

மகாகவி மில்டன் உருவகப்படுத்திய ‘பூலோக சொர்க்கம்’ இதுதானோ என்ற பிரமையை உருவாக்கும் ஓர் இடம் தமிழ்நாட்டு எல்லைக்குள் இருக்கிறது. அந்தப் பகுதியில் மலைப்பாதையில் ஏறும்போது இதை உணர முடிந்தது.
பண்டைய சேர நாட்டு மலைப் பகுதியான ‘டாப்-ஸ்டேஷனை’(மூணாறு அருகில்) மலையேற்றத்தின் மூலம் அடைவதற்குத் தேனி மாவட்டம் போடிநாயக்கனூரில் ஒன்றுகூடினோம். வாகனங்கள் மூலம் பேஸ்-கேம்ப் பகுதியான குரங்கணி மலைப் பகுதியை அடைந்தோம். அதன் பிறகு காலை 9 மணிக்குத் தொடங்கிய எங்கள் மலையேற்றம் மாலை 4 மணி அளவில் டாப்-ஸ்டேஷனில் முடிவடைந்தது. இந்த ஏழு மணி நேர மலையேற்றம் பல புதுமையான அனுபவங்களைத் தந்தது.
புல்வெளிக் காட்டுக்குள்…
முன்பின் அறிமுகமில்லாத மருத்துவர்கள், பொறியாளர்கள், இயற்கை ஆர்வலர்கள், இளம் மாணவர்கள், சமூக ஆர்வலர்கள், பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த மாணவர்கள் என 25 பேர் கொண்ட குழுவாக ஏறினோம். தேவையான உணவுப் பொருட்கள், தண்ணீர், மருந்துகள் அடங்கிய முதுகுப் பைகளுடன் எங்கள் பயணம் உற்சாகமாகத் தொடங்கியது. கண்ணுக்கெட்டிய தூரம்வரை மரங்கள் அடர்த்தியாகவும் குறைவாகவும் காட்சியளித்தன, சூரியனின் ஒளிச் சிதறல், மரங்களின் நிழல் வீச்சு காரணமாக அங்கிருந்த மலைகள் பல வண்ணங்களில் காட்சி அளித்தன.
சிறிது தூரம் மலை ஏறிய பிறகு கீழே குரங்கணி கிராமப் பகுதியில் இருந்த தென்னை மரங்கள் பச்சைப் புள்ளிகளாகக் காட்சி அளித்தன. பின்னர் காட்டுப் பகுதியில் அமைக்கப்பட்டிருந்த சிறிய மூங்கில் இல்லத்திலும், அதன் அருகே இருந்த ஆலமரத்தடியிலும் இளைப்பாறினோம். பசுமையும் வறட்சியும் கலந்திருந்த பாதையைத் தாண்டி, உயரமாக அமைந்திருந்த மிகப் பெரிய ஒற்றைப் பாறை எங்களுக்கான ‘மதிய உணவு மேசை’யாக மாறியது.
மதிய உணவு ஓய்வுக்குப் பின்னர் மலையேற்றம் தொடர்ந்தது. திடீரென அரை கிலோமீட்டர் தூரத்துக்கு மலை இடுக்குகளில் மரகதங்கள் தூவியதைப் போல் பசும்புல் தரை பிரகாசமாகத் தென்பட்டது. அது ஒரு புல்வெளிக் காடு. ஆங்காங்கே குதிரைகள் பொதி மூட்டைகளுடன் மேலும் கீழும் சென்றுகொண்டிருந்தன. அப்பகுதி மலைவாழ் மக்கள் எங்களைவிட மும்மடங்கு வேகமாக மலையேறியதையும் அடிக்கடி எதிர்கொண்டோம். ஒரு குறிப்பிட்ட மலைப் பகுதியில் அதிக அளவில் ‘எலுமிச்சம் புற்கள்’காணப்பட்டன.
மேலும் ‘போதைப்புல்’எனப்படும் ஒரு வகையான புல்லினத்தையும் அங்கிருந்த முதியவர் இனம் காட்டினார். வியர்வை ஒருபுறம் ஆறு போல வழிந்தோட, அயர்ச்சியைத் தள்ளிவைத்து முயற்சியுடன் தொடர்ந்து மலையேறினோம். அங்கே அவ்வப்போது சிறகடித்த உழவாரக் குருவிகளின் சுறுசுறுப்பும், கொண்டைக் குருவிகளின் ஒலிகளும் எங்களுக்கு உற்சாகமூட்டின. மிகுந்த களைப்புடன் டாப்-ஸ்டேஷனை அடைந்தோம்.
சிறப்பு உணவு
மலையேற்றத்தின் காரணமாக உண்டான நீரிழப்பை ஈடு செய்வதற்காக ‘மலைத்தேன் கலந்த எலுமிச்சை சாறு’ அங்கே கிடைத்தது. பன்னாட்டுக் குளிர்பானங்கள் விற்பனைக்கு இருந்தாலும், ‘தேன் – எலுமிச்சை’ சாறுக்கே மவுசு அதிகம். பழ வகைகளில் ‘சீமை கத்திரிப்பழம்’ அங்கே வித்தியாசமான துவர்ப்பு-புளிப்புச் சுவையோடு ரசிக்கவைத்தது. கடுங்காப்பி எனப்படும் கட்டன் சாயா, கேரளத்துப் புட்டு – கடலை, ஆப்பம் அனைத்தும் கிடைத்தன. இரவு உணவாக அப்பகுதியில் கிடைத்த சிறப்பு உணவை எடுத்துக்கொண்டோம். முன்னிரவில் நெருப்பு மூட்டிக் குளிர் காய்ந்துவிட்டு, பின்னிரவில் கூடாரத்திடம் சரணடைந்து உறங்கினோம்.
