

இந்தியா- அமெரிக்கா - சீனா இடையிலான வர்த்தக உறவுகள் பற்றி இளைஞர்கள் அவசியம் தெரிந்துகொள்ள வேண்டும். எண்ணெய் வள நாடுகள், அண்டை தேசங்கள் ஆகியவற்றுடன் நமது வெளியுறவு நின்றுவிட்ட காலம் மலையேறிவிட்டது.
இந்தியா இன்று, வலுவான பொருளாதார உறவுகள்தாம், வெளியுறவுக் கொள்கைகளின் மையப் புள்ளி. பொருளாதாரப் பாடத்தில், வர்த்தக உறவுகள் மீதான முக்கியத்துவம் அதிகரித்துவருகிறது. இந்த வகையில், மிகச் சில அடிப்படை அம்சங்களைப் பார்ப்போம். எந்தெந்தத் துறைகளில் நாம் அமெரிக்காவுடன் அதிக அளவில் வர்த்தகம் செய்கிறோம்..? பார்த்தீர்களா...? மீண்டும் வர்த்தகம் என்றே சொல்கிறோம். ஏற்றுமதி, இறக்குமதி என்று பிரித்துப் பார்க்கவில்லை. ஏன்...? ஏற்றுமதி வேண்டும்; இறக்குமதி கூடாது என்கிற எண்ணமே தவறு. இரண்டிலும் நமக்கு நன்மை உண்டு.
ஏற்றுமதி இறக்குமதி
ஒவ்வொரு நாடும், ‘ஏற்றுமதி மட்டுமே செய்வோம்; இறக்குமதி வேண்டாம்’ என்றால்...? ‘உங்களுக்குத் தேவையானதை எங்களிடம் வாங்கிக் கொள்ளுங்கள்; ஆனால், உங்களிடம் நாங்கள் எதுவும் வாங்கிக் கொள்ள மாட்டோம்’ என்று சொல்ல முடியுமா...? அது நியாயமா...? நம்மிடம் உள்ள உபரியை யாருக்குத் தேவைப்படுகிறதோ அவர்களுக்கு விற்கிறோம். நமக்குத் தேவைப்படுவது எங்கே உபரியாக, ‘கட்டுப்படி’ ஆகிற விலைக்குக் கிடைக்கிறதோ, அங்கிருந்து வாங்குகிறோம். ‘சர்வதேச வர்த்தகம்’ என்பதன் பண்பும் பயனும் இவ்வளவுதான்.
“அமெரிக்க மூலதனம் - கண்டுபிடிப்பு ஆகியவற்றுக்கும், இந்தியாவின் மனித ஆற்றல் மற்றும் தொழில் முனைவுக்கும் இடையில் வலுவான பிணைப்பு ஏற்படுத்துதல்” (அமெரிக்க நாடாளுமன்றக் கூட்டுக் கூட்டத்தில் இந்தியப் பிரதமர்).
அணுமின் உற்பத்தி, புதுப்பிக்கத் தக்க ஆற்றலைப் பெருக்குவது, பாதுகாப்புக்குத் தேவையான அதி நவீன சாதனங்களை இணையாகத் தயாரிக்கவும் மேம்படுத்தவும் முன் முயற்சிகள் ஆகியன, அமெரிக்காவுடன் நமது வர்த்தகத்தில் முக்கியத்துவம் பெறுகின்றன (தி இந்து தமிழ் -11 ஜூன் 2016).
“அமெரிக்க - இந்திய உறவு, எப்போதும் எப்போதும் விரிவடைந்துகொண்டே வருகிறது; பன்முகத்தன்மை கொண்டதாகவும் இருக்கிறது” (நிருபமா ராவ், முன்னாள் இந்திய வெளியுறவுத் துறைச் செயலர்). பல்வேறு துறைகளில் அரசு, தனியார் மூலம் இரு நாடுகளுக்கும் இடையே உறவு வலுப்பட்டுவருகிறது; பொருளாதார வளர்ச்சியும் கண் முன், தென்படுகிறது.
