ஊர் சுற்றும் கடல்

ஊர் சுற்றும் கடல்
Updated on
3 min read

பொதுவாகப் பத்தாம் வகுப்பு படிக்கும் ஒரு பெண் ஆண்டுத் தேர்வில் அதிக மதிப்பெண் பெற வேண்டும் என்பதையே குறிக்கோளாகக் கொண்டு செயல்படுவார். அவரது அடுத்த இலக்கு மேல்நிலைப் படிப்புக்கான நல்ல பள்ளி என்பதாகத்தான் இருக்கும். இதேபோன்ற எண்ணங்களுடன் தான் அவருடைய குடும்பத்தினரும் செயல்படுவார்கள். ஆனால், இதற்கு நேர்மாறானவர் திருச்சியைச் சேர்ந்த சாகரிகா. பத்தாம் வகுப்பு முடித்த கையுடன் இவர் ஒரு வருடம் ஊர் உலகத்தைச் சுற்றிப் பார்க்க ஆசைப்பட்டிருக்கிறார். விநோதமான ஆசைதான். அதைவிட விநோதம் அவருடைய குடும்பத்தினரும் அதற்கு ஒத்துழைத்ததுதான்.

சக தோழிகள் பாடப்புத்தகங்களை நெட்டுரு போடும் வேளையில், சாகரிகா தனது வெளியுலக அனுபவங்களைத் தொகுத்து ஒரு புத்தகமாக வெளியிடும் வேலையில் மும்முரமாக ஈடுபட்டிருக்கிறார்.

பெற்றோரின் ஊக்கம்

திருச்சி தில்லைநகரைச் சேர்ந்த தம்பதி, சிவக்குமார்- சாவித்ரி. போட்டித் தேர்வுகள், சர்வதேச மேற்கல்வி ஆகியவற்றுக்கான பயிற்சியும் ஆலோசனையும் வழங்கிவருகிறார்கள். இவர்களின் ஒரே மகள் சாகரிகா. இந்த சமஸ்கிருத பெயருக்குக் கடல் என்று அர்த்தம். ஆழ்ந்த கடலின் அமைதியும், கரையோர அலைகளின் ஆர்ப்பரிப்பும் கலந்த பாவனையுடன் உற்சாகமாகப் பேசுகிறார் சாகரிகா:

“படிப்பில் நான் பிரமாதமான மாணவி இல்ல. பத்தாம் வகுப்பு பரீட்சை முடிஞ்ச கையோடு, அடுத்ததா என்ன படிக்கலாம்னு வீட்டில் பேச்சு எழுந்தது. மேற்கொண்டு என்ன படிக்க, எதிர்காலத்துல என்னவாகனும் என்பதில் எனக்குத் தெளிவில்லை. யோசிச்சுப் பார்த்தபோது, வெளியுலகத்த தெரிஞ்சுக்கிற ஆர்வம் எனக்கு அதிகமாக இருந்ததப் புரிஞ்சுகிட்டேன். இதுக்காக ஒரு வருஷம் பள்ளிப் படிப்புக்கு முழுக்குப் போட முடிவு செஞ்சேன். என்னோட ஆர்வத்தையும் மனோதிடத்தையும் புரிந்துகொண்ட என்னோட பெற்றோர், அதற்கு ஆதரவா செயல்பட முன்வந்தாங்க. எனக்கு முழு சுதந்திரம் கொடுத்து, என்னோட திறமைகளைக் வெளிக்கொண்டுவர உதவினாங்க.”

அவருடைய தாயார் சாவித்ரி தொடர்ந்தார்:

“நானும் என்னோட கணவரும் கடந்த 18 வருடங்களில் ஆயிரக்கணக்கான மாணவ மாணவிகள் மேற்கல்வி படிக்க உதவியிருக்கிறோம். டிகிரி முடிச்சுட்டு வர்ற மாணவனுக்கு மேற்கொண்டு என்ன படிப்பது, எந்த வேலைக்குச் செல்வது என்பதில் தெளிவிருக்காது. பெற்றோருக்காக எதையாவது படித்துவிட்டு, தன்னுடைய ஆர்வம், திறமை தொடர்பான எந்தவொரு அபிலாஷைக்கும் வாய்ப்பில்லாது வெறும் சக்கையாக நிற்பார்கள். இது தொடர்பாக அந்த மாணவர்களின் பெற்றோரிடம் பேசினாலும் பலனிருக்காது. இந்தக் கசப்பனுவங்களால், மகளை வளர்க்கும்போது அவளது விருப்பமறிந்து நடக்க முடிவுசெய்தோம்”

பல தொழில் கற்றேன்

சரி, பள்ளிக்கு ‘பை’ சொல்லிய ஒரு வருடத்தில் அப்படி என்னதான் செய்தார் சாகரிகா? “யோகா, உடற்பயிற்சி என்று டீனேஜூக்கு அவசியமான உடல், மனப்பயிற்சிகளோடு ஒவ்வொரு நாளும் தொடங்கும். சில மாதங்கள் ஷேர் மற்றும் கமாடிட்டி மார்க்கெட் தொடர்பா அந்த மையங்களுக்கே நேரடியா போய், அதில் ஈடுபட்டு கொஞ்சம் கத்துக்கிட்டேன். அப்பா பெயரில் முதலீடு செய்தும் நடைமுறைரீதியா ஆய்வும் செஞ்சேன். அப்புறம் திருச்சியில் இருக்கும் ஒவ்வொரு தொழில் துறையிலும் ஒரு வாரம் பரீட்சார்த்தமா வேலை பார்த்து அனுபவங்களைச் சேர்த்துக்கொண்டேன். கனரக இயந்திரங்களைக் கையாளும் ஆலை முதல், வீடு வீடாக சோப்புத்தூள் விற்பதுவரை ரகம்ரகமான வித்தியாசமான அனுபவங்கள். மார்க்கெட்டிங் உலகிற்கே உரிய சுவாரசியமான அனுபவங்களோடு, இதுவரை நான் எதிர்கொள்ளாத அவமானம், புறக்கணிப்பு, அலட்சியம் போன்றவற்றையும் சில வீடுகளில் பார்த்தேன்.

