உலகமயமாக்கல்... இனி என்ன செய்யும்? 02

உலகமயமாக்கல்... இனி என்ன செய்யும்? 02
Updated on
3 min read

‘நான் கார் வாங்குவதால், எப்படி சார் நம் நாட்டுக்குப் பொருளாதார பாதிப்பு ஏற்படும்?’ என்ற கேள்வி எழுவது இயல்பே!

வெளிநாட்டு நிறுவனங்களின் லாபம் எப்போழுதுமே அவற்றின் நாடுகளுக்கே கொண்டு செல்லப்படும். அது அந்நியச் செலாவணியாக மட்டுமே வெளியேறும். இதனால் டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு பாதிக்கப்படுகிறது. அது மட்டுமல்லாமல் அந்நியச் செலாவணி ஈட்டுவதற்காக நமது நாட்டின் ஏற்றுமதியையும் அதிகரிக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம். அப்படி ஏற்றுமதி செய்வதிலும் ஏகப்பட்ட போட்டிகளைச் சமாளிக்க வேண்டியுள்ளது.

தொழில்நுட்பம் என்று பார்த்தால் வெளிநாட்டு கம்பெனிகளுடன் போட்டி போடக்கூடிய நிலையை நாம் இன்னும் அடையவில்லை. அதனால் நமது நாட்டின் ஏற்றுமதி என்பது குறைந்த அளவு மதிப்புக் கூட்டப்பட்ட தயாரிப்புகளாகவும் தாதுப் பொருட்களாகவுமே உள்ளன.

அண்ணாச்சியைத் தோற்கடிக்கும் ஆன்லைன்

இன்றைக்குச் சில்லறை வணிகத்திலும் அந்நிய முதலீடு பல ரூபங்களில் நுழைந்துள்ளது. அமேசான் போன்ற வெளிநாட்டு ஆன்லைன் விற்பனைத் தளங்கள் மளிகைப் பொருட்கள் முதல் புத்தகங்கள், உடைகள் என எல்லாப் பொருட்களையும் விற்பனை செய்கின்றன. இது போன்ற ஆன்லைன் நிறுவனங்களில் பொருட்கள் நேரடி யாகக் கொள்முதல் செய்யப்படுவதில்லை. விற்பனையாளருக்கும் வாடிக்கையாளருக்கும் ஒரு பாலமாகவே இவை செயல்படு கின்றன.

இதனால் சரக்குகளை வைத்திருக்க கிட்டங்கிகள், அதற்கான முதலீடு போன்றவை தவிர்க்கப்படுவதால் விலையைக் கணிசமாகக் குறைத்து விற்க முடிகிறது. அது மட்டுமல்லாமல் இருக்கையில் இருந்தபடியே ஆர்டர் செய்து பொருட்களை வீட்டுக்கே வரவழைக்க முடிவதும் இன்னொரு சவுகரியம். இதனால் ஆன்லைன் விற்பனை பெரிதும் அதிகரித்துவருகிறது. இதனால் பாதிக்கப்படப்போவது? தெருமுனையில் இருக்கும் அண்ணாச்சி கடைதான்.

கடைக்கான இடத்தைத் தேர்வு செய்து, அதற்கான முன்பணம், மாத வாடகை, வேலை செய்பவர்களுக்கான சம்பளம் இதர நிறுவனச் செலவுகள், பொருட்களை முன்னாலேயே வாங்கி வைக்கப் பணம் போன்றவற்றுக்குப் பிறகுதான் அவருக்கு லாபம் பார்க்க முடியும். இத்தனை செலவுகளும் இல்லாத ஆன்லைன் நிறுவனங்களுடன் அவரால் எப்படிப் போட்டிபோட முடியும்?

இந்தியத் தயாரிப்புகளுக்கு இடமிருக்கா..?

‘உலக கிராமம்’ (Global Village) என்ற பதம் இப்போது பெருமளவில் பயன்படுத்தப்படுகிறது. அதாவது தகவல் தொடர்புச் சாதனங்களில் ஏற்பட்ட முன்னேற்றம் மற்றும் பெருக்கத்தினால் உலகமே இப்போது ஒரு கிராமமாகச் சுருங்கிவிட்டது என்பதுதான் இதன் அர்த்தம். ஆனால் உலகத்தில் தயாராகும் எல்லாப் பொருட்களும் இப்போது இந்தியக் கிராமங்கள் அனைத்திலும் கிடைப்பது போல இந்தியக் கிராமங்களில் தயாராகும் அனைத்தும் உலகம் முழுவதும் கிடைக்கிறதா?

உலக கிராமம் என்பது பெரும்பாலும் இந்தியாவைப் பொறுத்தவரையில் ஒருவழிப்பாதை யாகவே உள்ளது என்பதுதான் கசப்பான உண்மை.

மலிவான பொருட்கள் வெளிநாடுகளிலிருந்து தாராளமாகக் கிடைப்ப தால் அவற்றுடன் போட்டி போட முடியாமல் இந்திய நிறுவனங்கள் கொஞ்சம் கொஞ்சமாகப் போட்டி யிலிருந்து வெளியே தள்ளப்பட்டு மொத்தமாக மூடுவிழா நடக்கிறது என்பதுதான் நிதர்சனம்.

