

பதின்வயதினர், குழந்தைகளுக்கான தமிழ்க் கதைகளைப் பற்றி யாரிடமாவது கேட்டால், உடனே சுவாரசியமான கதைகள் என்றால் ஆங்கிலத்தில்தான் வாசிக்க முடியும் என்று பதில் கிடைக்கும். தமிழில் சித்திரக் கதைகள் - கிராஃபிக் நாவல்கள் கிடையாது எனப் பல கிடையாதுகள் அடுத்து அணிவகுக்கும்.
ஆனால், இதெல்லாம் உண்மையில்லை. எழுத்தாளர் வாண்டுமாமாவையும் ஓவியர் செல்லத்தையும் பற்றி அறிந்தவர்கள், மேற்கண்ட கிடையாதுகளை நிச்சயமாக மறுப்பார்கள். வாண்டுமாமா ஒரு தகவல் களஞ்சியம். பதின்வயதினர், குழந்தைகளுக்கான ஏராளமான படைப்புகளை அனைத்துத் துறைகள் சார்ந்தும் அவர் தந்துள்ளார். அவருடைய கதைகள் குழந்தைகள் படிப்பதற்கானவை மட்டுமல்ல; வாண்டுமாமாவைப் பற்றி முன்தீர்மானம் இல்லாமல் வாசிக்கும்போது, இதைப் புரிந்துகொள்ள முடியும்.
கூடு விட்டுப் பாயும் கதை
‘புலி வளர்த்த பிள்ளை’, ‘கனவா, நிஜமா? ’, ‘குள்ளன் ஜக்கு’ போன்ற அவருடைய கதைகளில் வரும் திருப்பங்கள், சுவாரசியங்கள், தகவல்களுக்கு வேறு இணையில்லை. இதில் ‘புலி வளர்த்த பிள்ளை’ கிராஃபிக் நாவலுக்கு நெருங்கிவரும் படைப்பு. மூன்று பாகங்களைக் கொண்ட இந்தக் கதையின் முதல் இரு பாகங்கள் படங்கள் நிறைந்து காணப்படுகின்றன. மூன்றாவது பாகம் முழுமையாகப் படக்கதை.
தலைப்பைப் பார்த்தால், ருட்யார்டு கிப்ளிங்கின் புகழ்பெற்ற ‘ஜங்கிள் புக்’ கதையைப் போலத் தோன்றும். ஜங்கிள் புக்கின் அடிப்படை அம்சம் இந்தக் கதையின் சிறிய பகுதிதான். அந்தக் கதையில் வரும் ஓநாயைப் போலவே, இதில் ஒரு புலி உண்டு. ஆனால், கால இயந்திரம், மந்திர தந்திரங்கள், மாயாஜால வித்தைகள் என இந்தக் கதை அடுத்தடுத்துக் கூடுவிட்டுக் கூடு பாய்ந்துகொண்டே இருக்கிறது.
பூர்வீகம் தேடி
தென்னிந்தியாவைச் சேர்ந்த பதஞ்சலி என்ற தொல்பொருள் ஆராய்ச்சியாளர், சத்யா என்கிற அரச குடும்பத்தின் இந்நாளைய வாரிசு ஆகிய இருவரும் இமயமலையின் அடிவாரத்தில் உள்ள தங்கள் பூர்வீகத்தைத் தேடுகிறார்கள். இதற்காக மாயவித்தைகளைச் செய்பவர்களைக் கடந்து, ராஜஸ்தான் வழியாகப் பயணித்து, எதிரி அரசர்களை எதிர்கொள்வதுதான் கதை.
பரபரப்பான இந்தக் கதையை வாசிக்க ஆரம்பித்துவிட்டால், அதன் கற்பனா உலகத்துக்குள் நாம் விழுந்துவிடுவோம். வாசித்து முடித்த பின்னர்தான் அதிலிருந்து நாம் வெளியே வர முடியும். அதுதான் வாண்டுமாமாவின் பேனா சிருஷ்டிக்கும் தனி உலகம்.