Last Updated : 01 Mar, 2014 12:27 PM

 

Published : 01 Mar 2014 12:27 PM
Last Updated : 01 Mar 2014 12:27 PM

திருப்படிதானம் ஓர் அரசியல் தந்திரம்

திருவிதாங்கூர் மகாராஜா அனிழம் திருநாள் மார்த்தாண்ட வர்மா தன் ஆட்சிப் பொறுப்பைக் கடவுளான பத்மநாபசுவாமிக்குச் சமர்ப்பித்தார். இதைச் சடங்காகச் செய்யாமல் ஒரு சட்டபூர்வமான நடவடிக்கையாக அர்ப்பணித்தார்.

12 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் சோழர்கள் வீழ்ச்சிக்குப் பிறகுதான் திருவிதாங்கூர் அரசவம்சம் உருவாகிறது. இவர்கள் அதுவரை திருப்பாம்பரம் என்னும் பெயரில் கல்குளம் கிராமத்தில் இருந்தனர். தங்களைச் சேரன் செங்குட்டுவனின் வழியினர் எனச் சொல்கிறார்கள். தொடக்கத்தில் திருவிதாங்கூர், வேணாட்டை உள்ளடக்கிய பகுதியாக மட்டுமே இருந்தது.

அனிழம் திருநாள் மார்த்தாண்ட வர்மா

ராஜா ராம வர்மா இறப்புக்குப் பிறகு அவருடைய மருமகனான அனிழம் திருநாள் மார்த்தாண்ட வர்மா தன் 24ஆம் வயதில் கி.பி. 1729ஆம் ஆண்டு மன்னனாகப் பொறுப்பேற்றார். இவர் திருவிதாங்கூர் ராஜ்ஜியத்தை ஏற்படுத்தி அதைக் கொச்சி வரை விரிவுபடுத்தினார். அப்பகுதியின் வலிமை மிக்க அரசாக திருவிதாங்கூர் விளங்கியதும் அனிழம் திருநாள் மார்த்தாண்ட வர்மா காலத்தில்தான்.

எட்டு வீட்டுப்பிள்ளைமாரும் எட்டரை யோகமும்

முழு அதிகாரத்தையும் கைப்பற்ற மார்த்தாண்டவர்மாவுக்கு சவாலாக இருந்தது அன்று அப்பகுதிகளில் அதிகாரத்துடன் இருந்த இரு குழுக்கள்; ஒன்று, எட்டரை யோகம் என்னும் கோயில் சார்ந்து இயங்கிய பிராமணக் குழுக்கள். அடுத்ததாக எட்டு வீட்டுப் பிள்ளைமார் என அழைக்கப்பட்ட நிலக்கிழார்கள்.

15ஆம் நூற்றாண்டில் தோன்றிய எட்டரை யோகம்,ஸ்ரீ பத்நாபசுவாமி கோயில் உட்பட பல கோயில்களை நிர்வகித்தனர். இவர்கள் இறை நம்பிக்கைவழியாக நாட்டில் அதிகாரம் மிக்கவர்களாக இருந்தனர். அரசனுக்கு முடிசூட்டும் அதிகாரமும் பெற்றிருந்தனர். மக்களும் மன்னனும் தங்களுக்குக் கடமைப்பட்டவர்கள் என்னும் கருத்தை வலியுறுத்திச் சமூகத்தில் உயர்நிலையில் இருந்தனர். ஆட்சி நடத்த இவர்களின் தயவு தேவையாக இருந்தது.

எட்டு வீட்டுப் பிள்ளைமார், தங்கள் பகுதிகளுக்குள் சுயமாக வரி வசூலிக்கும் அதிகாரம் பெற்றிருந்தனர். தங்களுக்கெனச் சிறு படைகளையும் வைத்து ஓர் அரசனாகவே இருந்தனர். நாட்டின் மன்னனை இயக்குபவர்களாக இருந்தனர். மார்த்தாண்டவர்மா காலத்துக்கு முன்புவரை இருந்த திருவிதாங்கூர் மன்னர்கள் வெறும் பொம்மைகளாகவே இருந்ததாகவும் எட்டு வீட்டுப் பிள்ளைமாரே நாட்டை ஆண்டதாகவும் சொல்லப்படுகிறது.

