பட்டா எப்போது தேவை?

பட்டா எப்போது தேவை?
Updated on
1 min read

வீடு வாங்கும்பொழுதே பட்டா தேவையா? அல்லது பின்னர் வாங்கிக் கொள்ளலாமா? பட்டா எப்படிப் பதிவு செய்யப்படுகிறது என்று நம்மில் பல கேள்விகள் எழுகின்றன என்பது கண்கூடு. இதில் உள்ள நடைமுறை சிக்கல்களைத் தீர்த்துக் கொள்ளும் வழிமுறைகளை நாம் முதலில் அறிந்து கொள்ள வேண்டும்.

பட்டா, சிட்டா, அடங்கல் அனைத்துமே வீடு, நிலம் ஆகியவற்றை வாங்கும்பொழுது சரிபார்க்க வேண்டிய ஒன்றுதான். பட்டா என்பது ஒரு இடத்தை வாங்கி இருக்கிறோம் என்பதற்கான அத்தாட்சி. வங்கிக் கடன் பெறுவதற்கு பட்டா கட்டாயம் தேவை. மற்றபடி பட்டா தேவை இல்லை என்பதுதான் உண்மை என்கிறார் என்கிறார் சட்டப் பஞ்சாயத்து இயக்கத் தலைவர் சிவ இளங்கோ.

‘‘உதாரணமாக, ஓர் இடத்தைப் பத்திரப் பதிவு அலுவலகத்தில் பதிவு செய்து பெறப்படும் பதிவு பத்திரமே அனைத்திற்கும் போதுமானது. இதே இடத்திற்கு வேறு ஒருவர் பட்டா பெற்றாலும் அது செல்லாது. அந்த இடம் பதிவு செய்யப்பட்டவருக்கு மட்டுமே சொந்தம். அதேசமயம் பட்டா என்பது உரிமையாளருக்கு மேலும் ஒரு அங்கீகாரம்’’ என்கிறார் சிவ இளங்கோ.

பட்டாப் பதிவு எப்படி முறையாக நடைபெறுகிறது என்பதை முதலில் பார்க்கலாம். சார்பதிவாளர் அலுவலகத்தில் பதிவு செய்யப்படும்பொழுது அது 'அ' பதிவேட்டில் பதிவு செய்யப்படும். இந்தத் தகவலைச் சார்பதிவாளர் அலுவலகத்திலிருந்து அவர்களே அப்பகுதி தாசில்தாருக்கு அனுப்பிவிடுவார்கள். இதுதான் நடைமுறை. ஒருவர் தன்னுடைய ஒரு ஏக்கர் நிலத்திலிருந்து அரை ஏக்கர் நிலத்தை வேறு ஒருவருக்கு விற்றுவிட்டார் என்றால், அந்தப் பதிவு விவரங்கள் உடனடியாகத் தாசில்தார் அலுவலகத்திற்குச் சென்றுவிடும்.

ஒரு பகுதியை மட்டுமே விற்றதால் இதனைப் பிரித்துப் பதிவு எண் கொடுக்க வேண்டும். இதற்கான கட்டணத்தை நிலத்தைப் பதிவு செய்யும்பொழுதே சார்பதிவாளர் அலுவலகத்தில் கட்டிவிடச் சொல்வார்கள். இதற்கு ரசீதும் கொடுத்துவிடுவார்கள். உடனடியாகத் தாசில்தாருக்குத் தகவலும் அனுப்பிவிடுவார்கள். வருவாய்த் துறை அரசு ஆணை எண் 117ன்படி தகவல் கிடைத்த 30 நாட்களுக்குள் பட்டாவைப் பதிவு செய்தவரின் வீட்டுக்கு அனுப்பவேண்டும். அதில் சார்பதிவாளர் அலுவலகத் தகவலின்படி பட்டா வழங்கப்படுகிறது என்றும் குறிப்பிடப்பட வேண்டும். இந்த நடைமுறை தாசில்தார் அலுவலகங்களில் பின்பற்றப்படுகின்றனவா என்பது சந்தேகமே. அதனால்தான் நாம் தாசில்தார் அலுவலகங்களில் பட்டா வாங்கக் காத்திருக்க நிலை ஏற்படுகிறது என்கிறார் சிவ இளங்கோ.

பதிவு செய்யப்பட்ட நாளில் இருந்து குறிப்பிட்ட நாட்களுக்குள் பட்டா வரவில்லையென்றால் தகவல் அறியும் சட்டத்தின் மூலம் நம் மனு மீதான நிலையை அறியலாம்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in