

சூப்பர் ஹீரோக்கள் மரித்து வரும் காலம் இது. உலகில் மாற்றத்தைக் கொண்டுவருவதற்காகக் கையிலிருந்து நீளும் உலோகக் கத்திகளை நீட்டி வேட்டைக்காரன் போலச் செயல்பட்ட வோல்வரீனின் தலைக்கே விலை நிர்ணயிக்கப்பட்டு விடுகிறது. சூப்பர்ஹீரோ வோல்வரீனின் கதி என்ன ஆனது?
யார் இந்த வோல்வரீன்: மரபணுக்களின் அமைப்பால் அசாதாரண சக்தி கொண்ட மனிதர்களே மியூட்டன்ஸ். இவர்கள்தான் எக்ஸ் மென் என்று அழைக்கப்படுகின்றனர். இவர்களில் ஒருவன்தான் இந்த வோல்வரீன். அமெரிக்காவின் புகழ்பெற்ற காமிக்ஸ் எழுத்தாளர் ஸ்டான் லீயால் 1963-ம் ஆண்டு உருவாக்கப்பட்ட இந்த சூப்பர் ஹீரோக்களை மையமாக வைத்துப் பல காமிக்ஸ் கதைகளும், திரைப்படங்களும் உருவாக்கப்பட்டுள்ளன.
கதைச் சுருக்கம்: ஒரு வைரஸ் காரணமாகத் தன்னுடைய உடனடி குணமாகும் தன்மையை இழந்த வோல்வரீனை, உயிரோடு கொண்டு வருபவர்களுக்கு ஓர் அசாத்தியமான தொகை பரிசாக அறிவிக்கப்படுகிறது. இது நாள்வரை வேட்டைக்காரனாக இருந்தவனை வேட்டையாடப் பலரும் கிளம்புகிறார்கள். இதனால் கனடா, அமெரிக்கா, ஜப்பான் என்று உலகம் சுற்றும் எக்ஸ் மேனாக மாறும் லோகன், தன் தலைக்கு விலை பேசியது யார் என்ற கேள்விக்குப் பதிலைக் கண்டுபிடிக்கும்போது, அதற்கான பதிலுடன் அவனது மரணமும் அறிமுகம் ஆகிறது.
அலசல்: தன்னை எதிர்கொள்ளும் பல கூலிப்படைகளை நிர்மூலமாக்கி அயர்ந்துவிட்ட வோல்வரீன், தன்னை உயிரோடு கொண்டுவரக் கட்டளையிட்டது யார் என்று தேட ஆரம்பிக்கும்போது கதை சூடுபிடிக்கிறது. தன்னிடம் சூப்பர்ஹீரோ சக்தி இல்லையென்பதைத் தெரிந்துகொண்ட பழைய எதிரிகள் பலரையும் இந்தத் தேடுதல் வேட்டையில் சந்திக்கும் வோல்வரீன், சில இடங்களில் வாழ்க்கையைப் பற்றிய புரிதலைத் தத்துவார்த்தமாகப் பேசி நெகிழவைக்கிறான்.
சூப்பர் ஹீரோக்களின் மரணம் ஒருவிதமான கவித்துவ அழகுடன் சொல்லப்பட்டு வருவதே நடைமுறை. கோர்ட் வாசலில் அமெரிக்க மக்கள் கண்முன்னே கொல்லப்படும் கேப்டன் அமெரிக்கா (2007), மெட்ரோபோலிஸ் நகர இடிபாடுகளில் உயிரிழக்கும் சூப்பர்மேன் (1992) என்று நம்மை உணர்ச்சிவசப்பட வைக்கும் முறையிலேயே அவை எழுதப்பட்டு இருக்கும். ஆனால் சாட்சிகள் யாருமில்லாமல், அமெரிக்காவின் அந்தகாரப் பாலைவனத்தில் சாகும் வோல்வரீனின் மரணம் மேலே குறிப்பிட்ட அளவுகோலில் குறைந்த மதிப்பெண்களே பெறும்.