சீனாவுக்கு வருவோம். நமக்கும் சீனாவுக்குமிடையே எல்லைத் தகராறு உட்பட, ஏராளமான அரசியல் சிக்கல்கள் இருக்கத்தான் செய்கின்றன. நல்ல சுமுகமான வர்த்தக உறவின் மூலம் இந்தச் சிக்கல்களுக்குத் தீர்வு காண முடியும் என்று பொருளாதார வல்லுநர்கள் நம்புகின்றனர்.
“இந்தியா - சீனா பொருளாதார உறவு, இரு நாடுகளுக்கு இடையே, முக்கிய மூலகமாக (element) இருக்கிறது” என்கிறார், சீனாவுக்கான இந்தியத் தூதர், தனது அதிகாரபூர்வ இணையப் பக்கத்தின் முகப்புரையில். ஆம். ‘அரசியல் சாதிக்காததைப் பொருளாதாரம் சாதித்துக் காட்டும்’. இதுதான் இன்று சர்வதேச அரங்கில் யதார்த்த நிலை.
இந்தியா சீனா
சீனாவிலிருந்து இந்தியாவுக்கு எலக்ட்ரானிக் சாதனங்கள், இயந்திரங்கள், இன்ஜின்கள், ஆர்கானிக் ரசாயனங்கள் ஆகியவை இறக்குமதியாகின்றன. இந்தியாவிலிருந்து சீனாவுக்கு பருத்தி, உலோகங்கள், காப்பர் ஆகியவை ஏற்றுமதியாகின்றன.
உலக வங்கிக்கு இணையாக, ஆசியாவின் 21 நாடுகள் சேர்ந்து அமைத்த ‘உள்கட்டமைப்பு முதலீட்டு வங்கி’ (Asian Infrastructure Investment Bank - AIIB) உருவெடுத்ததில், இந்தியாவுக்கும், சீனாவுக்கும் முக்கியப் பங்கு உண்டு. விவசாயம், உள் நாட்டுக் கட்டமைப்பு, மருந்துப் பொருட்கள், எலக்ட்ரானிக்ஸ் போன்ற துறைகளில் சீனாவும், பதப்படுத்தப்பட்ட உணவுப் பொருட்கள், பால் பொருட்கள் போன்றவற்றில் இந்தியாவும் பரஸ்பரம் சிறந்த பயன் பெற முடியும். கடந்த சில ஆண்டுகளில் பெருகிவரும் இரு நாட்டு வர்த்தக உறவுகள், மேலும் விரிவடையவே செய்யும். இந்தியா - சீனா உறவு வலுப்பெறுவதால், ஆசியப் பிராந்தியம் மொத்தமுமே மிகப் பெரிய அளவில் அசுர வளர்ச்சி அடையும் என்கின்றனர் பொருளாதார நிபுணர்கள்.
அமெரிக்கா - சீனா - இந்தியா இடையிலான வர்த்தக உறவுகள் வலுப்பட, எது தடையாக இருக்க முடியும்? இந்த நாடுகளில் ‘கொள்கை’ சார்ந்த பொருளாதார வல்லுநர்கள், தமக்குச் சாதகமாகப் பொருளாதாரக் கொள்கைகளை வகுத்து, அவற்றுக்கு ஏற்றாற்போல் மக்களைத் தயார் செய்வதில் முனைப்புடன் ஈடுபட்டுள்ளனர்.
தெளிவான பொருளாதார உறவு
அவ்வப்போது சில தலைவர்கள், ‘இவர்களின் கடையில் பொருட்களை வாங்காதீர்கள்’ என்று ‘உத்தரவு’ போடுவதைப் படிக்கிறோம். நல்லவேளையாக நம் நாட்டில் யாருமே இந்த உத்தரவுகளைச் சட்டை செய்வதில்லை. பொருளாதார அரங்கிலும், ‘உத்தரவு’ வல்லுநர்கள், தீவிரமாகச் செயல்படத் தொடங்கி உள்ளனர்.
‘அவரு பாட்டுக்கு ஏதோ ஒரு கடை வச்சி வியாவாரம் பண்ணிக் கிட்டு இருக்காரு... அவரு கிட்ட ஏன் வம்புக்குப் போறீங்க..? எங்களுக்குப் பிடிச்சிருக்கு.. நாங்க வாங்கறோம்’ என்று எத்தனை தெளிவாகச் சிந்திக்கிறார்கள் நம் சாமான்யர்கள். இதே தெளிவுதான், இந்திய அரசின் பொருளாதார உறவிலும் வெளிப்படுகிறது.
