

ஒரு ஆண்டில் 32 இடங்களில், கொள்ளைகளில் ஈடுபட்டு ஒண்ணே கால் கோடி ரூபாய் திருடியுள்ளார் ஒருவர். தன் குழந்தைகளுக்கு உணவளிப்பதற்காகத் திருடியதாகக் கூறுகிறார் அவர். அந்தக் குழந்தைகள் அவர் பிரியமாக வளர்த்து வந்த 121 பூனைகள்.
ஜப்பானின் இஷ்மி நகரத்தில் வசிப்பவர் மமரூ டெமிஸ். 48 வயதான இவருக்குப் பூனைகள் மீது அலாதிப் பிரியம். தன் வீட்டில் சில பூனைகளை வளர்த்து வந்துள்ளார். அவை இல்லாமல் வேர்ஹவுஸ் என வெவ்வேறு இடங்களில் 121 பூனைகளை வளர்த்துவந்துள்ளார். அந்தப் பூனைகளை வெறுமனே நேசித்தார் எனச் சொல்ல முடியாது. அவற்றிற்குச் சிறப்பான வாழ்க்கை ஏற்படுத்தித் தர வேண்டும் என்பதை லட்சியமாகக் கொண்டிருந்துள்ளார்.
மீதமான உணவுகளைப் பூனைகளுக்கு கொடுக்க அவருக்கு மனமில்லை. அதுபோல அவை உணவுக்காக அலைவதும் அவருக்குப் பிடிக்கவில்லை. தன்னிடம் உள்ள பணத்தையெல்லாம் கொண்டு அவற்றுக்கு சுத்தமான மீன், உயர்தர வகையில் தயாரிக்கப்பட்ட பண்டங்களை மட்டுமே வாங்கிக் கொடுத்துள்ளார். அதற்காக அவருக்கு நாள் ஒன்றுக்கு 270 அமெரிக்க டாலர் செலவு ஆகியிருக்கிறது. இந்திய ரூபாய்க்கு கிட்டத்தட்ட 17 ஆயிரம் ரூபாய் செலவாகியிருக்கிறது.
நாட்பட நாட்பட மமரூவால் செலவைச் சமாளிக்க முடியவில்லை. ஆனால் அவருடைய பூனைக் குழந்தைகளுக்கு இதுவெல்லாம் தெரியாதல்லவா? அவை பசியைத் தாங்கிக்கொண்டாலும் பூனைகளைப் பட்டினி போடுவது இவரால் தாங்கிக்கொள்ள முடியாததாக இருந்தது. வேறு வழியில்லாமல் பூனைகளின் வாழ்க்கைக்காகத் திருடத் துணிந்தார். இதுவரை இஷ்மி நகரத்தில் மட்டும் சிறிய, பெரிய என 32 கொள்ளைச் சம்பவங்களில் இவர் சந்தேகிக்கப்பட்டுள்ளார். ஒரு வருடத்தில் மொத்தம் இந்திய ரூபாயில் ஒண்ணேகால் கோடி ரூபாயைத் திருடியுள்ளார். தற்போது இஷ்மி நகரக் காவல் துறையிடம் அவர் பிடிபட்டுள்ளார். தன் கன்னத்தைப் பூனைகளின் மீது உரசும் தருணத்தை உலகிலேயே சந்தோஷமான தருணமாக உணர்கிறேன் எனக் காவல் துறையிடம் கூறியிருக்கிறார்.
இதுபோன்ற ஒரு தருணத்திற்காகத்தான் நமது இந்த வாழ்க்கை காத்துக்கொண்டிருக்கிறது.