

வீட்டை வடிவமைக்கும் போது அதனை ஒரு மொத்தவெளியாக (space as whole) கருத்தில்கொண்டு வடிவமைக்க வேண்டும். பகுதி பகுதியாகப் பிரித்து மாறுபட்ட சாயல்களில் வடிவமைப்பது தவறு. மொத்தத்தில் வீடு முழுக்கவே வடிவமைப்பின் சாயல் இருக்க வேண்டும். வரவேற்பறையில் நாம் பயன்படுத்தப் போகும் வண்ணத்துக்கும் படுக்கை அறை வண்ணத்துக்கும் இடையே ஒரு ஒற்றுமையும் இசைவும் இருந்தால் மட்டுமே அந்தச் சாயலை உணர முடியும். இல்லையென்றால் பல வண்ணங்கள் அங்கொன்றும் இங்கொன்றுமாகக் காட்சியளித்துக் குழப்பத்தை ஏற்படுத்தும். வண்ணங்களே வீட்டின் தோற்றத்தைப் பார்ப்பதற்குப் பரவசப்படுத்தும் என்பதால், வண்ணங்களைத் தேர்வு செய்யும் போது கவனமாக இருக்க வேண்டும்.
இதேபோல் வீட்டின் உள்ளே அலங்காரத்துக்குப் பயன்படுத்தப்படும் பொருட்களில் சமநிலை இருக்க வேண்டும். கதவின் இருபுறமும் ஒரே அளவிலான ஓவியங்கள் இருக்குமாறு பார்த்துக்கொள்வது போன்ற சிறிய விஷயங்களில் கவனம் செலுத்த வேண்டும்.