Last Updated : 01 Feb, 2014 12:00 AM

 

Published : 01 Feb 2014 12:00 AM
Last Updated : 01 Feb 2014 12:00 AM

இப்படியும் ஒரு திருமணம்

வேலூர் மாவட்டம் ஆம்பூரில் கடந்த ஜனவரி 26-ம் தேதி நடைபெற்ற ஒரு திருமணம் வழக்கமான ஒரு குடும்ப நிகழ்வாக இல்லாமல், பலதரப்பட்டவர்களால் கவனிக்கப்பட்ட ஒரு சமூக நிகழ்வாக நடந்து முடிந்தது. ஆம்பூர் இந்து மேல்நிலைப் பள்ளியில் உதவித் தலைமை ஆசிரியராகப் பணியாற்றி ஓய்வுபெற்ற அ.மங்கையர்க்கரசி தனது பணிக்காலத்திலும் சரி, பணி ஓய்வுக்குப் பிறகும் சரி சமூக மாற்றத்துக்கான பணிகளில் தன்னைத் தொடர்ந்து ஈடுபடுத்திக் கொண்டிருப்பவர். குறிப்பாக அறிவியல் விழிப்புணர்வு பெற்ற சமூகம் உருவாக வேண்டும் என்பதில் ஆர்வம் கொண்டவர். இதற்காகப் பள்ளி மாணவர்கள் மத்தியில் அறிவியல் மனப்பான்மையை வளர்ப்பதற்கான பல்வேறு பணிகளில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டிருக்கிறார்.

அந்த வகையில் தனது மகன் யாழினியன் திருமணத்தையும் ஒரு முன்னுதாரணத் திருமணமாக அவர் நடத்திக் காட்டியிருக்கிறார். இந்தத் திருமணம் பல்வேறு வகைகளில் மற்றவர்களின் கவனத்தை ஈர்த்தது. இந்து சமயத்தைச் சேர்ந்த இளம் பத்திரிகையாளரான யாழினியன், இஸ்லாமியச் சமயத்தைச் சேர்ந்த சமீனா அக்தரைக் காதலித்து திருமணம்செய்து கொண்டுள்ளார். இரு தரப்பினரின் சம்மதத்துடன் மகிழ்ச்சியாக நடைபெற்ற திருமணம் என்ற வகையில் மதச்சார்பின்மையைத் தூக்கிப் பிடித்த சிறப்பு இந்தத் திருமணத்துக்குக் கிடைத்தது.

பட்டாடைகள், நகை ஆபரணங்கள் எதுவுமின்றி சாதாரண உடையில் மிகவும் எளிமையான தோற்றத்தில் மணமக்கள் இருந்தனர். எல்லாவற்றுக்கும் மேலாகத் திருமணத்தை முன்னிட்டு திருமண மண்டப வளாகத்திலேயே நடைபெற்ற புத்தகக் காட்சி, நிகழ்வின் முத்தாய்ப்பாக அமைந்தது. திருமண அழைப்பிதழிலேயே புத்தகக் காட்சி நடைபெறும் எனக் கூறப்பட்டிருந்தது.

நியூ செஞ்சுரி புக் ஹவுஸ், கருப்புப் பிரதிகள், அறிவியல் வெளியீடு போன்ற பதிப்பகங்கள் பங்கேற்ற இந்தப் புத்தகக் காட்சியில் ரூ.30 ஆயிரத்துக்கும் மேல் புத்தகங்கள் விற்பனை ஆயின. ஒரு திருமண நிகழ்ச்சியில் மூன்று, நான்கு மணி நேரத்திற்குள் ரூ.30 ஆயிரத்துக்கும் மேல் புத்தக விற்பனை நடைபெற்றது என்பது எங்கள் அனுபவத்தில் இதுதான் முதல் முறை என நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் நிறுவனத்தினர் தெரிவித்தனர்.

நினைவுப் பரிசாக புத்தகங்கள்

மணமக்களுக்கு மொய்ப்பணக் கவர்களையோ, பரிசுப் பொருள்களையோ யாரும் அளிக்கவில்லை. நல்ல புத்தகங்களை மட்டுமே பரிசுகளாக வழங்கி வாழ்த்தினர். மொய்ப்பண கவர்களுடன் வந்த ஒரு சிலரும் மேடை ஏறிய பின்னர் அந்தக் கவரை வழங்கக் கூச்சப்பட்டு தங்கள் பைகளிலேயே சொருகிக் கொண்டதையும் பார்க்க முடிந்தது. மணமக்களுக்கு சுமார் 200 புத்தகங்கள் திருமணப் பரிசாக வந்துள்ளதாக மங்கையர்க்கரசி கூறினார்.

திருமணத்துக்கு வந்த அனைவருக்கும் தாம்பூலப் பையில் புத்தகங்களை வைத்து மணமக்கள் வீட்டார் நினைவுப் பரிசுகளாக வழங்கினர். அது மட்டுமின்றி அனைவருக்கும் பலா, வேம்பு, புங்கை போன்ற மரக்கன்றுகளும் நினைவுப் பரிசுகளாக அளிக்கப்பட்டன. நிறைவாக ஆம்பூர் என்றதுமே அனைவருக்கும் நினைவுக்கு வரும் மட்டன் பிரியாணி அந்த மண்ணுக்கேற்ற கமகம மணத்துடனும், ருசியுடனும் அனைவருக்கும் பரிமாறப்பட்டது. இது தவிர ஆம்பூரில் உள்ள வாய் பேசாதோர் மற்றும் காது கேளாதோர் பள்ளிக்குச் சென்று அங்குள்ள சுமார் 250 மாணவர்களுக்காகத் தனியாகப் பிரியாணி விருந்து நடத்தியது இந்தத் திருமணத்துக்கு மேலும் சிறப்பைச் சேர்த்தது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x