

காரை விட்டுக் கீழே இறங்கிப் பேட்லிங் பலகையை எடுத்துத் தயார் செய்தேன். பாதுகாப்புக் கவசம் போன்றவற்றை அணிந்துகொண்டு பேட்லிங் செய்வதற்கு முந்தைய ஆயத்தங்களைச் செய்து முடித்தேன். முதலில் ஆழமற்ற ஏரிப் பகுதியில் வலம் வந்தேன். பிறகு முறைப்படியான பேட்லிங்கைத் தொடங்கினேன்.
கண் மட்டும் வெளிக்காற்று படும்படி இருந்தது. உடலின் எஞ்சிய பாகங்களை முழுமையாக உடையால் மூடி இருந்தேன். காற்று பலமாக வீசிக்கொண்டிருந்தது மட்டுமல்லாமல், கடுமையான குளிரும் இதற்கு முக்கியக் காரணம். கடல் மட்டத்திலிருந்து உலகின் உயரமான ஒரு பகுதியில் இருந்ததால் தலைவலி அல்லது ஆல்டிடியூட் மவுன்டென் சிக்னெஸ் ஏற்படலாம் என்பதை முன்பே பார்த்திருந்தோம். ஒருவேளை சால்டக் ஏரியில் தடுமாறி விழுந்துவிட்டால் ஹைபோதெர்மியா ஏற்படும். அப்படி ஏற்பட்டால் உடல் வெப்ப நிலை சடாரென்று சரிந்துவிடும். மயக்கம் வந்து இறந்துபோகும் சாத்தியமும் உண்டு. இப்படி, ஆபத்துகள் நிறைந்த ஒரு இடமாகவே சால்டக் ஏரி இருந்தது. உலகில் இதுபோல் ஏற்கெனவே சில விபத்துகள் நடந்திருக்கின்றன.
புதிய சாதனை
அதனால் மிகவும் கவனமாகப் பேட்லிங் செய்தேன். ஆனால், ஆபத்துகள் நிறைந்த ஆழமான பகுதியில் பேட்லிங் செய்து முடிப்பதற்கு வசதியாகக் காற்று வீசியது. கரைக்கு அருகிலேயே சென்றுகொண்டிருந்தேன். 45 நிமிடங்களில் மூன்றரை கிலோ மீட்டர் பேட்லிங் செய்திருந்தேன்.
வெற்றிகரமாகப் பேட்லிங்கை நிறைவு செய்தேன். உலகின் உயரமான பகுதியில் பேட்லிங் செய்த சாதனையை இப்படித்தான் படைத்தேன். இது ஓர் அரிய சாதனை. அங்கிருந்த ராணுவ வீரர்களும், உள்ளூர் மக்களும் பாராட்டினார்கள். அவர்களுடன் படம் எடுத்துக்கொண்டேன்.
ஏரியின் ஒரு முனையில் இருந்த பலகையில் உயரம் 16,618 அடி என்று எழுதப்பட்டிருந்தது. உலகிலேயே உயரமான இடம் ஒன்றில் பேட்லிங் செய்த சாதனை, மகிழ்ச்சி, ஒருவித திருப்தியுணர்வு போன்றவை மனதில் கலவையான உணர்வுகளை ஏற்படுத்தியது. அங்கிருந்து எங்கள் பயணம் தொடர்ந்தது.
கடலின் மிச்சம்
அடுத்து எங்கள் வழியில் பான்காங் (Pangong) ஏரி எதிர்ப்பட்டது. ஆமிர் கான் நடித்த ‘த்ரீ இடியட்ஸ்' படம் பார்த்தவர்களுக்கு இந்த ஏரியைத் தெரிந்திருக்கும். அந்தப் படம் எடுக்கப்பட்ட பிறகு இந்த ஏரி ரொம்பவே பிரபலமடைந்துவிட்டது. பான்காங் ஏரி முழுக்க நீல நிறம் நிறைந்து வழிந்து, தண்ணீர் இருக்கும் இடமெல்லாம் அடர் நீல நிறமாகத் தெரிந்தது.
