகிறார். “ஒன்று பெற்றோர் செத்தாலும் பரவாயில்லை என்று காதலனைக் கரம்பிடிப்பது. காதல் எக்கேடு கெட்டாலும் பரவாயில்லை என்று என் பெற்றோர் பார்க்கும் மாப்பிள்ளையைக் கல்யாணம் பண்ணிக்கொண்டு போலியான வாழ்க்கை வாழ்வது இரண்டாவது வழி” என்று முடிக்கிறார் விரக்தியுடன்.
இது போன்ற கதைகளைப் பார்க்கும் போது நடைமுறை நிஜங்களின் தாக்கம் எவ்வளவு பெரியது என்பது புரியும். இருவரும் நன்கு படித்திருக்கிறார்கள். ஐந்து இலக்கத்தில் சம்பளம். வேலைக்குப் பின் மாலை என்று பேசுகிறோம். ஆனால் இங்கே மதம் குறுக்கே நிற்கிறது. உயிரை விட்டு விடுவோம் என்ற பெற்றோரின் அதிரடியை எப்படித்தான் சமாளிப்பது? ஒவ்வொருவரின் கோணத்திலிருந்தும் இந்தப் பிரச்சினையைப் பார்ப்போம்.
காதலன்
ஆளாளுக்குக் காதலிக்கிறேன் என்று சொல்லிவிட்டு உப்புப் பெறாத காரணங்களைச் சொல்லி ஏமாற்றிவிட்டுச் செல்கிறார்கள். காதலைச் சொல்லும்போதே திருமணம் எப்போது என்று நான் கேட்டேன். அவர் வீட்டுக்கு நான் போய் பேசி அவமானப்பட்ட பின்பும் நல்லது நடக்காதா என்றுதான் என் பெற்றோரையும் அனுப்பிப் பேசினேன். அவர்களுக்கும் அதே அவமானம். வேற்று மதத்தைச் சேர்ந்தவன் என்பதற்காக அவர்கள் இப்படியா என்னை வெறுத்து ஒதுக்குவது? எவ்வளவு காலம்தான் நானும் காத்திருப்பது?
காதலியின் பெற்றோர்
படிப்பு முடிந்து வேலைக்குச் செல்லும்வரை நாங்கள் கிழித்த கோட்டைத் தாண்ட மாட்டாள் எங்கள் பெண். இன்று ஒருவனைப் பிடித்துப் போனதும் சாதி மதங்களோடு சேர்த்து எங்களையும் தூக்கிப் போடத் துணிந்து விட்டாளே. வெவ்வேறு மதங்களைச் சார்ந்த இருவரும் மணந்துகொண்டால் எங்கள் சாதி சனத்தை எப்படி எதிர்கொள்வது? இவர்களுக்குப் பிறக்கும் குழந்தையை எந்த மதத்தில் சேர்ப்பார்கள்? இவ்வளவு நாள் கட்டிக்காத்த குடும்ப கவுரவம் என்ன ஆவது? படித்து வேலையில் இருப்பதால் யாரை வேண்டுமானாலும் திருமணம் செய்யலாம் என்ற திமிரில் பேசுகிறாளா? எல்லாத் தேவைகளுக்கும் பெற்றோரை அணுகியவள் மாப்பிள்ளைத் தேவைக்கு மட்டும் தானே முடிவெடுப்பதை நாங்கள் எப்படி ஏற்பது?
காதலி
பெற்றோர் சொல்வதில் தவறில்லை. அவர்களை நான் மிகவும் மதிக்கிறேன். ஆனால் என்னவர் எனக்காக ஆறு வருடங்களாகக் காத்திருக்கிறார். ஒரு முழுமையான வாழ்க்கைத் திட்டத்துடன்தான் என்னைக் காதலிக்கவே ஆரம்பித்தார். அவருடன் இருந்தால் என் வாழ்க்கை முழுமையடையும் என்று நம்புகிறேன். பெற்றோரின் பாசத்தை ஒரு தட்டிலும் அவரது காதலை இன்னொரு தட்டிலும் வைத்துப் பார்க்கிறேன். இரண்டுமே எனக்கு சமமாகத்தான் தெரிகின்றன. ஆனால் இப்பொழுது நான் அனுபவிக்கும் மன உளைச்சலைப் பார்த்தால் காதலிப்பதே பெரும் தவறாக இருக்குமோ என்று குழம்புகிறேன். அந்தப் புனிதமான உணர்வின் மறுபக்கம் இவ்வளவு சிரமமானதா?
இதுவும் கடந்து போகும்
இப்படியான சூழலில் இருக்கின்றனர் அவர்கள் அனைவரும். பெற்றோர் பார்த்துச் செய்து வைக்கும் திருமணங்கள் அனைத்தும் நூறு சதவீதம் வெற்றியடையும் என்பதை உறுதியாகச் சொல்ல முடியுமா? இந்தப் பையன் எங்கள் மகளை வைத்துக் காப்பாற்ற மாட்டான் என்று பெற்றோர் நினைப்பது எதிர்மறைச் சிந்தனையே.