சூழ்ச்சியும் படுகொலைகளும்

ராஜா ராம வர்மா இறந்த பிறகு தாய்வழிச் சமூக மரபின்படி மார்த்தாண்ட வர்மாதான் ஆட்சிப்பொறுப்புக்கு வர வேண்டும். ஆனால் தொடக்கத்தில் இருந்தே மார்த்தாண்ட வர்மா எட்டு வீட்டுப்பிள்ளைமாரின் அதிகாரத்திற்கு எதிரான கருத்து வைத்திருந்தார். இதனால் இவர் ஆட்சிக்கு வருவது தங்களுக்கு நல்லதல்ல என எட்டு வீட்டுப்பிள்ளைமார் நினைத்தாகச் சொல்லப்படுகிறது.

மார்த்தாண்ட வர்மாவுக்கு எதிரான சூழ்த்தித் திட்டம் வகுக்கப்பட்டது. ராஜா ராம வர்மாவின் மகன்களான பப்புத் தம்பி என்ற பத்மநாபன், ராமன் தம்பி ஆகிய இருவரையும் தூண்டி அரியணைக்காகப் போரிட வைத்தனர். குஞ்சுத் தம்பிமார் என அழைக்கப்பட்ட இவர்கள் இருவரும் கைதுசெய்யப்பட்டு மார்த்தாண்டவர்மாவால் நாகர்கோயிலில் கொல்லப்பட்டதாகச் சொல்லப்படுகிறது.

இதைக் கேள்விப்பட்ட எட்டுவீட்டுப் பிள்ளைமார் அதிர்ந்துபோயினர். பிறகு எட்டு வீட்டுப்பிள்ளைமார்களை ஒடுக்க மார்த்தாண்டவர்மா திட்டமிட்டார். ஆறாட்டுத் திருவிழா அன்று படைகொண்டு வந்து எட்டு வீட்டுப்பிள்ளைமார்களை வீழ்த்தினார். இக்காலகட்டத்தில்தான் அவர் வேணாட்டை விரிவுபடுத்தித் திருவிதாங்கூர் நாடாக மாற்றினார்.

தலைநகர் பத்மநாபபுரத்தில் இருந்து திருவனந்தபுரத்திற்கு மாற்றப்பட்டது. தீ விபத்தொன்றில் சேதமடைந்திருந்த  பத்மநாபசுவாமி கோயிலைச் சீர்படுத்தினார் மார்த்தாண்ட வர்மா. பிறகு கோயிலில் இருந்த எட்டரை யோகத்தினரின் அதிகாரமும் பறிக்கப்பட்டது. கோயிலின் முழு அதிகாரமும் மார்த்தாண்ட வர்மாவின் கட்டுப்பாட்டுக்குள் வந்தது. அதுபோல சிற்றரசுகள் பலவற்றை மார்த்தாண்டவர்மா வென்று, திருவிதாங்கூர் அரசுக்குக் கப்பம் கட்டும் பிரதேசங்களாக மாற்றினார்.

ஆனால் இந்தக் காலகட்டங்களில் கணக்கில் அடங்காத அளவுக்கு அரசியல் படுகொலைகள் நிகழ்ந்து முடிந்தன. இப்படுகொலைகள் மார்த்தாண்டவர்மா அரசுக்கு மிகுந்த நெருக்கடிகளை ஏற்படுத்தியிருந்தன. எட்டரை யோகத்தினர் ஒடுக்கப்பட்டது இறை நம்பிக்கை சார்ந்து மக்களிடம் பொதுவான அவப்பெயரை ஏற்படுத்தி இருந்தது.

சிற்றரசுகளும் அவருக்கு எதிராக டச்சு போன்ற நாட்டுகளுடன் இணைந்து சதிவேலைகளில் அவ்வப்போது ஈடுபட்டுக்கொண்டிருந்தன. இவற்றையெல்லாம் ஒடுக்கும் அரசியல் நடவடிக்கையாகவே ‘திருப்படிதானம்’ மேற்கொள்ளப்பட்டது எனலாம்.