பன்னெடுங் காலத்துக்கு முன்பு இந்தியா - யுரேஷியா ஆகிய இரண்டு கண்டங்களுக்கு இடையில் மிகப் பெரிய கடல் இருந்தது. கண்டங்களின் நகர்வு காரணமாக இரண்டும் ஒரு காலத்தில் மோதிக்கொண்டன. இதில்தான் இமய மலைத்தொடர் பிறந்தது. அப்போது கடலில் இருந்த தண்ணீரின் மிச்சம்தான், இங்கே பெரிய பெரிய ஏரிகளாக உள்ளது.
லேவுக்கு விடைகொடுத்தோம்
குளிர்காலத்தில் பனியாக உறைந்துவிடும் பான்காங் ஏரியின் மூன்றில் ஒரு பகுதி இந்தியாவிலும், எஞ்சிய பகுதி சீனாவிலும் இருக்கிறது. பான்காங் இருந்த உயரம் 16,400 அடி. இங்கே பேட்லிங் செய்ய இரண்டு நாடுகளிலும் அனுமதி வாங்க வேண்டும். அது மட்டுமில்லாமல் ராணுவக் கட்டுப்பாட்டில் உள்ள பகுதியும்கூட.
பான்காங் ஏரிக்குச் செல்லும் வழியில் காட்டுயிர் சரணாலயம் உள்ளது. இடையிடையே நிறைய சதுப்பு நிலப் பகுதிகளும் உள்ளன. மர்மோத், குதிரை, யாக் சடைமாடு போன்றவை இங்கே வசிக்கின்றன. பான்காங்கில் ஒரு நாள் தங்கி ஓய்வெடுத்துவிட்டு, அடுத்த நாள் லேவுக்குச் சென்றோம்.
உலகின் உயரமான ஏரி ஒன்றில் பேட்லிங் செய்ய வேண்டும் என்ற என்னுடைய நோக்கம் சால்டக் ஏரி மூலம், ஏற்கெனவே நிறைவேறி விட்டது. அந்தத் திருப்தி தந்த மகிழ்ச்சியில் லே பயணம் இனிதே முடிந்தது.
மேற்கு வங்கத்தின் ஃபராகா பகுதியில் பாயும் கங்கை ஆறு மிகவும் பிரம்மாண்டமானது. கிட்டத்தட்ட 3 கி.மீ. - 4. கி.மீ. அகலத்துக்கு ஆறு செல்கிறது. ஆற்றின் ஆழம் அதிகம் என்பதால், இதில் 'ஃபெரி' எனப்படும் பெரும்படகுகள் செல்கின்றன. ஆற்றைப் போலவே அந்தப் படகுகளும் மிகப் பெரியவை. இந்தப் பெரும்படகுகளில் சாதாரணமாக 8 10 லாரிகளை ஏற்றிச் செல்கிறார்கள். இவை உண்டாக்கும் அலை 1-2 அடிக்கு வரும். நான் ஏற்கெனவே கடலில் பேட்லிங் செய்துள்ளதால், அலைகள் எனக்குப் பெரிதாகத் தெரியவில்லை. ஆனால், எங்கள் குழுவினருக்கு இது புது அனுபவம். அவர்களுக்குக் கடலில் பேட்லிங் செய்த அனுபவம் கிடையாது, சிறிய அலைகளையே இப்போதுதான் பார்க்கிறார்கள்.
ஆறு மிகவும் பிரம்மாண்டமாக இருந்ததால், என் மனசுக்குள் ஒரு சின்ன பயம். நான்தான் குழுவை வழிநடத்திச் சென்றுகொண்டிருக்கிறேன். ஒரு கரைக்கும் இன்னொரு கரைக்கும் இடையிலான தொலைவே 3 கி.மீ. யாராவது வழி தவறினால், அடையாளம் கண்டுபிடிப்பது சிரமம். இதனால் ஆற்றின் வலது புறமாகவே பேட்லிங் செய்து கொண்டிருந்தோம். ஆற்றின் நடுவில் போனால், அதிகமாகக் காற்றடிக்கும். மேற்கு வங்கத்துக்குள் நுழைந்தவுடன் நாங்கள் சந்தித்த முக்கியமான சவால்கள் இவை.
