

சென்னை லலித் கலா அகாடமியில் ‘போட்டோகிராஃபிக் சொஸைட்டி ஆஃப் மெட்ராஸ்’ (பிஎஸ்எம்) ‘கன்ஃபுளுயன்ஸ் 2016’ (Confluence) என்னும் தலைப்பில் ஒளிப்படக் காட்சிக்கு ஏற்பாடு செய்திருக்கிறது.
மே 31-ம் தேதி தொடங்கியிருக்கும் இந்தக் காட்சியில் எண்பது ஒளிப்படக் கலைஞர்களின் முந்நூறுக்கும் அதிகமான ஒளிப்படங்கள் பல்வேறு தலைப்புகளில் இடம்பெற்றிருக்கின்றன.
இந்த ஒளிப்படக் காட்சியில் முப்பது சதவீதம் இளம் ஒளிப்படக் கலைஞர்கள் கலந்துகொண்டிருப்பது கூடுதல் சிறப்பை அளித்திருப்பதாகத் தெரிவிக்கின்றனர் பி.எஸ்.எம். ஒருங்கிணைப்பாளர்கள்.
இயற்கையின் வண்ணங்கள், மனித உணர்வுகள் நிகழ்த்தும் அற்புதங்கள், காட்டுயிர்களின் கம்பீரம், காலத்தின் மாயஜாலங்கள், நகர வாழ்க்கை, விழா கொண்டாட்டங்கள் போன்றவற்றை விளக்கும் ஒளிப்படங்கள் இந்தக் காட்சியில் வைக்கப்பட்டிருக்கின்றன.
“இந்த ஒளிப்படக் காட்சியில் என்னுடைய ஒளிப்படங்கள் இடம்பெற்றிருப்பது பெருமையாக இருக்கிறது. ஒளிப் படங்கள் எடுப்பது என்பது சிறு வயதிலிருந்தே எனக்குப் பிடித்த பொழுதுபோக்காக இருக்கிறது.
தற்போது ‘சிஏ’ படித்துக் கொண்டிருப்பதால் ‘போட்டோகிராஃபி’ என்னுடைய ‘ஸ்ட்ரெஸ் பஸ்ட’ராக மாறியிருக்கிறது” என்கிறார் பதினெட்டு வயது வி. ஆதித்யா.
பிஎஸ்எம் 2014-ல் நடத்திய ‘ஷூட் மெட்ராஸ்’ ஒளிப்படப் போட்டி சென்னையின் இளம் ஒளிப்படக் கலைஞர்களை பெரிய அளவில் ஊக்கப் படுத்தியது. அதன் ஒரு தொடர்ச்சியாகவே இந்த ஒளிப்படக் காட்சிக்கு ஏற்பாடுசெய்திருக்கிறது பிஎஸ்எம்.
“கடந்த மூன்று ஆண்டுகளாக ஒளிப்படங்கள் எடுக்கிறேன். ‘ஷூட்மெட்ராஸ்’ போட்டியில் கலந்துகொண்டு வெற்றி பெற்றது பெரிய நம்பிக்கையை எனக்குக் கொடுத்தது.
அதற்குப் பிறகுதான் தீவிரமாக ஒளிப்படங்கள் எடுக்க ஆரம்பித்தேன். பயணம், நடன உணர்வுகள், இசை நிகழ்ச்சிகள் போன்றவைதான் என்னுடைய ‘சாய்ஸ்’.
நான் மகிழ்ச்சியாக இருக்க விரும்பினால் ஒளிப்படங்கள் எடுக்கக் கிளம்பிவிடுவேன்” என்கிறார் ஸ்மிதா எஸ். ஜோஷி. இவர் தற்போது எம்ஓபி வைஷ்ணவ் கல்லூரியில் முதுகலை ‘மீடியா மேனேஜ்மெண்ட்’ படித்துக்கொண்டிருக்கிறார்.
இந்த ஒளிப்படக் காட்சி, இளம் ஒளிப்படக் கலைஞர்களையும் ஒளிப்படத் துறையின் ஜாம்பவான்களையும் இணைப்பதற்கு ஒரு வாய்ப்பை உருவாக்கிக்கொடுத்திருக்கிறது.
“என்னுடைய ஒளிப்படங்கள் இந்தக் காட்சியில் இடம்பெற்றிருப்பது பெரிய அங்கீகாரத்தைக் கொடுத்திருக்கிறது. அனுபவம் வாய்ந்த சீனியர்களின் தொழில்நுட்பக் கேள்விகள், சாதாரண மக்களின் கேள்விகள் என இரண்டு விதமான கேள்விகளையும் இந்தக் காட்சியில் எதிர்கொள்கிறேன். இது ஒளிப்படக் கலை பற்றிய புதிய புரிதலை உருவாக்குகிறது” என்கிறார் ஆர். நீதேஷ் குமார்.
சென்னை லலித் கலா அகாடமியில் இந்த ஒளிப்படக் காட்சி ஜூலை 5-ம் தேதி வரை நடைபெறுகிறது.
மேலும் தகவல்களுக்கு: >https://www.facebook.com/events/982600335188909/