மதுரையில் மாப்பிள்ளை விநாயகர், தஞ்சாவூரில் சில்வர் கப் போன்ற உள்ளூர் குளிர்பானத் தயாரிப்புகள் மொத்தமாக மறைந்தே போய்விட்டன. இந்தியாவின் ஆரஞ்சு பானமான ‘கோல்ட் ஸ்பாட்’ இப்போது எங்கே? அமெரிக்காவின் கோகோ கோலா மற்றும் பெப்சிக்கு சவால்விட்ட ‘கேம்பா கோலா’ எங்கே?

வெளிநாட்டு நிறுவனங்கள் இந்தியச் சந்தைகளில் கோலோச்சுவதற்குத் தொழில்நுட்பம் மட்டுமே காரணமில்லை. குளிர்பானங்களில் என்ன பெரிய தொழில்நுட்பம் இருக்கிறது? இந்தியத் தயாரிப்புகள் ஒழிந்ததற்குக் காரணம் வெளிநாட்டு நிறுவனங்களின் விளம்பர யுத்திகள் மற்றும் அதைவிட முக்கியமாகப் போட்டியை முடக்கிப்போடும் தந்திரங்கள். அத்தோடு இவற்றின் பொருளாதார சக்தி. சந்தையில் காலூன்றி போட்டி நிறுவனங்களை ஒழித்துக்கட்டும் வரை பல ஆண்டுகளுக்குக்கூட நஷ்டத்தை ஏற்றுக்கொள்ளும் பணபலம் இந்த வெளிநாட்டு கம்பெனிகளுக்கு உண்டு.

‘ப்ரெடேட்டரி ப்ரைஸிங்’ (Predatory Pricing) என்று சொல்லப்படும் வேட்டை விலங்கின் சாகசத்துக்கு முன்னர் இந்திய நிறுவனங்கள் போட்டி போட முடியாமல் விலகிக் கொள்கின்றன.

நமது சந்தைகள் காப்பாற்றப்படுமா?

இவ்வளவு பாதகங்கள் இருந்தும் ஏன் அந்நிய முதலீடுகளை அனுமதிக்க வேண்டும்? வெளிநாட்டு நிறுவனங்களுக்கு ஏன் அனுமதி அளிக்க வேண்டும் என்ற கேள்வி எழுவது நியாயம்தான். ஆனால் இன்றைக்கு எந்த நாடும் தனித்து இயங்க முடியாது என்பதுதான் இதற்கான மூல காரணம்.

எந்த ஒரு நாடும் பிற நாடுகளுடன் வாணிபத் தொடர்பு கொள்ளாமல் இருக்கவே முடியாது. சோழர் காலத்திலேயே ரோமாபுரி வரை கடல் வாணிபம் செழித்து வந்துள்ளதை வரலாறு நமக்குக் காட்டுகிறது. உணவுப் பொருட்கள், நெசவுத்தொழில் இது இரண்டும்தான் ஒரு நாட்டின் தலையாயத் தேவைகள். ஆனால் இவை மட்டும் இருந்தால் போதுமா? தொழில் மயமான இந்த நாட்களில் எந்த இயந்திரமும் இயங்குவதற்குத் தேவையான எரிபொருளான பெட்ரோலும் டீசலும் இறக்குமதி செய்யத்தானே வேண்டும்? அதற்கு ஈடான பணத்தை எப்படித் தரப்போகிறோம்?

கச்சா எண்ணை உற்பத்தி செய்யும் நாடுகளுக்குத் தேவையான பொருட்களைப் பண்ட மாற்றாகத் தர வேண்டும். அல்லது அவற்றின் மதிப்புக்கு ஈடான பொருட்களைப் பிற நாடுகளுக்கு விற்பனை செய்து கச்சா எண்ணையின் விலையை டாலராகத் தர வேண்டும். இதெல்லாம் வேண்டாமென்றால் மறுபடியும் மாட்டு வண்டி சகிதம் நாம் நூறு-நூற்றைம்பது ஆண்டுகளுக்கு முன்னால் போக வேண்டியதுதான். முடியுமா?

முடியாதுதான். அப்போது இந்திய நிறுவனங்களும் இந்தியச் சிறு தொழிலும் நசிந்து போவதைத் தவிர்க்கவே முடியாதா என்றால் இல்லை என்பதுதான் நம்பிக்கையூட்டும் விஷயம். ஃபோர்டு கம்பெனி, உலகின் முன்னணி கார் தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்று. முதன்முதலில் மஹிந்தரா நிறுவனத்துடன் கூட்டுத் தயாரிப்பில் ஈடுபட்டது. சில வருடங்களுக்குப் பின்னர் ஒப்பந்தம் முடிவு பெற்றது. ஃபோர்டு நிறுவனம் தனித்து இயங்கத் தொடங்கியது. ஆனால் மஹிந்தரா நிறுவனமும் தனியாக வாகன உற்பத்தியைத் தொடங்கி இன்று இந்தியச் சந்தையில் தனக்கென ஒரு இடத்தைப் பிடித்திருப்பதோடு வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்வதிலும் வெற்றி கண்டுள்ளது.

