ஜித்து ஜில்லாடி... தேவையில்லை 3டி கண்ணாடி!

ஜித்து ஜில்லாடி... தேவையில்லை 3டி கண்ணாடி!
Updated on
1 min read

இப்போதெல்லாம் சாதாரணத் திரைப்படத்தைப் பார்ப்பதைவிட 3 டி படங்கள்தான் நமக்குப் பெரிய திருப்தியைத் தருகின்றன. அதிலும் அனிமேஷன் செய்யப்பட்ட ஹாலிவுட் படங்களின் வண்ணமும் காட்சிகளும் 3டி தொழில்நுட்பத்தில் நம் கண்ணைப் பறிக்கின்றன. 3டி படங்கள் தரும் காட்சிபூர்வ அனுபவத்துக்கு ஈடு இணையே கிடையாது. மைடியர் குட்டிச் சாத்தான் படம் எண்பதுகளில் வந்தபோது 3டி தொழில்நுட்பத்தின் காரணமாகக் கிடைத்த அனுபவம் அலாதியானது. ஐஸ்கிரீமுக்காகக் கைகளை நீட்டி முன்னாடி உள்ள இருக்கையில் கையை மோதிக்கொள்வார்கள். திரைப்படத்தில் யாராவது கையை நீட்டிக் குத்தினால் பார்வையாளர்கள் மிகவும் இயல்பாக இருக்கையில் பின்னால் நகர்வார்கள்.

இவையெல்லாம் 3டி தொழில்நுட்பத்தின் விளைவு. அந்தப் படத்தைப் பார்ப்பதற்குத் தரப்பட்ட கண்ணாடியை அப்படியே வீட்டுக்குக் கொண்டுவந்தது பெரிய பெருமையாகப் பேசப்பட்டது. ஆனால் அந்தக் கண்ணாடியை அணிந்து சாதாரணக் காட்சிகளைப் பார்த்தால் அது ஒழுங்காகத் தெரியாது என்பதை அறிந்தபோது கண்ணாடியை எடுத்துவந்திருக்க வேண்டாம் என்று கொண்டுவந்தவர்கள் வருத்தப்பட்டார்கள். ஆனாலும் அவர்களது பெருமைப் பட்டியலில் கண்ணாடியை எடுத்து வந்த வைபவம் இடம்பெற்றுவிட்டது. இப்போது எதற்குப் பழைய கதை என்கிறீர்களா? அதுவும் சரிதான், இப்போதைய விஷயத்துக்கு வருவோம்.

3டி படங்களைப் பார்ப்பதற்குக் கண்ணாடியை அணிய வேண்டும் என்பது நமக்கு எப்போதும் எரிச்சலைத் தரும் ஒரு விஷயம். 3டி படமும் பார்க்க வேண்டும், ஆனால் அதற்குரிய கண்ணாடி அணியாமல் அப்படியே பார்க்க வேண்டும் என்ற நமது ஆசை நிறைவேறாதா என ஏக்கத்துடன் இருந்துவந்தோம். அந்த ஏக்கம் தீரும் நாள் இப்போது வந்துவிட்டது. ஆமாம் இனி நீங்கள் 3டி படங்களைப் பார்க்கக் கண்ணாடி அணிய வேண்டியதில்லை. வெற்றுக் கண்களால் பார்த்தாலே 3டி அனுபவத்தைத் தரும் டிஸ்பிளேயை உருவாக்கிவிட்டார்கள் விஞ்ஞானிகள். இந்த டிஸ்பிளே தொழில்நுட்பத்தால் படத்தின் அனுபவம் எந்த வகையிலும் குறைந்துவிடாது. 3டி கண்ணாடியை அணிந்து படம் பார்க்கும்போது கிடைக்கும் அதே காட்சியனுபவம் இந்த டிஸ்பிளேயிலும் சாத்தியம் தானாம்.

அமெரிக்காவின் தொழில்நுட்ப நிறுவனம் ஒன்றும் இஸ்ரேலின் அறிவியல் நிறுவனம் ஒன்றும் இணைந்து இந்தத் தொழில்நுட்பத்தைக் கண்டறிந்திருக்கின்றன. பல லென்ஸுகளையும் கண்ணாடிகளை ஒன்றாக இணைத்து 3டி தொழில்நுட்பத்தில் பார்க்கக்கூடிய இந்த டிஸ்பிளேயை உருவாக்கியிருக்கிறார்கள். இதன் காரணமாக ஒரு தியேட்டரின் எந்த இருக்கையில் இருந்தாலும் 3டி படம் தெரியுமாம். உள்ளூர் தியேட்டரில் இந்தத் தொழில்நுட்பம் இப்போதே கிடைத்துவிடும் எனப் பகல் கனவு காண ஆரம்பித்து விடாதீர்கள். இதை உள்ளூர் தியேட்டரில் அமைக்கக் கடும் செலவுபிடிக்கும் பல சிக்கலான வேலைகளைச் செய்ய வேண்டியதிருக்குமாம். அப்படியானால் இது நடந்த மாதிரிதான் எனச் சலித்துக்கொள்ளாதீர்கள். இன்றில்லாவிட்டாலும் நாளை இந்தத் தொழில்நுட்பம் நமக்குக் கிடைத்துவிடும். அப்போது நாம் கண்ணாடி அணியாமல் 3டி படம் பார்க்கலாம்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in