

உலகில் ஒவ்வொருவரிடமும் எழுதுவதற்கு ஒரு கதை இருக்கிறது. யாரோ சொன்ன ஒரு பழமொழி இது. இதை நிரூபிக்கும் வகையில் மொடச்சூரைச் சேர்ந்த ராமு தாத்தா 87 வயதில் ஒரு புத்தகத்தை எழுதியிருக்கிறார். பெயர்: ‘அண்ணனும் தங்கையும்'
சின்ன வயதிலேயே தோல் வியாபாரத்தில் இறங்கிவிட்ட ராமு தாத்தாவுக்குப் பெரிய படிப்பு எல்லாம் இல்லை. ஆனால், நாளிதழ் வாசிக்கும் பழக்கம் இருந்திருக்கிறது. இந்தப் புத்தகத்தை அவர் எழுதக் காரணமாக இருந்தவர்கள் இரண்டு தலைமுறைப் பெண்கள். முதல் பெண், அவரின் இன்னொரு பாதியான பாட்டாயம்மாள். மற்றொருவர் தாத்தாவின் பேத்தி பிரமிளா கிருஷ்ணன்.
புத்தகம் பிறந்த கதையைத் தெரிந்துகொள்வதற்கு முன் பாட்டாயம்மாளுக்கும் ராமு தாத்தாவுக்கும் திருமணம் நடந்த வித்தியாசமான கதையைத் தெரிந்துகொள்வோம். அவர்கள் இருவரும் சின்னக் குழந்தைகளாக இருந்தபோதே திருமணம் நடந்துவிட்டது. அந்தக் காலத்தில் குழந்தைகள் திருமணம் சகஜம். இருவரும் ஒரே வீட்டில் வளர்ந்தார்கள். அதனால் கணவன்-மனைவி என்ற உறவைத் தாண்டி, இருவருக்கு இடையிலும் ஒரு ஆழ்ந்த நட்பு உயிர்ப்புடன் இருந்தது. 60 ஆண்டுகளுக்கும் மேலாகத் தொடர்ந்த அந்த பந்தம் 2005ஆம் ஆண்டில் அறுபட்டது. பாட்டாயம்மாள் காலமாகி விட்டார்.
அது தாத்தாவின் மனதில் மிகப் பெரிய வெற்றிடத்தை ஏற்படுத்தியது. தனிமையில் வாழ ஆரம்பித்தார். வெற்றிடம் நாளுக்கு நாள் பெரிதாகிக் கொண்டிருந்தது.
முதியவர்களிடம் அலட்சியம்
இந்த நேரத்தில்தான் அவரது பேத்தியான பத்திரிகையாளர் பிரமிளா கிருஷ்ணன் ஆமிர் கான் நடத்திய புகழ்பெற்ற தொலைக்காட்சி நிகழ்ச்சியான சத்யமேவ ஜெயதேயில் முதியவர்களின் நிலைமை தொடர்பாகப் பேசப் போனார். தமிழகத்தின் சில பகுதிகளில் கவனிக்க முடியாத நிலையில் உள்ள முதியவர்களைத் தலைகூத்தல் என்ற பெயரில், அவர்களது குடும்பத்தினரே மறைமுகக் கொலை செய்வது பற்றி அவர் கவனப்படுத்தினார். இது தொடர்பாக ஏற்கெனவே அவர் எழுதியிருந்த கட்டுரை பரவலான விவாதத்தை ஏற்படுத்தி இருந்தது.
அந்தக் கட்டுரைக்காக வேலை செய்தபோதும், சத்யமேவ ஜெயதே நிகழ்ச்சியில் பங்கேற்ற பிறகும் பிரமிளாவின் மனதை ஏதோ ஒரு விஷயம் அரித்துக்கொண்டே இருந்தது. தனது தாத்தா ஊரில் தனியாக வாடிக் கொண்டிருப்பது மனதை உறுத்தியது.
எழுத்தாளர் தாத்தா
தனது தாத்தாவின் தனிமையைப் போக்குவது எப்படி என்று சிந்தித்த அவர், படிப்பதற்கு நாளிதழ்கள், வரைவதற்கான குழந்தை ஓவியப் புத்தகங்கள் போன்றவற்றை வாங்கித் தந்துள்ளார். நீண்ட நாளுக்குப் பின் படிப்பது, கலர் அடிப்பது என்று தாத்தா தன்னை ஈடுபடுத்திக் கொண்டுள்ளார். அவரது ஆர்வத்தைக் கண்ட பிரமிளா, “தாத்தா நீங்கள் ஏன் ஒரு கதை எழுதிப் பார்க்கக் கூடாது?” என்று கேட்டிருக்கிறார்.