திருப்படிதானம்

ஆட்சிப் பொறுப்பை ஸ்ரீ பத்மநாபசுவாமியிடம் ஒப்படைக்கும் ‘திருப்படி தானம்’

என அழைக்கப்படும் இந்நிகழ்வு 1750ஆம் ஆண்டு ஜனவரி 20ஆம் தேதி நடைபெற்றது. ஒரு முக்கியமான அரசியல் நடவடிக்கையான இது சட்டமாகக் கொண்டுவரப்பட்டுச் செயல்படுத்தப்பட்டது.

திருப்படிதானத்தின் அன்று மார்த்தாண்டவர்மா மற்றும் அரசவையைச் சேர்ந்தவர்கள் அனைவரும் தங்களுக்குரிய வாகனங்கள் ஏதுமற்று கால்நடையாக  பத்மநாபசுவாமி திருக்கோயிலுக்குச் சென்றனர். மார்த்தாண்ட வர்மா தன் அதிகாரத்திற்கான அடையாளமான கேடயத்தையும் உடைவாளையும் பத்மநாபசுவாமியின் படிக்கட்டில் வைத்துப் பத்மநாபசுவாமியிடம் ஒப்படைத்தார். இந்தச் சடங்குதான் திருப்படிதானம் என அழைக்கப்பட்டது.

மார்த்தாண்டவர்மா இறைவனான பத்மநாபசுவாமி வகிப்பதற்கு மூன்று பதவிகளைக் கொடுத்தார். அவை குலதெய்வம், காவல் தெய்வம், நாட்டின் அதிபதி ஆகியவை. இதன்மூலம் திருவிதாங்கூரின் அரியாசனம்  பதமநாபசுவாமிக்கு உரித்தானது. மார்த்தாண்ட வர்மா தன்னை அரச பிரநிதியாக, பத்மநாபசாமியின் பாதுகாவலாக அறிவித்துக்கொண்டார். அன்று முதல் அவர் பத்மநாபதாசன் என்னும் அடையாளம் ஏற்றார்.

திருப்படி தானத்தின்மூலம் முழுப்பொறுப்பும் ஸ்ரீ பத்மநாபசுவாமிக்கு வழங்கப்பட்டுவிட்டதால் அரசனுக்கான சில பிரத்யேக வசதிகளை மார்த்தாண்ட வர்மா துறந்ததாகச் சொல்லப்பட்டது. அரசனுக்கான சேவகர்கள் பத்மநாபசுவாமிக்குத் தொண்டு செய்ய நியமிக்கப்பட்டனர். ஸ்ரீ பத்மநாபசுவாமி ஊர்வலத்தின்போது அரசனுக்குரிய மரியாதைகள் வழங்கப்பட்டன. பாதுகாவலர் படை நியமிக்கப்பட்டது.

அண்டை நாட்டின் கப்பம் என்பது ஸ்ரீ பத்நாபசுவாமிக்குச் செலுத்துவதானது. இதனால் அது தவிர்க்க முடியாததானது. மக்களின் வரியும் இவ்வாறே. ஆக மன்னனுக்கு எதிராக எழுந்த வீணான பிரச்சினைகள், சூழ்ச்சிகள் முடிவுக்குக் கொண்டுவரப்பட்டன. இறைவனே மன்னனாக இருக்கும்போது இறைவனுக்கு எதிராக படையெடுக்கும் துணிவு யாருக்கு வரும்?

“உணர்ச்சி வசப்பட்ட நிலையில் ஆட்சியைக் கடவுளுக்குச் சமர்ப்பிக்கவில்லை. சட்டபூர்வமாகவே சமர்ப்பிக்கப்பட்டது” என்று திருதாங்கூர் இளவரசி கெளரி பார்வதி பாய் ஒரு நேர்காணலில் கூறுகிறார். இதன் மூலம் இது பக்திநிலையில் எடுக்கப்பட்டது முடிவு அல்ல. மாறாக இது ஒரு ராஜதந்திர நடவடிக்கை என்பது நிரூபணமாகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x