

வாழ்வின் வண்ணங்கள் எல்லோருக்கும் வாய்ப்பது இல்லை. ஆனால், துயரங்களை தூர எறிந்து விட்டு உயரங்களைத் தொடுபவர்களும் இருக்கிறார்கள். அவர்கள் அசாதாரண, அற்புத மனிதர்கள். அவர்களுள் ஒருவர்தான் கதைச் சொல்லி ஸ்ரீகாந்த்!
எல்லோரும் சிறகை விரித்து பறக்கும் பதின் பருவத்தில் ஸ்ரீகாந்துக்கு பார்வை பறிபோனது. மனம் தளராத அவர், எட்டி வைத்த அடிகள் சாமானியனைவிட மிக அதிகம். தற்போது 48 வயதாகும் ஸ்ரீகாந்த், இந்திய உணவு பாதுகாப்புக் கழகத்தில் வரவேற்பாளராக பணியாற்றுகிறார். பொதுவாக பலரும் நிரந்தர, நிம்மதியானப் பணி கிடைத்துவிட்டால் வாழ்வின் வழக்கமான வட்டத்தில் தேங்கிவிடுவார்கள். ஆனால், ஸ்ரீகாந்த் அப்படி தேங்கிவிடவில்லை. அதனால் தான் இன்று ஸ்ரீகாந்த் ஒரு சுவையான, சுவாரஸ்யமான கதைச் சொல்லி!
சிறு வயதில் தனது வெறுமையைப் போக்கிய, தன்னம்பிக்கையை ஊட்டிய வானொலிக் கதைகளையும் இதரத் தகவல்களையும் இதயக்கூட்டில் தேக்கி வைத்து, இன்றைக்கு உலகம் முழுவதுமான குழந்தைகளுக்கு, பொதுமக்களுக்கு சிறந்த வானொலிக் கதைச் சொல்லியாகத் திகழ்கிறார் ஸ்ரீகாந்த். அவரிடம் உங்கள் கதையைச் சொல்லுங்களேன் என்றோம்.
"பார்வையை இழந்த பின்பு, என் அப்பா வாங்கிக்கொடுத்த மர்ஃபி ரேடியோதான் என் உலகம். பி.பி.சி. வானொலியில் உலகம் அழியப்போகிறது என்கிற செய்தியை கேட்கத் தொடங்கியதில் இருந்து இன்றுவரை ரேடியோ என் பிரிக்க முடியாத ஆருயிர் நண்பன். கண்ணில் இழந்த உலகத்தைவிட வானொலியால் நான் பெற்ற உலகம் மிகப் பெரியது. வாய்ஸ் ஆஃப் அமெரிக்கா, லண்டன், நெதர்லேண்ட் வானொலிகளில் ஒலிபரப்பாகும் ஆங்கில நிகழ்ச்சிகளை கேட்க ஆரம்பித்தேன். அவற்றில் ஒலிபரப்பான துப்பறியும் நாடகக் கதைகள் என்னுடைய கதை சொல்லும் ஆர்வத்தை அதிகரிக்கச் செய்தன. கிறிஸ்டி, கிறிஸ்டல் போன்ற ஆங்கில எழுத்தாளர்களின் கதைப் புத்தகங்களை ஆடியோ வடிவில் வாங்கி தொடர்ந்து கேட்டேன்.
அப்போதுதான் இதை எல்லாம் நான் கேட்டு என்ன பலன்? என்று தோன்றியது. ஏனெனில் பெறுவதைவிட கொடுப்பதில்தானே அதிக இன்பம். அதனால், நான் கேட்டக் கதைகளை இன்னும் செறிவேற்றி, சுவாரஸ்யம் கூட்டி பிறருக்கு சொல்லலாம் என்று நினைத்தேன். எனக்கு அகில இந்திய வானொலியும் எம்.ஓ.பி. கல்லூரியின் வானொலியும் கைகொடுத்தன. அவற்றில் கதைத் தொகுப்பாளரானேன்.
அலிஸ்டர் குக்கு, டொனால்ட் ஜெம்ஸ், பி.ஜி. வுட் ஹொவுஸ் ஆகியோரின் கதைகளைக் கேட்ட பின்னரே கதை சொல்வதில் இன்னும் ஆர்வம் அதிகரித்தது. 2009 முதல் 2011 வரை லண்டன் வானொலி தமிழ்ப் பிரிவில் பழமுதிர், பிருந்தாவனம், பிரிட்டிஷ் கான்ஸ்டியுஷன் போன்ற நிகழ்ச்சிகளை வழங்கினேன். அகில இந்திய வானொலியின், பார்வை இழந்த முதல் தொகுப்பாளர் நானே.
முயற்சியும் உழைப்புமே நம்மை மிகப் பெரிய இடத்தை அடைய வைக்கும். என் உழைப்பால் நான் பெற்ற கல்விதான் என்னை இங்கு கொண்டு வந்து அமர்த்தியிருக்கிறது. கஷ்டப்பட்டு அடைந்தால் தான் வாழ்க்கையின் சுவை அதிமாக இருக்கும். என் வாழ்வின் சுவையும் மிக மிக அதிகம்." கபடமற்ற சிரிப்பால் மனதை நிறைக்கிறார் ஸ்ரீகாந்த்!