முன்பெல்லாம் சொல்வார்கள்: ‘இந்த நாட்டுடன் உறவு வைத்துக் கொள்ளுதல், மெல்லிய கயிறு மீது அந்தரத்தில் நடப்பது போன்றது; கரணம் தப்பினால் மரணம்தான்.’ ‘இந்த நாட்டை நம்பாதீர்கள்; அதனுடன் உறவு, இருமுனையும் கூரான கத்தியைப் போன்று, இரு கைகளையும் பதம் பார்த்துவிடும். மிகுந்த கவனத்துடன் செயல்பட வேண்டும்’. இந்த நிலை இப்போது அனேகமாக எங்குமே இல்லை. அவரவரின் பொருளாதாரக் கட்டாயங்கள், எல்லாவற்றையும் புரட்டிப் போட்டுவிட்டன. இப்போதெல்லாம் ஒவ்வொரு நாடும், அதன் ஆட்சியாளரும், மக்களின் வாழ்வாதாரத்தை முன்னேற்றாமல், உள் நாட்டில் தாக்குப்பிடிக்க முடியாத நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.
பிராந்திய நலன்களைப் பின்னுக்குத் தள்ளி, பொருளாதாரம் ‘ஓட்டுநர் இருக்கை’க்கு வந்துவிட்டது. இதுதான் இந்த நூற்றாண்டில் சாமான்யர்களுக்கான மிக நல்ல செய்தி.
‘அமெரிக்காவுடன் அதிக நெருக்கம் கூடாது’, ‘சீனாவை நம்பி ஏமாந்து போகாதீர்கள்’, ‘இந்த நாடுகளுக்கு உதவாதீர்கள்’, ‘இந்த உடன்படிக்கையில் கையெழுத்திடாதீர்கள்’ என்று பல திசைகளில் இருந்து, பல குரல்கள் எழுகின்றன.
எது சரி, எது தவறு?
‘சர்வதேசச் சந்தையில் கச்சா எண்ணெயின் விலை இவ்வளவு குறைந்தும் நாம் ஏன் குறைக்கவில்லை..?’ ‘அவர்களுக்கு வேண்டுமானால் அந்த நாட்டின் மீது பொருளாதாரத் தடை விதித்துக்கொள்ளட்டும்; நாம் ஏன் அதை ஆதரிக்க வேண்டும்...?’ இப்படிப் பல கேள்விகள் எழுகின்றன. இவற்றில் நியாயம் உள்ளதா இல்லையா..?
ஏற்கனவே சொல்லியிருந்தாலும் மீண்டும் வலியுறுத்துகிறோம். பிற நாடுகளுடன் இந்தியா மேற்கொள்ளும் பொருளாதார, வர்த்தக உறவுகள் குறித்த பல அம்சங்களையும் விரிவாக ஆராய்ந்து ஏராளமான கட்டுரைகள், ‘தி இந்து’ போன்ற பத்திரிகைகளிலும், இணையப் பக்கங்களிலும் விரவிக் கிடக்கின்றன. இயன்றவரை இவற்றை எல்லாம், விருப்பு வெறுப்பின்றி, படிக்கவும்; ஆழமான புரிதலும், கூடவே, பல கேள்விகளுக்குத் தெளிவான பதிலும் கிடைக்கும்.
‘பிரத்யேகச் சொற்கள்’ என்னும் அடுத்த கட்டத்துக்கு நகர்வோம். பொருளாதாரப் பாடத்தின் நிறைவுப் பகுதிக்கு இது நம்மை இட்டுச் செல்லும். மொத்த உள்நாட்டு உற்பத்தி (GDP), தனி நபர் வருமானம் (per capita income), வறுமைக் கோட்டுக்குக் கீழே (Below Poverty Line - BPL) என்று பல சொற்கள் பரவலாகக் கையாளப்படுகின்றனவே, இவற்றுக்கு எல்லாம் என்ன பொருள்? பார்ப்போம்.
வளரும்