Last Updated : 14 Apr, 2017 12:28 PM

 

Published : 14 Apr 2017 12:28 PM
Last Updated : 14 Apr 2017 12:28 PM

காமிக்ஸ் தில்லுமுல்லுகள் 02 - லாரன்ஸ் டேவிட்டின் ‘அங்கிள்’ யார்?

தன் முயற்சியில் சற்றும் மனம் தளராத விக்ரமன், மீண்டும் மரத்தின் மீதேறி, அதில் தொங்கும் உடலைக் கீழே வீழ்த்தினான். பிறகு அது வேதாளம் என்பதை உணர்ந்துகொண்ட விக்ரமன், மீண்டும் அதைக் கீழே கொண்டுவந்து, முதுகில் சுமந்து சென்றான். அப்போது அந்த வேதாளம் பேச ஆரம்பித்தது. “மன்னா, நாம் நடக்கும்போது, பொழுதுபோவதற்காக நான் ஒரு கதை சொல்கிறேன்,” என்று பேச ஆரம்பித்தது.

வேதாளம்: “மன்னா, தமிழில் வெளியான காமிக்ஸ் கதைகளில், என்னைப் போலவே இறந்துபோன ஒரு கதாபாத்திரத்துக்கு, போலியாக உயிர்கொடுத்து, சுமந்து சென்ற சிங்கமுத்துவைப் பற்றி சொல்கிறேன், கேள்”. தமிழ் காமிக்ஸ் உலகின் மும்மூர்த்திகளில் ஒரு ஜோடி, சி.ஐ.டி. லாரன்ஸ் & ஜூடோ டேவிட். இவர்களது கதைகளை 1972 முதல் ஒரு நிறுவனம் தமிழில் வெளியிட்டு வருகிறது.

ஒரு கட்டத்தில், இந்த ஜோடியின் ‘ஒரிஜினல்’ கதைகள் தீர்ந்து போக, சுமாரான வேறு சில ஹீரோக்களின் கதைகளை வெளியிட்டதால், விற்பனை மந்தமாகி, பல காமிக்ஸ் புத்தகங்கள் நிறுத்தப்பட்டுவிட்டன. அப்போது வாசகர்களும் பழைய லாரன்ஸ் – டேவிட், ஜானி நீரோ, ஸ்பைடர் கதைகளையே விரும்பி கேட்டனர். அப்போது என்ன நடந்தது தெரியுமா? தனது எடிட்டோரியல் ‘புதிய’ லாரன்ஸ் டேவிட் கதைகளை ‘தயாரித்து’ வெளியிடும் என்று அறிவிக்கப்பட்டது. ஆனால் என்ன நடந்தது தெரியுமா, மன்னா?

அமெரிக்காவிலிருந்து வெளியாகும் கோல்ட் கீ காமிக்சில் 1960-களில் பிரபலமான The Man from UNCLE என்ற காமிக்ஸ் தொடரின் கதைகள் பழைய புத்தகக் கடையில் வாங்கப்பட்டன. (இந்த The Man from UNCLE கதைதான் சமீபத்தில் கை ரிட்ச்சி இயக்கத்தில் திரைப்படமாகவும் வெளியானது). அதில் வரும் இல்யா குர்யாகின் என்ற ரஷ்ய ஹீரோவுக்கு மொட்டை அடிக்கப்பட்டது. ஆமாம் மன்னா, வெட்டி ஒட்டும் ஓவியர்களை வைத்து, அந்தக் கதாபாத்திரத்தின் தலையிலிருந்த முடி வெட்டி எடுக்கப்பட்டு மொட்டையடிக்கப்பட்டது.

‘தி மேன் ஃப்ரம் அங்கிள்’ கதைகளுக்கு உரிமை பெற்ற கோல்ட் கீ காமிக்ஸ், எம்.ஜி.எம். திரைப்பட நிறுவனம், லாரன்ஸ் டேவிட் கதைகளுக்கு உரிமை பெற்ற டிசி காமிக்ஸ், டைம் வார்னர் திரைப்பட நிறுவனம் ஆகிய அனைவரும் இப்படி ஏமாற்றப்பட்டனர். தமிழில் முல்லை தங்கராசன் எடிட் செய்து வெளியிட்டுப் புகழ்பெற வைத்த லாரன்ஸ் டேவிட் கதை, இப்படி ‘தயாரித்து’ வெளியிடப்பட்டது. இதனால், தொய்வுற்றுக் கிடந்த காமிக்ஸ் புத்தகங்கள் விற்பனையில் சக்கை போடு போட்டதென்னவோ உண்மைதான்.

இப்படிக் காமிக்ஸ் வெளியிடுவது குற்றம்தானே? இதற்குப் பதில் சொல்லவில்லையென்றால், உன் தலை சுக்கு நூறாக வெடித்துச் சிதறிவிடும் விக்ரமா” என்று முடித்தது வேதாளம்.

‘ஆமாம், இல்லை’ என்று சுருக்கமாகப் பதில் கூற வேண்டிய அந்த இடத்தில், தானும் ஒரு ‘இலக்கியவியாதி’யாக உருவெடுக்கும் ஆசையில் இருந்த விக்ரமன், “ரத்தப் பந்தங்களுக்கிடையே துளிரும் வெறுப்பென்பது, ஒரு வசந்தக் காலத்து நாளின் மேகமூட்டம்போல. மேகங்கள் விலகிடும்போது, கதிரவனின் மெல்லிய வெப்பமும் வெளிச்சமும் மட்டுமே அங்கே விரவியிருக்கும் என்பதை அறியாதோர் யாரோ? இருப்பவர் உளரோ?” என்றெல்லாம் சம்பந்தா சம்பந்தமில்லாமல் விக்ரமன் பேசுவதைக் கண்ட வேதாளம் வெறுப்படைந்து, மீண்டும் மரத்தில் சென்று ஏறிக்கொண்டது. Man From UNCLE என்பது மெட்ரோ கோல்ட்வின் மேயர் மற்றும் வார்னர் பிரதர்ஸ் குழுமத்தின் உரிமை பெற்ற ஒரு கதாபாத்திரம். Gold key Publications: The 10 Little UNCLE’s (Dell Comics #5, Mar 1967) Gold key Publications: The Floating People Affair (Dell Comics #8, Sept 1967) லாரன்ஸ் டேவிட்: வார்னர் குழுமத் தின் டிசி காமிக்ஸ் நிறுவன உரிமை பெற்ற பிரிட்டிஷ் காமிக்ஸ் ஹீரோ. தமிழ் காமிக்ஸ் மும்மூர்த்திகளில் ஒருவராகக் கருதப்படுபவர். பரலோகப் பயணம் (முத்து காமிக்ஸ், வெளியீடு எண் #194) பறந்து வந்த பயங்கரவாதிகள் (முத்து காமிக்ஸ், வெளியீடு எண்#197)

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x