“நான் வாழ்க்கையில் ஒரு மாற்றத்தைக் கொண்டு வர முயன்றேன். கொல்வதைத் தவிர நீ வேறு என்ன சாதித்துவிட்டாய்” என்று கேள்வி கேட்டபடியே உயிரிழக்கும் வோல்வரீனின் மரணம், வில்லன் கோர்னிலியசுக்குப் பதிலளிக்கும் வகையில் அமைந்திருக்கிறது.
இது கதாசிரியர் சார்லஸின் கதை சொல்லும் பாணிக்கு நல்ல எடுத்துக்காட்டு. அமெரிக்காவில் வழக்குரைஞராகப் பணியாற்றும் சார்லஸ் ஸ்யூலை, கடந்த ஐந்து வருடங்களாக காமிக்ஸ் கதைகளை எழுதிவருகிறார். நேரடியான, எளிய கதை சொல்லும் பாணியின் மூலம் இந்தக் கதையைச் சிறப்பாக வடிவமைத்திருக்கிறார்.
- சார்லஸ் ஸ்யூலை
கதை முழுவதுமே விளக்கங்களால் நகர்த்தப்படாமல், வசனங்களைக்கொண்டே சொல்லி இருப்பதற்கும், மிகக் குறைந்த அளவு வசனங்களைப் பயன்படுத்தி ஓவியங்களுக்கு முக்கியத்துவம் கொடுத்ததற்கும் இவரைப் பாராட்டியே ஆக வேண்டும்.
அற்புதமான ஓவியங்களின் மூலம் கதையின் தரத்தை ஓவியர் ஸ்டீவ் மெக்னீவன் பன்மடங்கு உயர்த்தியிருக்கிறார். நிகழ்காலத்தில் இருந்து கடந்த காலத்தை உணர்த்த வண்ணத்தைத் திறம்படப் பயன்படுத்தியமைக்கும், வோல்வரீனின் கடைசித் தருணங்களைச் சினிமா ஃபிளாஷ்பேக் போல நமக்குக் காட்டியதற்கும் பாராட்டலாம்.
ஒரு அசாதாரண சூப்பர்ஹீரோவின் மரணமும், அவர் வாழ்ந்த உயரத்துக்குச் சொல்லப்பட வேண்டும் என்ற காமிக்ஸ் உலக விதியின்படி பார்த்தால், இந்தக் கதைத் தொடர் சாதாரண அளவில்தான் அமைக்கப்பட்டிருக்கிறது. அதேவேளை நாயகனின் மரணச் சம்பவத்தில், அவர் மீண்டு(ம்) வர ஒரு பின்வாசல் கதவையும் திறந்துவைத்திருக்கிறார் கதாசிரியர்.
40 வயதில் வாழ்க்கை ஆரம்பமாகிறது என்பார்கள். ஆனால் 1974-ம் ஆண்டு முதலில் தோன்றிய வோல்வரீனுக்கு நாற்பதாவது வயதில் மரணம் அறிமுகமானது நகைமுரண்தான்.
தீர்ப்பு: வாசிக்கலாம். மூன்று தோட்டாக்கள் (3/6).
தீர்ப்பு:
வாசிக்கலாம். மூன்று தோட்டாக்கள் (3/6).
தலைப்பு : Death of Wolverine (Marvel Comics, English, USA. 4 Part Mini Series
கதை : சார்லஸ் ஸ்யூலை
ஓவியம் : ஸ்டீவ் மெக்னீவன்
வெளியீடு : மார்வல் காமிக்ஸ் (குறுந்தொடர் 1-4, செப்டம்பர் அக்டோபர் 2014)
அமைப்பு : சூப்பர் ஹீரோ காமிக்ஸ் (18 +)
கதைக்கரு : ஒரு சூப்பர் ஹீரோவின் மரணம்
கட்டுரையாளர்,
காமிக்ஸ் ஆர்வலர், பதிப்பாளர்.
தொடர்புக்கு: prince.viswa@gmail.com