

வண்ணத்தையும், ஒளியையும் குழைத்துக் கொடுக்கும் புகைப்படக் கலையில் இளம் தலைமுறையினர் விரும்பி ஈடுபடுகிறார்கள். இந்தக் கலை டிஜிட்டலுக்கு மாறிய பின் தன்னைத் தொட்ட அனைவரையும் கலைஞர்களாக்கிவருகிறது. இன்று பரிணாம வளர்ச்சி அடைந்து அது கையடக்கக் கலையாக செல்போனில் அறிமுகமாகிவிட்டது.
தொழில்நுட்பம் கையடக்கமானாலும் கேமராவுக்கு இணையாக ஒளியைக் கட்டுப்படுத்த முடியாததால் செல்போன் படங்கள் கலை நேர்த்தி குறைந்தவையாகவே பார்க்கப்படுகின்றன.
போனிலும் முடியும்
ஆனால் ஒளியின் தன்மைக்கேற்ப நாம் முயற்சி செய்தால் கேமரா பதிவுகளை விடவும் நல்ல புகைப்படங்களை செல்போனில் எடுக்க முடியும். அதற்குத் தேவை முயற்சிதான் என்கிறார் மதுரையைச் சேர்ந்த பிராங்ளின் குமார்.
பொள்ளாச்சியில் சமீபத்தில் நடைபெற்ற இலக்கியச் சந்திப்பு நிகழ்ச்சியில் செல்போன் கேமரா மூலம் எடுக்கப்பட்ட இவரது புகைப் படங்கள் கண்காட்சியாக வைக்கப்பட்டிருந்தன. வாழ் வியலை நுணுக்கமாகப் பதிவுசெய்யும் ஸ்ட்ரீட் போட்டோகிராபியை சாதாரண செல்போன் மூலம் அழகியலோடு பதிவுசெய்திருந்தார்.
அவரிடம் பேசியபோது, “மதுரை எனது சொந்த ஊர். பட்டப் படிப்பு முடித்துவிட்டு எல்.ஐ.சி ஏஜெண்டாக இருக்கிறேன். 10-ம் வகுப்பு படிக்கும்போதிருந்து புகைப்படக் கலை மீது ஆர்வம் இருந்தது. செல்போன் வாங்கி அதில் புகைப்படங்களை எடுக்கத் தொடங்கினேன். யதேச்சையாக முகப் புத்தகத்தில் ஒரு படத்தைப் பதிவுசெய்ய, அது பலரது லைக்குகளை வாங்கியது. அதுவே என்னை ஊக்கப்படுத்தியது. அதன் பின் பணம் சேர்த்துக் கொஞ்சம் விலை உயர்ந்த செல்போன் வாங்கிப் புகைப்படங்களை எடுக்கத் தொடங்கியுள்ளேன்” என்றார்.
அவர் மேலும் சொல்லும்போது,“செல்போன் என்பதால் மழை, நெருப்பு, சாக்கடை என எதுவானாலும் அருகே சென்றே படம் பிடிக்க வேண்டும். சில சமயம் நெருக்கமாக முக பாவனைகளைப் பதிவுசெய்ய வேண்டியிருக்கும். அனைத்தையும் ஒளியின் தன்மைக்கேற்ப சிரமப்பட்டாவது பதிவுசெய்துவிடுவேன். டிஜிட்டல் கேமராக்களில் இந்தச் சிரமங்கள் இருக்காது” என்கிறார்.
டிஜிட்டல் கேமரா படங் களுக்கு இணையான தரத்தில் செல்போன் படங்கள் இல்லை எனப் பல இடங் களில் இவரது படங்கள் நிராகரிக்கப் பட்டு இருக்கின்றன. மதுரையில் நடந்த ‘தண்ணீர் சேமிப்பு’ குறித்த புகைப்படப் போட்டியில் செல்போனில் எடுத்த இவரது புகைப்படம் இரண்டாவது பரிசைப் பெற்றது.
எளிய மக்களின் வலியையும், சந்தோஷத்தையும் அழுத்தமாகப் பதிவுசெய்ய வேண்டும் என்று விரும்புகிற இவரின் ஒரே குறிக்கோள் டிஜிட்டல் கேமரா ஒன்றை வாங்குவதே. செல்போன் கேமராக்களால் நன்றாகப் படம் எடுக்க முடியாது என்று பலர் கூறுவதைச் சவாலாக ஏற்று அவற்றைச் செய்து காட்ட வேண்டும் என்கிறார். இருப்பதைக் கொண்டு சிறப்பாகச் செய்து முடிக்க முயலும் அவரது முயற்சி நிச்சயம் சிறக்கவே செய்யும்.