சுமார் முப்பது வருடங்களுக்கு முன்பு இந்திய நிறுவனங்கள் வெளிநாட்டு நிறுவனங்களோடு இணைந்துதான் மோட்டார் பைக்குகள் தயாரித்துவந்தன. ஆனால் இன்றைக்கு இந்திய நிறுவனங்கள் தனித்து நின்று தயாரிப்பதோடு சந்தையில் உள்ள வெளிநாட்டு நிறுவனங்களைக் காட்டிலும் முன்னணியில் உள்ளன. இதற்கெல்லாம் காரணம் என்ன?

கிராமங்களைக் கைவிடாதீர்கள்

இந்தியச் சந்தைகளை நன்றாகப் புரிந்து கொள்ளக்கூடிய சக்தி இந்திய நிறுவனங்களுக்கு அதிகம் என்பதும் விற்பனைக்குப் பிந்தைய சேவை இந்திய நிறுவனங்களின் பலம் என்பதுமே ஆகும்.

பெருநிறுவனங்களுக்கு சரி… சிறு தொழில் செய்பவர்கள், விவசாயிகள் இவர்கள் என்ன செய்வது? எதிராளியின் ஆயுதத்தையே நாம் நமக்கு சாதகமாக்கிக் கொள்வோம். தொலைத்தொடர்புக் கட்டமைப்பு விரிவடைந்துள்ள நிலையில் இதனை நமது வசதிக்குப் பயன்படுத்திக்கொள்ள வேண்டும்.

நீர்ப்பாசனம், இயற்கை உரங்கள், நஞ்சில்லா உணவுப் பொருட்கள் போன்ற விஷயங்களில் ஆர்வம் காட்டினால் உலகத் தரத்துடன் பொருட்களை நாம் உற்பத்தி செய்ய முடியும். இயற்கை வேளாண்மை என்பது செலவைக் குறைப்பதுடன் உற்பத்திப் பொருட்களின் மதிப்பையும் கூட்டுகிறது. ‘வாட்ஸ் ஆப்’ போன்ற சாதனங்களையும் சமூக ஊடகங்களையும் சரியான முறையில் பயன்படுத்திக்கொண்டால் அதிக விளம்பரச் செலவின்றி நமது பொருட்களைப் பெருமளவில் சந்தைப்படுத்த முடியும். இதன் மூலம் இடைத்தரகர்களையும் நாம் தவிர்ப்பதால் இடைத்தரகர்களுக்குச் செல்லும் லாபம் நமக்கே நேரடியாகக் கிடைக்கும்.

இணையதளம் என்பது எந்த வேறுபாடு மின்றி எல்லோருக்கும் சமமான ஆடுகளத்தை அளித்துள்ளது. இதனைச் சரியாகப் பயன்படுத்திக்கொண்டால் நமது கிராமங்களை யும் உலகளவில் எடுத்துச் சென்று சந்தைப் படுத்தலாம். நமது கிராமங்களில் ஏராளமான பாரம்பரியமான கைவினைப் பொருட்கள் தயாரிக்கப்பட்டுவந்தன. அவற்றை மீட்டெடுக்க வேண்டும்.

கிராமங்கள்தோறும் இருக்கும் இளைஞர்கள் தங்களது திறனை மேம்படுத்திக்கொண்டு இணையதளம் மற்றும் சமூக ஊடகங்கள் மூலம் தங்களது தயாரிப்புகளைச் சந்தைப்படுத்த வேண்டும். இதற்கான பயிற்சிகளை மாநில, மத்திய அரசுகள் கிராமப்புற மக்களுக்கு அளிக்க ஏற்பாடு செய்ய வேண்டும். இதன் மூலம் கிராமப்புறப் பொருளாதாரம் மேம்படுவதோடு வேலைவாய்ப்பும் பெருகும். முக்கியமாக வேலை தேடியும் பொருளாதாரக் காரணங்களுக்காகவும் கிராமப்புற மக்கள் நகரங்களுக்குக் குடிபெயர்வது தவிர்க்கப்படுவதால் நகர்ப்புறப்புற உள்கட்டமைப்புகள் மீதான அழுத்தம் குறையும். என்றும் கிராமங்களைக் கைவிடாதீர்கள்.

நமது நாட்டின் தொழில் வளம் முன்னேறும் போது நமது நாட்டு மக்களின் வாழ்க்கைத் தரமும் முன்னேறுகிறது. நாட்டின் பொருளாதாரமும் முன்னேறுகிறது. வாழ்க்கை எப்போதுமே நம் முன் சோதனைகளை வைத்துக்கொண்டிருக்கிறது. அதனை தைரியமாக எதிர்கொண்டு சாதனைகளாக மாற்றுவதும் வேதனையில் முடித்துக்கொள்வதும் நமது கைகளிலேயே இருக்கிறது!

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in