Last Updated : 19 Aug, 2016 12:33 PM

 

Published : 19 Aug 2016 12:33 PM
Last Updated : 19 Aug 2016 12:33 PM

பெரம்பலூரிலிருந்து ஒரு பாராலிம்பிக் கனவு!

எதிர்க் காற்றை ஒரு கையால் பின்னுக்குத் தள்ளிவிட்டு, வியர்க்க வியர்க்க ஓடி வரும் கலைச்செல்வனைப் பார்த்தால், எங்கே விழுந்துவிடுவாரோ என்ற பதைபதைப்பு காண்பவர் மனதில் உருவாகும். ஆனால், கலைச்செல்வனுக்கு இதெல்லாம் அத்துப்படி! பின்னே, பாராலிம்பிக் வீரர் என்றால் சும்மாவா..?

“ஆமா சார். நடந்துக் கிட்டிருக்கிற ஒலிம்பிக்ஸ் போட்டிகள் முடிஞ்சதுக்கப்புறம், அடுத்த மாசம் 7-ம் தேதில இருந்து 18-ம் தேதி வரை, ரியோவில் பாராலிம்பிக் (மாற்றுத் திறனாளிகளுக்கான ஒலிம்பிக் போட்டி) போட்டிகள் நடக்குது. அதுல கலந்துக்கத்தான் இப்ப ‘ட்ரெய்னிங்' எடுக்கிறேன்!” என்று மூச்சுவாங்கிக்கொண்டே பேசுகிறார் இந்த‌ பெரம்பலூர் இளைஞர்.

மேலப்புலியூர் கிராமத்தைச் சேர்ந்த 32 வயது இளைஞர் இவர். பதின்பருவத்தில் விபத்தொன்றில் கையை இழந்தவருக்கு, கால்கள்தான் இவரை விழுந்துவிடாமல் தாங்கிப் பிடித்துக்கொண்டுள்ளன. ஆம், இவர் ஓட்டப் பந்தய வீரர்!

“குடிசை வீடு. கூலிக்கு வேலை செய்யுற பெத்தவங்க. இந்த மாதிரியான சூழ்நிலையிலதான் நான் பிறந்தேன். ஒன்பதாம் வகுப்பு வரைக்கும் படிச்சேன் சார். அப்புறம் வசதி இல்ல பாருங்க. அதனால, டீக்கடை, லாரி க்ளீனர்னு கிடைச்ச வேலைகளுக்குப் போயிட்டிருந்தேன். அப்போதான் ஒரு லாரி விபத்துல சிக்கினேன். ஒரு கை போச்சு.

ஊனமாகிட்டோமேன்னு வேதனை ஒரு பக்கம். ஆஸ்பத்திரி செலவு, இரண்டு தங்கச்சிகளைக் கரையேத்தணும், வயசான பெத்தவங்களைக் காப்பாத்தணும்கிற கவலை இன்னொரு பக்கம்.

முன்னாடி வேலை பார்த்த இடத்துல எல்லாம், என் உடல்நிலையைக் காரணம் காட்டி, வேலை கொடுக்க மறுத்துட்டாங்க. இதனால‌ மேலப்புலியூரில் இருந்து பெரம்பலூர் வரை ஒவ்வொரு நாளும் காலைலயும் சாயங்காலமும் சில்லறை வேலைகளுக்காக 40 கிமீ தூரத்தைத் தினசரி நடந்தே கடப்பேன். ஆலம்பாடி கொத்துப் பட்டறையில் கொஞ்ச நேரம் வேலை செஞ்சா ரெண்டு ரூபா கிடைக்கும். சினிமா தியேட்டர்ல, இன்டர்வல்ல‌ 100 சமோசா வித்தா ஒரு வேளை சாப்பாட்டுக்கு ஆகும். இதுமாதி இன்னும் கொஞ்சம் சில்லறை வேலைங்க. ‘40 கிமீ நடந்து கடந்தா எப்படி உருப்படறது?'ன்னு நினைச்சு, கொஞ்சம் கொஞ்சமா ஓட ஆரம்பிச்சேன்.