இதய நோயை விரட்டலாம்
நம் முன்னோர்களின் சரீரமும் மனமும் ஆரோக்கியமாக இருந்ததற்கு மலையேற்றமும் முக்கியக் காரணமாக இருந்திருக்கலாம். மலையேற்றத்தின் மூலம் ரத்தச் சுற்றோட்டம் சீராக நடைபெற்று, இதயமும் சிறப்பாகச் செயல்படும். ஓர் ஆண்டில் ஐந்து, ஆறு முறை மலையேற்றம் செய்தால், இதய நோய்கள் வருவதற்கான வாய்ப்புகள் குறைவு என்கின்றன மருத்துவ ஆய்வுகள். இருப்பினும் இதய நோய் உள்ளவர்கள், சுவாசக் கோளாறு உடையவர்கள், கால்மூட்டு பாதிக்கப்பட்டவர்கள் மலையேற்றத்தைத் தவிர்க்க வேண்டும். மலையேற்றத்துக்கு வயது ஒரு தடை அல்ல என்பதை எங்களோடு பயணித்த நாற்பத்தைந்து வயது ‘இளைஞ’ரும், ‘இளம்பெண்’ணும் நிரூபித்தார்கள்.
பூலோக சொர்க்கம்
காலை ஆறு மணி அளவில் சூரியோதயக் காட்சியைப் பார்ப்பதற்காக ஆவலுடன் காத்திருந்தோம். இருபெரும் மலைகளுக்கு நடுவே நாங்கள் ஏறி வந்த மலைகளைக் கனமான மேகக்கூட்டம் முழுவதுமாக மறைத்திருந்தது. அந்தக் காட்சி மேகத் திட்டுக்களின் மேல் நாம் நின்றுகொண்டிருப்பது போன்ற ஓர் உணர்வைக் கொடுத்தது. சற்று நேரத்தில் கண்களுக்குக் கீழே, உயர்ந்த மலைகளை முத்தமிட்டுக்கொண்டிருந்த பஞ்சுப்பொதி மேகங்களின் இடையே சூரியனின் செவ்விரல்கள் மெல்லிய கம்பிகளாகத் தன் வருகையை அறிவித்தன. பின்னர் வெண்மையான மேகமூட்டத்திலிருந்து செங்கதிர்களுடன் சூரியன் வெளி வந்ததைப் பார்க்கக் கண்கொள்ளாக் காட்சியாக இருந்தது. மகாகவி மில்டன் உருவகப்படுத்திய ‘பூலோக சொர்க்கம்’ இதுதானோ என்ற பிரமை உண்டானது.
பறவைகளின் புகலிடம்
சோலைக் காடுகள், புல்வெளிக் காடுகள் என்ற இரண்டு பிரிவுக்குள் இப்பகுதியின் காடுகள் வகைப்படுத்தப்பட்டுள்ளன. மலையேற்றப் பாதை மட்டுமன்றி, மூணாறிலிருந்து டாப்-ஸ்டேஷனுக்குப் போக்குவரத்து வசதியும் உள்ளது. சாலை வசதிகள் ஏற்படுத்தப்படாத காலத்தில், டாப்-ஸ்டேஷனிலிருந்து சென்ட்ரல்-ஸ்டேஷன் வழியாக, அடிவாரப் பகுதிக்குத் (பாட்டம்-ஸ்டேஷன்) தேயிலைப் போக்குவரத்து நடைபெற்றுள்ளது.
இங்கேயிருக்கும் மலைப் பகுதியில் கொம்புப் புலி (Nilgiri Marten-நீலகிரி மார்டன்) எனப்படும் சிறு ஊனுண்ணி காணப்படுவதாகச் சொல்லப்படுகிறது. நீலகிரி காட்டுப்புறா (Nilgiri wood pigeon), வெண்மார்பு சிரிப்பான் (Kerala laughing thrush), நீலகிரி குட்டை இறக்கையன் (Nilgiri blue robin), சின்ன தேன்சிட்டு (Crimson sun bird), ஈப்பிடிப்பான் (Black and orange flycatcher), கொண்டைக்குருவி போன்ற பறவை இனங்கள் இந்த மலைப் பகுதிகளில் பறந்து திரிகின்றன.
மகிழ்ச்சி தந்த பயணம்
காலை பதினொரு மணி அளவில், டாப்-ஸ்டேஷன் மலைப் பகுதியிலிருந்து வேறு பாதையில் இறங்கத் தொடங்கினோம். முதல் நாள் மலை ஏறிய களைப்பில், மலை இறங்குவது சற்றே கடினமாக இருந்தது. சுமார் 2 மணி அளவில் ‘சென்ட்ரல் ஸ்டேஷன்’ எனப்படும் மையப் பகுதியில் மதிய உணவை முடித்துக்கொண்டு, சிறிது நேரத்தில் உருகிய வெள்ளியாய் வழிந்துகொண்டிருந்த அருவியில் களைப்பு தீரக் குளித்தோம். குளிர்ச்சியோடு மகிழ்ச்சியையும் அருவி அள்ளிக் கொடுத்தது. அந்த மகிழ்ச்சியை மனதில் அள்ளிக்கொண்டு சுமார் 5 மணி அளவில், எங்கள் மலைப் பயணம் வெற்றிகரமாக நிறைவடைந்தது. புதிய நண்பர்கள் கிடைத்த மகிழ்ச்சியில், குழு ஒளிப்படத்துடன் விடைபெற்றோம்!