

அமெரிக்காவில் உள்ள எல்லீஸ் தீவு, அந்நாட்டில் வாழ்வாதாரம் தேடி வரும் லட்சக்கணக்கான குடியேறிகளுக்கு நுழைவு வாயிலாக ஒரு நூற்றாண்டுக்கு முன் இருந்துள்ளது. பல இருண்ட நினைவுகளைக் கொண்ட இத்தீவில் உள்ள மருத்துவமனை கடந்த 60 ஆண்டுகளாக மூடப்பட்டிருந்தது. தற்போது அந்த மருத்துவமனையின் கடந்த கால நினைவுகளைக் கறுப்பு-வெள்ளைப் புகைப்படங்களால் தெரு ஓவியர் ஜேஆர் மீட்டெடுத்துள்ளார்.
‘அன்ப்ரேம்ட், எல்லிஸ் ஐலண்ட்’ திட்டத்துக்காக ஜேஆர், எல்லீஸ் தீவின் ஆவணக் காப்பகத்திற்குப் பலமுறை சென்று, அங்குள்ள கறுப்பு-வெள்ளைப் புகைப்படங்களைப் பிரதி எடுத்தார். அந்தப் படங்களைப், பாழடைந்த மருத்துவமனையின் சுவர்களில் ஒட்டிக் கண்காட்சியாக வைத்துள்ளார்.
அமெரிக்காவுக்குப் பிழைக்க வந்த ஆயிரக்கணக்கான குடியேறிகளுக்கு மருத்துவப் பரிசோதனை செய்த மருத்துவமனை இது. குடும்பத்தில் ஒருவரை நோய் பாதித்திருந்தாலும் அவரது உடையில் சாக்பீசால் கோடு போட்டு மருத்துவமனையிலேயே காவலில் வைக்கப்படுவார். நோய் குணமான பிறகுதான் அமெரிக்காவுக்குள் நுழைய முடியும். குணமாகாமலேயே இறந்துபோன நோயாளிகள் சுமார் 3,500 பேர் இருப்பார்கள்.
இந்த மருத்துவனையின் பழைய, சிதைந்துபோன சுவர்களில், தலைச்சொறியால் பாதிக்கப்பட்ட சிறுமிகளின் புகைப்படங்கள் ஒட்டப்பட்டுள்ளன. அவர்களது கேசம் வெள்ளைத் துணியால் போர்த்தப்பட்டுள்ளது. தாதிகள், அறுவை சிகிச்சை மருத்துவர்கள், புதிதாகக் குடி புக வந்து நிற்பவர்கள், மனநோயாளிகள் ஆகியோரது புகைப்படங்கள் எல்லாம் பழைய நினைவுகளைக் கிளறுவதாக உள்ளன. மருத்துவமனை ஜன்னலில் நின்று அமெரிக்காவின் சின்னமான சுதந்திர தேவி சிலையை ஏக்கத்தோடு பார்க்கும் புகைப்படம் மனதை நெகிழவைப்பது.
புகைப்படங்களை கட் அவுட்கள் போல ஆக்கி, பெரிய அளவுகளில் காட்சிக்கு வைத்திருக்கிறார் ஜேஆர். 1902-ல் ஆரம்பிக்கப்பட்ட இந்த மருத்துவமனை 1954-ல் மூடப்பட்டது. 12 லட்சம் பேர் இங்கே சிகிச்சை பெற்றுள்ளனர். இவர்களில் 10 சதவீதம் பேர் அமெரிக்காவுக்குள் குடிபுகுந்துள்ளனர்.
இந்த மருத்துவமனையில் 350 குழந்தைகள் பிறந்துள்ளன. பெரும்பாலான நோயாளிகள் குணத்திற்குப் பிறகு மீண்டும் குடும்பத்தில் இணைந்தாலும் இரண்டு சதவீதம் பேர் மீண்டும் அவரவர் நாட்டுக்கே திரும்ப அனுப்பப்பட்டுள்ளனர்.
புகைப்படக்காரர் ஸ்டிபன் வில்கிஸ்-இன் நூலின் வாயிலாகத்தான் ஓவியர் ஜேஆர் எல்லீஸ் ஐலண்டைப் பற்றி அறிந்துகொண்டார். அவர் தேர்ந்தெடுத்த 30 புகைப்படங்களைச் சரியான இடத்தில் ஒட்டுவதற்கு மருத்துவமனை கட்டிடங்கள் வாயிலாக அலைந்தது பெரிய அனுபவத்தையும் ஆற்றலைக் கொடுக்கக்கூடியதாகவும் இருந்ததாகக் கூறுகிறார்.
‘சேவ் ஐலண்ட் சங்கம்’தான் இந்தப் புகைப்படக் கண்காட்சிக்கு வேண்டிய உதவிகளைச் செய்துள்ளது. தற்போது ஓவியர் ஜேஆர், ஹாலிவுட் நடிகர் ராபர்ட் டீ நீரோ உதவியுடன் இந்த மருத்துவமனை குறித்த குறும்படம் ஒன்றை எடுக்கத் திட்டமிட்டுவருகிறார்.