உடல் வலியும் மன நெருக்கடியும்
ஒரு சில நேரம் பேட்லிங் செய்ய ஆரம்பித்துவிட்டுச் சட்டென்று ஓரிடத்தில் நிறுத்திவிட முடியாது. அப்படித்தான் சென்று கொண்டிருந்தோம். வழக்கமாக ஒவ்வொரு 10 நாளுக்குப் பிறகும் ஒரு நாள் ஓய்வு எடுப்போம். ஆனால், 11-வது நாளைத் தாண்டி ஃபராகாவில் பேட்லிங் செய்துகொண்டிருந்தோம். இதனால் கைவலி, கால்வலி அதிகரித்தது.
ஃபிகார் ஜார்கண்ட் மேற்கு வங்கம் என்று ஒரே வாரத்தில் மூன்று மாநிலங்களைக் கடந்துவிட்டோம். உத்தரப் பிரதேசம், பிகார் மாநிலங்களில் முந்தைய இரண்டு மாதங்களில் பழகி இருந்தோம். மேற்கு வங்கத்தில் எல்லாமே மாறுகிறது. ஒவ்வொரு மாநிலத்திலும் பண்பாடும் மனிதர்கள் பழகும் விதமும் மாறுகின்றன. பேட்லிங் செய்வதால் உடல் அளவில் வலிகள் ஏற்படுவதைத் தாண்டி, மனதளவிலான நெருக்கடிகளும் மேற்கு வங்கத்தில் சேர்ந்துகொண்டுள்ளன.
இரட்டைப் பிறவிகள்
ஃபராகாவைத் தாண்டினால் கங்கை ஆறு இரண்டாகப் பிரிகிறது. இடது புறம் சென்று வங்கதேசத்தில் பாய்வது பத்மா, வலது புறத்தில் மேற்கு வங்கத்தில் பாய்வது ஹூக்ளி. ஹூக்ளியில் நுழைந்து கொஞ்ச தொலைவிலேயே ஒரு மணல் திட்டில் தங்கினோம். அங்கே எங்களை வரவேற்பதுபோல, மழைச்சாரல் அடித்தது மனதுக்கு இதமாக இருந்தது.
ஹூக்ளியில் நீரோட்டம் அதிகம். அதேபோல பாய்ல்ஸ் எனப்படும் சுழல் காற்றும் அதிகமாக இருந்தது. இந்தச் சுழல் காற்று பேட்லிங் பலகையுடன் எங்களைச் சுழற்றி வீசிவிடும். சுழல் காற்று வீசிய பகுதியைக் கடந்தவுடன், நீரோட்டம் அதிகமாக இருந்ததால் ஐந்தே நாட்களில் 280 கி.மீ. தொலைவை பேட்லிங் செய்து கடந்தோம்.
ஹூக்ளி நதி தொடங்கிய பிறகு கொஞ்சம் கொஞ்சமாக ஆற்றின் அகலம் 200 மீட்டராகக் குறுகிவிடுகிறது. இன்னும் மூன்று நாட்களில் மேற்கு வங்கத் தலைநகர் கொல்கத்தாவைத் தொட்டுவிடுவோம். அங்கிருந்து கங்கா சாகரை அடைய வேண்டும். கொல்கத்தாவிலிருந்து 120 கி.மீ. தொலைவில் கடலுடன் சங்கமிக்கிறது கங்கை. இது பேட்லிங் செய்ய கடினமான பகுதி. அதற்குக் கொஞ்சம் கொஞ்சமாகத் தயாராகிக்கொண்டிருக்கிறோம்.
கங்கையின் இரட்டை சகோதரிகள் |
தொடர்புக்கு: wellsitekumaran@gmail.com