

சீன ஞானி கன்ஃபூசியஸ், கன்ஃபூசியனிசம் என்றெல்லாம் ஆரம்பித்தால்… அதெல்லாம் ஏதோ தத்துவம் சம்பந்தப்பட்ட விவகாரம். அதெல்லாம் நமக்குப் புரியாதுப்பா என்று விலகி ஓடத் தேவையில்லை. கன்ஃபூசியஸைப் பற்றி அறிந்துகொள்ள ‘கன்ஃபூஷியஸின் கருத்துப் பெட்டகம்’ என்ற நூல் கைகொடுக்கும்.
2000 ஆண்டுகளுக்கு முற்பட்ட சீன ஞானிகளில் ஒருவரான கன்ஃபூசியஸ், சீனப் பண்பாட்டில் பெரும் தாக்கம் செலுத்தியவர். அவர் எதையும் எழுதி வைத்ததில்லை. அவருடைய சிந்தனைகளைச் சீடர்களே தொகுத்து வெளியிட்டனர். அதன் எளிமை யான வடிவமே சித்திரப் புத்தகமாக வெளியாகியிருக்கிறது.
இந்த நூலைச் சித்திரக்கதை என்று சொல்ல முடியாது. ஆங்கிலத்தில் பல கருத்து களை எளிமையாகப் புரியவைப்பதற்கு, சித்திரங்களை அதிகம் பயன்படுத்தும் முறை உள்ளது. இந்தப் புத்தகமும் அப்படிப்பட்டதே.
கன்ஃபூசியஸின் முக்கியக் கொள்கைகள்: # உங்கள் சக மனிதர்களை நேசியுங்கள். # நீங்கள் விரும்பாத ஒன்றை எப்போதும் மற்றவர்கள் மீது திணிக்காதீர்கள். # ஒரு கனவான் தன் மீது கண்டிப்பானவனாக இருப்பான். அற்பமான மனிதன் மற்றவர்கள் மீது கண்டிப்பைக் காட்டுவான் (சிறந்த ஆளுமை குறித்து கன்ஃபூசியஸின் வரையறை). # ஓர் ஆட்சியாளர் தன்னை முன்மாதிரியாக நிறுத்தி செயல்படாதவரை, மற்றவர்கள் தான் சொல்வதைக் கேட்க வைக்க முடியாது. # ஒரு மனிதன் கற்பதன் மூலமே உலகை அறிகிறான். அனைவருக்கும் கல்வி அத்தியாவசியம். அவருடைய வேறு சில கருத்துகள் பழமைவாதக் கருத்துகளாகத் தோன்றலாம். இருந்தபோதும் உலகின் மிக நீண்ட வரலாற்றைக் கொண்ட ஒரு நாட்டில் பெரும் தாக்கம் செலுத்தியவரைப் பற்றி எளிமையாகத் தெரிந்துகொள்ள இந்த நூல் உதவும்.