

‘பொதுவெளியில் திருநங்கைகள்!’ நிகழ்ச்சியின் தலைப்பைப் போலவே எளிமையாக இரண்டு டார்கெட்கள். ஒன்று கல்வி, இரண்டு, வேலைவாய்ப்பு. ஆனால் இந்த இரண்டையும் பெற வேண்டுமென்றால், அடித்தட்டு மக்களை விட திருநங்கைகள், திருநம்பிகள் என்று சொல்லப்படும் மூன்றாம் பாலினத்தவர்கள் அதிக இன்னலுக்கு ஆட்பட வேண்டியதாக உள்ளது.
இந்த இரண்டு இலக்குகளை எப்படி அடையலாம் என்பது குறித்த மூன்று நாள் விழிப்புணர்வு நிகழ்ச்சி கடந்த வாரம் சென்னையில் நடைபெற்றது. மூன்றாம் பாலினத்தவர் நலன்களுக்காகச் செயல்பட்டு வரும் சகோதரன், தோழி, ஐடிஐ ஆகிய அமைப்புகள் இணைந்து நடத்திய இந்த நிகழ்ச்சியின் ஹைலைட்… மிஸ் சென்னை 2016! இது முழுக்க முழுக்கத் திருநங்கைகளுக்கானது.
பன்னிரெண்டு திருநங்கைகள் இந்தப் போட்டியில் பங்கெடுத்தனர். இவர்களில் சிலர் ஐ.டி., ஃபேஷன், நர்சிங் போன்ற துறைகளில் படித்து முடித்தவர்களாகவும், படித்துக் கொண்டிருப்பவர்களாகவும் இருந்தனர். ஆந்திராவிலிருந்து வந்திருந்த நஸ்ரியா காவல்துறையில் எஸ்.பி. பதவிக்கான தேர்வுக்குத் தயாராகிக் கொண்டிருக்கிறாராம்.
பாரம்பரியமான பட்டுச் சேலையிலும், நவீன உடையிலும் ஒய்யார நடை நடந்த திருநங்கைகளிலிருந்து, முதல் சுற்றுக்கு ஐந்து பேர் தேர்ந்தெடுக்கப்பட்டனர். அவர்களிடம் உடனடியாக நாட்டில் நீங்கள் செய்ய விரும்பும் மாற்றம் என்னவாக இருக்கும் என்று கேட்டனர். ஒருவர், ‘தனிமனித பாலியல் சுதந்திரத்துக்குத் தடையாக இருக்கும் 377-வது சட்டப் பிரிவை நீக்குவேன்’ என்றார்.
‘திருநங்கைகளுக்குக் கட்டாயக் கல்வி அளிப்பதற்கான சட்டத்தைக் கொண்டு வருவேன்’ என்று பதில் கூறிய நமீதா ‘மிஸ் சென்னை 2016’ பட்டத்தைப் பெற்றார். கீர்த்தி, சுஜாதா ஆகியோர் இரண்டாவது, மூன்றாவது இடங்களைப் பிடித்தனர்.
“திருநம்பிகள், திருநங்கைகள் இன்றைக்கு வெளி மாநிலம், வெளிநாடுகளில் பல துறைகளில் முக்கியமான பொறுப்புகளில் இருக்கின்றனர். எங்கள் அமைப்பின் மூலம் பொதுவெளியில் தமிழ், இந்தி, ஆங்கிலத்தில் சரளமாகப் பேசுவதற்கான திறனைப் பல திருநங்கைகள் இன்றைக்குப் பெற்றிருக்கின்றனர். இவ்வளவு பெரிய மேடையில் நிகழ்ச்சிகளைக் கச்சிதமாக நடத்துவதற்கான பயிற்சி, பிரச்சினைகளில் முடிவெடுக்கும் திறன் எல்லோரையும் போலவே என்னையும் அதிசயிக்க வைக்கிறது” என்றார் பிரபல ஃபேஷன் வடிவமைப்பாளரும் சகோதரன் அமைப்பின் நிறுவனருமான சுனில் மேனன்.