கொஞ்சம் தயங்கினாலும், சீக்கிரமே தாத்தா எழுத ஆரம்பித்துவிட்டார். கை நடுக்கத்தால் எழுத்துகள் கிறுக்கலாக, இரண்டு வரி நோட்டை வாங்கித் தரச் சொல்லி, கையெழுத்தை நேராக்கினார். அதற்குப் பிறகு தினமும் இரண்டு மணி நேரம் எழுத்து வேலைதான். கொஞ்ச நாளைக்குப் பிறகு, அந்தக் கதையின் ஹீரோ, ஹீரோயின், அவர்கள் செல்லும் ஊர்கள், சம்பவங்கள் பற்றி பிரமிளாவிடம் ஆர்வமாக விவரித்து, அந்தக் கதாபாத்திரங்களுடனே வாழவும் ஆரம்பித்துவிட்டார்.
அந்தக் கதையை எழுதி முடித்துவிட்ட நிலையில், ஒரு மாதத்துக்கு முன் அவருக்கு நினைவு தப்பிப்போவது அதிகரித்தது. அந்த நிலையில்தான் பிரமிளாவுக்கு ஒரு யோசனை வந்தது. முதுமையின் தனிமையில் தாத்தா எழுதிய கதையை சிறு புத்தகமாக்கினால், அது தாத்தாவின் ஞாபகத்தை மீட்டெடுக்க ஒரு வாய்ப்பாக அமையுமே என்று நினைத்து, “அண்ணனும் தங்கயும்” (செம்பருத்தி பப்ளிகேஷன்ஸ்) கதையைச் சிறுபுத்தகமாக உருவாக்கி விட்டார். மூத்த கம்யூனிஸ்ட் தலைவர் நல்லகண்ணு சமீபத்தில் அதை வெளியிட்டார்.
முதியவர்களிடம் அன்பு வேண்டும்
“வயதானவர்களின் தனிமையைப் போக்குவது பற்றி பலரும் சிந்திப்பதில்லை. அவர்கள் வாசிக்கலாம் என்றாலும் வழக்கமான புத்தகங்களில் எழுத்துகள் சிறியதாக உள்ளன, அவர்களுக்கு ஏற்ற கதைகளும் இல்லை.
எனது தாத்தாவைப் போல, ஒவ்வொரு முதியவருக்கும் ஒவ்வொரு ஆர்வம் இருக்கலாம். நம் வீட்டு முதியவர்களின் ஆர்வத்தைத் தெரிந்துகொண்டு, அவர்களை எங்கேஜ் செய்ய வேண்டும். இரண்டாவது குழந்தைப் பருவம் எனப்படும் முதுமைப் பருவத்தில், அவர்களைத் தனிமையில் வாட விடுவது மனிதாபிமானம் இல்லாத செயல்.
அவர்களிடம் பேசாமல் இருப்பதும்கூட ஒரு நிந்தனைதான் (Abuse). முதியவர்கள் நம்மிடம் பெரிதாக எதையும் எதிர்பார்ப்பதில்லை. அன்புடன் அவர்களுடன் கொஞ்சம் நேரம் செலவழிக்க வேண்டும் என்றே எதிர்பார்க்கிறார்கள். பெரியவர்களிடம் காது கொடுத்துப் பேசினால், ஒரு தலைமுறை வரலாற்றையே தெரிந்துகொள்ளலாம். முதியோர் இல்லத்தில் தனிமையில் இருப்பவர்களுக்குத் தாத்தாவின் புத்தகத்தை இலவசமாகக் கொடுக்கப் போகிறோம்” என்கிறார் பிரமிளா.
என்னைப் போன்று வெளிப்படாத படைப்பாளிகளுக்கு இப்புத்தகம் ஒரு ஊக்கியாக அமைந்து, அவர்களின் திறமைகளும் வெளிப்பட்டால் மகிழ்ச்சி கொள்வேன் என்று ராமு தாத்தாதான் புத்தகத்தில் குறிப்பிட்டுள்ளார். அவரது ஆசை நிறைவேட்டும்.