சாதிக்கும் ‘கடல்’ கன்னி..!

சாதிக்கும் ‘கடல்’ கன்னி..!
Updated on
2 min read

“வாழ்க்கையில நமக்குப் பிடிச்சதைச் செய்றதுக்கு நேரம்,காலம் எல்லாம் பார்க்க முடியாது. அப்படிப் பார்த்திருந்தா இன்னிக்கு நான் ஒரு சாம்பியன் ஆகியிருக்க முடியாது!” தெளிவாக வந்து விழுகின்றன நேத்ராவின் வார்த்தைகள்.

சென்னையைச் சேர்ந்த நேத்ரா அலைச்சறுக்குப் போட்டியில் கலந்து கொள்வதற்காகத் தனது பள்ளிப் படிப்பையே கைவிட்டவர். அதன் பலனாக ‘லேசர் ராடியல்’ பிரிவில் தொடர்ச்சியாக 3 ஆண்டுகள் தேசிய சாம்பியன்!

19 வயதாகும் நேத்ரா கடந்த 3 ஆண்டுகளில் ஆசிய, சர்வதேச அலைச்சறுக்குப் போட்டிகளில் தங்கம், வெள்ளிப் பதக்கங்களைக் குவித்துக் கலக்கிவருகிறார். இப்போது, ஒரு பக்கம் 2020 ஒலிம்பிக் போட்டிக்காக, மறுபக்கம் பிளஸ் 2 தேர்வு என பேலன்ஸ் செய்து தன்னைத் தயார்படுத்திவருகிறார் நேத்ரா. அவருடன் பேசியதிலிருந்து…

“எனக்குக் கடலையும் அலைகளையும் பார்க்கவும் அதில் விளையாடவும் ரொம்பப் பிடிக்கும். 2011 சம்மர் கேம்ப் நடந்தப்போ அலைச்சறுக்கு விளையாட்டுல கலந்துகிட்டேன். அப்போ இருந்து ‘செயிலிங்’ மேல ஒரு பெரிய கிரேஸ். அப்புறம் அம்மா, அப்பாகிட்ட கேட்டு தொடர் பயிற்சி எடுத்துக்கிட்டேன். தேசியப் போட்டிகள், அதைத் தொடர்ந்து சர்வதேசப் போட்டிகளில் கலந்துக்க ஆரம்பிச்சேன்.

பதக்கங்கள் குவிக்கத் தொடங்கினப்போ, அம்மா, அப்பாகிட்ட உட்கார்ந்து பேசினேன். நான் அலைச்சறுக்கு விளையாட்டுல தொடர விரும்புறேன்னு சொன்னேன். அவங்களுக்கு அதிர்ச்சியா இருந்தாலும் ஒப்புக்கிட்டாங்க..!” என்பவர் அது முதல் பள்ளிப் படிப்பை நிறுத்தி விட்டு முழுநேர அலைச்சறுக்கு விளையாட்டு வீரராக மாறியிருக்கிறார்.

“அலைச்சறுக்கு விளையாட்டைப் பொறுத்தவரை நிறைய முறை போட்டிகளில் கலந்துக்கிட்டாதான், எதிர்க் காற்றில் லாவகமா படகைச் செலுத்துறதைக் கத்துக்க முடியும். இந்த விளையாட்டைப் பொறுத்தவரை சரியான மனநிலை இருக்கணும். சரியான நேரத்துல சரியான முடிவெடுக்கலைன்னா தோத்துடுவோம். அதனால வெளிநாட்டுல விளையாடப் போகும்போது அங்க இருக்கிற பருவநிலை, காற்றின் திசை எல்லாத்தையும் தெரிஞ்சிட்டே போகணும்!” என்பவர் இஸ்ரேல் சென்று சர்வதேச அளவிலான பயிற்சியையும் பெற்று வந்திருக்கிறார்.

“எனக்குக் கண் முன்னாடி இருக்கும் முதல் சவால் சாப்பாடுதான். நம்ம உடலைச் சரியான அளவில் வெச்சிக்க சாப்பாட்டில் ரொம்பக் கவனமாக இருக்கணும்” என்று வருத்தப்படும் நேத்ராவுக்கு வேறொரு கவலையும் தொடர்கிறது. மூன்று புறமும் கடல் சூழ்ந்திருந்தாலும், அலைச்சறுக்குப் போட்டிகளில் சர்வதேசப் போட்டிகளில் வெற்றி பெறும் இந்தியரின் எண்ணிக்கைக் கையளவுதான். ஒரு படகின் விலையே 8 லட்சம் என்பதால், இதில் பங்கேற்கும் வீரர்கள் பெரும்பாலும் ஸ்பான்சர்களிடம் உதவி பெற்றுத்தான் போட்டிகளில் பங்கேற்கிறார்கள் என்பவர், மார்ச் மாதம் நடைபெறும் பிளஸ் 2 தேர்வு முடிந்ததும் அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள ஏஷியன் கேம்ஸ் போட்டியை ஒரு கை பார்க்க இருக்கிறாராம்.

எதிர் நீச்சலடி!

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in