இன்றைக்கு இருக்கும் சமூகச் சூழல் இன்னும் பத்தாண்டுகளுக்குப் பிறகு அப்படியே இருக்கப் போவதில்லை. மதங்களைத் தாண்டிய காதல் திருமணங்களைச் சொந்த பந்தங்களே முன்னின்று நடத்துவதையும் இன்று பார்க்கிறோம். நேற்று எவையெல்லாம் முடியாது என்று நினைத்தோமோ இன்று அவையெல்லாம் சாத்தியம் என்பதை உணர்கிறோம். இன்றைக்கு எவையெல்லாம் அசாத்தியம் என்று நினைக்கிறோமோ வருங்காலத்தில் அவையெல்லாம் சாதாரணமாகச் சாதிக்கப்பட்டுவிடும் என்பது நம் அனைவருக்குமே தெரிகிறது.
மதம் தடையல்ல
இரு வேறு மதங்களைச் சார்ந்தவர்களுக்குப் பிறக்கும் குழந்தை மூன்றாவது மதத்தைச் சார்ந்த ஒருவரைக் காதல் மணம் முடிப்பதாக வைத்துக்கொள்வோம். பிரச்சினை முடிந்தது அல்லவா? கலப்புத் திருமணம் நடந்தால் நாங்கள் தற்கொலை செய்துகொள்வோம் என்று பெற்றோர் மிரட்டுவதையெல்லாம் ஏற்றுக்கொள்ள முடியாதது.
மனிதனை நெறிப்படுத்தி வாழ்க்கையில் ஒழுங்கைக் கொண்டுவரக் கண்டு பிடிக்கப்பட்டவையே மதம் முதலான சங்கதிகள். கடைசியில் அவன் வாழ்வையே சீர்குலைத்து உடல் மற்றும் மன நலனைப் பாதிப்புக்கு உள்ளாக்குவதான விஷயங்களுக்கு அவை வழிவகுத்துவிட கூடாது.
கண்ணை விற்று ஓவியமா?
சாதி, மதங்களின் பெயரால் நடக்கும் ஆணவக் கொலைகள் ஒரு பக்கம்… கலப்புத் திருமணங்களை ஊக்குவித்துச் சலுகையும் வழங்கும் அரசாங்கம் இன்னொரு பக்கம். காதலிப்பவர்கள் பாவம், என்னதான் செய்வார்கள்? கண்ணை விற்று ஓவியம் வாங்குவதைப் போலத்தான் உண்மைக் காதலை விற்றுவிட்டுப் போலி வாழ்க்கையை ஏற்றுக்கொள்வதும்.
இவர்களைப் போல நன்றாகப் படித்து, கைநிறையச் சம்பாதிக்கும் முதிர்ச்சியான காதலர்களுக்கே திருமணம் செய்யப் பெற்றோர்கள் சம்மதிக்கவில்லை என்றால் யார்தான் காதல் திருமணம் செய்ய முடியும்? ஆறு ஆண்டுகளுக்கும் மேலாக நேசித்துவருவதாகச் சொல்கிறார்கள். வெறும் ஈர்ப்பு (Infatuation) என்று இதை ஒதுக்கிவிடவும் முடியாது. தங்களுக்குள் பிரச்சினை வந்தால் எப்படிச் சமாளிப்பது என்பதை இந்நேரம் அவர்கள் இருவரும் கற்றிருப்பார்கள்.
வழிவிடுங்கள் பெற்றோரே
ஊர் உலகம் என்ன பேசும் என்று பயப்படும் பெற்றோர்களே… இன்றைய சம்பவம் நாளைய மறதிப் பட்டியலில் சேர்ந்துவிடும். எவ்வளவோ பெரிய வரலாற்றுச் சம்பவங்களைக்கூட நம் சமூகம் பத்து, பதினைந்து நாட்களில் அநாயாசமாகக் கடந்து சென்றுவிடும். அதனால் அது உங்கள் வீட்டுக் காதல் திருமணத்தை ஒன்பதாண்டுகளுக்கெல்லாம் பேசிக்கொண்டிருக்காது. அப்படியே பேசினாலும் அதில் நமக்கு எதுவும் பாதிப்பில்லை என்று நினைப்பதுதான் உத்தமம். நம் வாழ்க்கை நம் கையில். எல்லோருக்கும் எல்லாச் சமயத்திலும் நல்லவர்களாக நம்மால் இருக்க முடியாது. ஊருக்காக, உலகத்துக்காக என்று சொல்லி நமக்கு நியாயமில்லாத ஒப்புதல் இல்லாத காரியங்களைச் செய்துகொண்டே இருந்தால் இறுதியில் மன நோயாளியாகி விடுவோம்.
“காதலர்கள் வாழ்வதில்லை கல்லறை சொல்கிறது.
காதல் மட்டும் சாவதில்லை காவியம் சொல்கிறது”
என்ற பாடல் வரிகளை நினைத்துப் பாருங்கள். பிள்ளைகளின் காதலில் உண்மை இருந்தால் சற்றேனும் மனது வையுங்கள் பெற்றோர்களே!
எல்லாமே பேசலாம்! ஹாய் ஃப்ரெண்ட்ஸ், மத்தவங்க கிட்டே பகிர்ந்துக்க முடியாமல் உங்க மனசுக்குள்ளேயும் ஆயிரம் கேள்விகள் அலையடிச்சுக்கிட்டு இருக்கலாம். அதை எல்லாம் எழுதி அனுப்பினால் மனநல மருத்துவரின் ஆலோசனையும் வழிகாட்டலும் கிடைக்கும். |
(பயணிப்போம்)
கட்டுரையாளர், மனநல மருத்துவர்.
தொடர்புக்கு: drmohanv18@gmail.com