என்னோட ஓட்டத்தைப் பார்த்த என் ஃப்ரெண்ட்ஸ் எல்லாம் ஓட்டப் பந்தயத்துல கலந்துக்கச் சொல்லி ஊக்கப்படுத்துனாங்க. கிண்டலுக்காகச் சொன்னாங்களோ என்னமோ. நானும் ஏதோ தைரியத்துல கைகால் நல்லா இருக்குறவங்களோட சேர்ந்து ஓட்டப் பந்தயத்துல கலந்துக்கிட்டேன். அதுல நான் முதலாவதாக வந்தது எனக்கே பெரிய ஆச்சரியமாப் போச்சு. பரிசுகளும் கிடைக்க ஆரம்பிச்சுது.



என்னோட ஓட்டத்தைப் பார்த்த என் ஃப்ரெண்ட்ஸ் எல்லாம் ஓட்டப் பந்தயத்துல கலந்துக்கச் சொல்லி ஊக்கப்படுத்துனாங்க. கிண்டலுக்காகச் சொன்னாங்களோ என்னமோ. நானும் ஏதோ தைரியத்துல கைகால் நல்லா இருக்குறவங்களோட சேர்ந்து ஓட்டப் பந்தயத்துல கலந்துக்கிட்டேன். அதுல நான் முதலாவதாக வந்தது எனக்கே பெரிய ஆச்சரியமாப் போச்சு. பரிசுகளும் கிடைக்க ஆரம்பிச்சுது.

பெரம்பலூரில் கடைகளில் கூட்டிப்பெருக்குவது, தண்ணீர் பிடித்து வைக்கிறதுன்னு எல்லா வேலைகளையும் செஞ்சாச்சு. அந்த சம்பாத்யம் எல்லாம் ஒருவேளை சாப்பாட்டுக்கே போயிடும். அப்புறம் எங்கேயிருந்து ஊட்டமா சாப்பிடுறது? பந்தயத்துக்கான டிரஸ், ஷூன்னு இதர விஷயங்களும் இருக்கு. இதுக்கெல்லாம், யாராவது மனசு வெச்சாதான் உண்டு. இதுக்கு நடுவுல தனியா பத்தாங்கிளாஸ் பரீட்சை எழுதி பாஸ் பண்ணி, ஐ.டி.ஐ. கோர்ஸும் முடிச்சேன்.

எடுபிடி வேலை பார்த்து சேர்த்து வெச்ச காசுக்கு ஒரு சைக்கிள் வாங்கினேன். 2008ஆம் வருஷத்திலிருந்து ஓட்டம், சைக்கிள், நீச்சல்னு மூணு போட்டிகள்லயும் மாநில, தேசிய அளவிலான போட்டிகள்ல கலந்துக்கிட்டேன்.

இந்தச் சமயத்துலதான் பெரம்பலூர் கலெக்டரா இருந்த‌ தரேஸ் அகமது, மாநிலப் பயிற்சியாளர்கள் சிலர்னு என்னை அடையாளம் கண்டு ஊக்கப்படுத்தினாங்க. அவங்க தந்த ஆதரவால 2012-ம் ஆண்டு லண்டன் பாராலிம்பிக் போட்டிகள்ல என்னால கலந்துக்க முடிஞ்சது. பதக்கம் வாங்கலைதான். ஆனா அங்க ‘ஃப்ளாக் பியரிங்' வாய்ப்பு எனக்குக் கிடைச்சதே பெருமையா நினைக்கிறேன்.

போன வருஷம் நவம்பர் மாசம் ச‌ண்டிகர்ல நடந்த‌ சைக்கிள் போட்டியில ஜெயிச்சேன். அதனால‌ ரியோ பாராலிம்பிக் போட்டியில் பங்கேற்க வாய்ப்புக் கிடைச்சிருக்கு. இத்தனைக்கும் அப்புறம் பெரம்பலூர்ல இருக்குற ரேசன் கடைல, கடைநிலை ஊழியனா இருக்கேன். அதனால ‘ட்ரெய்னிங்'குக்கு என்னால‌ போதிய நேரம் ஒதுக்க முடியாமக் கிடக்கு. மத்தபடி என்ன சார்... இந்தப் போட்டியில கலந்துக்கறதுக்கான செலவு, டயட், விளையாட்டுக் கருவிங்கன்னு நிறைய செலவு இருக்கு. அதை எல்லாம் எப்படிச் சமாளிக்கப் போறனோங்கிறதுதான் இப்ப என் மனசுல கவலையா இருக்கு. ஆனா என்ன சார்... அதுக்கும் நான் ஓடி ஓடித்தானே யார்கிட்டயாவது கேட்கணும்..?” என்று சிரித்துக்கொண்டே தன் சைக்கிளை எடுத்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x