இரண்டாம் கட்ட வெளியுலக அனுபவத்திற்காக திருச்சிக்கு வெளியே பயணப்பட்டேன். இஸ்ரோ மற்றும் பிரபல அறிவியல் ஆய்வு மையங்கள், வரலாற்றுச் சின்னங்கள், புவியியல் ஆச்சரியங்கள் ஆகியவற்றைச் சுற்றிப் பார்த்தேன். இவற்றில் வடக்கே இமயமலைச்சாரலில் கைலாஷ் மற்றும் லே பகுதிகளில் மலையேற்றக்குழுவினரில் ஒருவராகக் கலந்துகொண்டேன். இந்தப் பயணங்களில் குறிப்பிட்ட இடங்கள் மட்டுமன்றி, அந்தப் பகுதிகளில் வாழும் மக்களின் பண்பாடு, நடைமுறை வாழ்க்கைச் சிரமங்கள் உள்ளிட்டவற்றையும் அறிந்துகொண்டேன். அடுத்த கட்டமாகத் திரைப்பட உருவாக்கம் முதற்கொண்டு பிரதான தொழில் துறை ஒவ்வொன்றிலும், தொழில்நுட்பக் கலைஞர்களின் பார்வையில் அந்தத் துறை செயல்படும் விதத்தைப் பார்த்தேன். இவற்றோடு இந்தியாவின் பிரபல ஆளுமைகள் பலரை நேரடியாகச் சந்தித்துப் பேசினேன். என்னுடைய நோக்கம், ஆர்வம் ஆகியவற்றைக் கேள்விப்பட்டு அவர்களும் உற்சாகமாக நேரம் வழங்கி, என்னுடைய கேள்விகளுக்குச் சளைக்காமல் பதில் சொன்னார்கள்” என்று உற்சாகம் கொப்பளிக்கப் பேசுகிறார் சாகரிகா.

தனது அனுபவங்களை அப்போதைக்கு அப்போது பதிவும் செய்தார் சாகரிகா. ஒளிப்படங்களோடு அவர் எழுதத் தொடங்கிய வலைப்பூ (>https://sagarikkasivakumar.wordpress.com/) அவரது எழுத்துத்திறமையையும் பட்டைதீட்ட, தனது பதிவுகளைச் செதுக்கி ’My Unskooled Year’ என்ற தலைப்பில் புத்தகமாக அடுத்த மாதம் வெளியிட இருக்கிறார். இந்த முனைப்பின் ஊடாக டிஜிட்டல் மார்க்கெட்டிங் குறித்தும் ஆண்டிராய்ட் செயலி ஒன்றை உருவாக்கும் வேலையிலும் இவர் ஈடுபட்டு வருகிறார்.

பெற்றோர் ஆர்வம்

சாகரிகாவின் வெளியுலக அனுபவங்களுக்குத் துணை நின்ற அவருடைய தந்தை சிவக்குமார் கூறுகையில், “சாகரிகாவின் புதிய ஆர்வம் அவளின் பெற்றோராக எங்களுக்கும் சவால்களைத் தந்தது. அவரது பயணத்தைத் திட்டமிடுவது, அதற்கான தரவுகளைத் திரட்டுவதில் உதவுவது போன்ற மெனக்கெடல்களுடன், வீட்டிலிருக்கும் நாட்களில் மாலைதோறும் சில மணி நேரங்கள் பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 முக்கியப் பாடங்களை என்னிடமே கற்றுக்கொள்ளவும் சாகரிகா தவறவில்லை.

சிரமத்துக்கான பலனாக, ஒரே வருடத்தில் அவரது முதிர்ச்சியும் அனுபவ அறிவும் பெருமை கொள்ளுமளவுக்கு மாற்றம் கண்டிருக்கின்றன. எங்களு டைய முயற்சியின் தொடக்கத்தில் கடிந்து கொண்ட சில பெற்றோர்கள், தற்போது தங்கள் டீனேஜ் குழந்தைகளுக்கும் இதுபோன்ற அனுபவத்தை வழங்குவது குறித்து ஆலோசனை கேட்கிறார்கள்” என்று புன்னகைக்கிறார்.

அடுத்து உலகம்

ஒரு வருட இடைவெளிக்குப் பின்னர் கடந்த மாதம் பிளஸ் 1 வகுப்பில் சேர்ந்திருக்கும் சாகரிகா, தனது பயணங்களில் எடுத்த வீடியோகளை சுயமாக எடிட் செய்து ஆவணப்படமாக யூ டியூபில் ஏற்றும் பணியில் தற்போது ஆர்வமாக ஈடுபட்டி ருக்கிறார். கூடவே பிளஸ் 2-வுக்குப் பிறகு சர்வதேச அளவில் மற்றுமொரு பயணத்தை மேற்கொள்ளத் தேவையான குறிப்புகளையும் திரட்டி வருகிறார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in