Last Updated : 16 Sep, 2016 12:00 PM

 

Published : 16 Sep 2016 12:00 PM
Last Updated : 16 Sep 2016 12:00 PM

தங்க மகனின் தங்கமான தகவல்கள்!

செப்டம்பர் 7-ம் தேதி பிரேசிலின் ரியோ டி ஜெனிரோவில் பாராலிம்பிக்ஸ் என்றழைக்கப்படும் மாற்றுத் திறனாளிக்கான உலக மெகா போட்டிகள் தொடங்கியபோது, இப்படி ஒரு போட்டி நடைபெறுவதே பெரும்பாலனவர்களுக்குத் தெரியாமல் இருந்தது. இன்றோ பாராலிம்பிக்ஸ் போட்டியைத் தெரியாதவர்கள் யாரும் இல்லை. அதற்குக் காரணம் உயரம் தாண்டுதலில் தங்கம் வென்ற தமிழகத்தின் தங்க மகன் மாரியப்பன் தங்கவேல். பாராலிம்பிக்ஸ் நிறைவு நாளில் நம் நாட்டின் தேசியக் கொடியை ஏந்திச் செல்லும் வாய்ப்பும் மாரியப்பனுக்குக் கிடைத்திருப்பதன் மூலம் ஒரே கல்லில் இரண்டு மாங்காய் அடித்திருக்கிறார். யார் இந்த மாரியப்பன் தங்கவேல்?

# சேலத்திலிருந்து 50 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள பெரியவடக்கம்பட்டி கிராமம்தான் மாரியப்பனின் சொந்த ஊர். இவருடைய தாயார் சைக்கிளில் காய்கறிகளை வீதிவீதியாகக் கொண்டு சென்று விற்பனை செய்பவர். மூன்றாண்டுகளுக்கு முன்பு மருத்துவ சிகிச்சைக்காக வாங்கிய 3 லட்சம் ரூபாய் கடனைக்கூட இன்னும் திருப்பிக் கொடுக்க முடியாமல் இருக்கும் ஓர் ஏழைக் குடும்பத்தைச் சேர்ந்தவர்தான் மாரியப்பன்.

# ஐந்து வயது இருக்கும்போது மாரியப்பன் வீட்டுக்கு அருகே சாலையில் சென்றபோது பேருந்து மோதி வலது கால் முட்டி நசுங்கியது. இதில் கட்டை விரல்களைத் தவிர பிற விரல்களும் மேல் பகுதியும் சேதமடைந்தன. இப்படித்தான் மாரியப்பன் மாற்றுத் திறனாளியானார்.

# மாரியப்பனுக்குக் கைப்பந்தாட்ட விளையாட்டுதான் மிகவும் பிடிக்கும். பள்ளியில் படிக்கும்போது அதைத்தான் விரும்பி விளையாடுவார். அவரது உடற்கல்வி ஆசிரியர்தான் அவருக்கு உயரம் தாண்டுதல் திறன் இருப்பதைக் கண்டுபிடித்தார்.

# மாற்றுத் திறனாளியாக இருந்தாலும், விளையாடக்கூடிய தடகள வீரராகப் போட்டிகளில் பங்கேற்றது 14 வயதில்தான். முதல் போட்டியில் இரண்டாமிடம் பெற்று அசத்தினார் மாரியப்பன்.

# மாரியப்பனுக்கு 18 வயதானபோது அவருடைய பயிற்சியாளர் சத்தியநாராயணா தேசிய பாரா-தடகள சாம்பியன்ஷிப் போட்டிக்கு அழைத்துச்சென்றார். பெங்களூருவில் கடுமையான தொடர் பயிற்சிகளுக்குப் பிறகு முதுநிலைப் போட்டிகளில் பங்கேற்கக் கடந்த ஆண்டு தகுதி பெற்றார் மாரியப்பன்.

# மாற்றுத் திறனாளிகள் விளையாடும் போட்டிகளை குறியீடுகளில் அழைப்பார்கள். மாரியப்பன் விளையாடிய உயரம் தாண்டுதல் போட்டியை டி42 (மூட்டு பாதிப்பில்லாத, வலுக்குறைவான, நகரக்கூடிய தன்மையுள்ளவர்) என்று வகைப்படுத்தியுள்ளார்கள். அதில் பங்கேற்க மாரியப்பன் தகுதிபெற்றார்.

# மாரியப்பன் தங்கவேல் இப்போது பெற்ற தங்கப்பதக்கம் புதிதல்ல. ‘துனிசியா கிராண்ட் பிரிக்ஸ்’ உயரம் தாண்டுதல் போட்டியில் தமிழ் நாடு தடகள அணிக்குத் தங்கப் பதக்கம் வென்று தந்தவர். அப்போது அவர் 1.78 மீட்டர் உயரம் தாண்டி பாராலிம்பிக்ஸ் போட்டிக்குத் தகுதிபெற்றார். இந்தப் பிரிவில் 1.60 மீட்டர் உயரம் தாண்டுவதே தகுதிக்கான அளவீடு.

# ரியோ பாராலிம்பிக்ஸ் இறுதிப் போட்டியில், 1.89 மீட்டர் உயரம் தாண்டித் தங்கப் பதக்கம் வென்றார் மாரியப்பன் தங்கவேல். அடுத்தடுத்த இடங்களைப் பிடித்த சாம் க்ரீவீ மற்றும் வருண் பட்டி ஆகியோர் 1.86 மீட்டர் உயரமே தாண்டினார்கள்.

# பாராலிம்பிக்ஸ் வரலாற்றில் தங்கம் பெறும் மூன்றாவது வீரர் மாரியப்பன் தங்கவேல். இதற்கு முன்பு நீச்சல் பிரிவில் முரளிகாந்த் பெட்கார் (1972), ஈட்டி எறிதலில் தேவேந்திர ஜாஹிரியா (2004) ஆகியோர் தங்கம் வென்றுள்ளார்கள்.

# பதக்கப் பட்டியலில் பின் தங்கியிருந்த இந்தியா, மாரியப்பன் தங்கவேல் பெற்ற தங்கப் பதக்கம் மூலம் 30 இடங்கள் முன்னேறியது.



வலைதளங்களைக் கவர்ந்த மாரியப்பன்!

சாதாராண கிராமத்தில் பிறந்த ஒரு இளைஞன் தனது அசாத்திய பயிற்சி, முயற்சியால் தங்கம் வென்று இந்தியாவுக்குப் பெருமைத் தேடித் தந்ததை சமூக வலைத்தளங்கள் கொண்டாடித் தீர்த்தன. அதுவும் காவிரி விவகாரத்தில் கர்நாடகாவில் தமிழர் உடைமைகள் மீது தாக்குதல்கள் தொடர்ந்த வேளையில் தங்கம் வென்று நாட்டுக்கும், தமிழகத்துக்கும் பெருமைச் சேர்த்த மீம்ஸ்கள் சமூக வலைதளங்களில் ஆசை தீரப் பகிரப்பட்டன.

ஒலிம்பிக் போட்டிகளில் வெற்றி பெற்ற சிந்து, சாக்‌ஷிக்கு மத்திய அரசு மட்டுமல்லாமல், பல்வேறு மாநில அரசுகளும் போட்டி போட்டுக்கொண்டு பரிசுகளை வழங்கின. ஒலிம்பிக்கில் தங்கம் வெல்வோருக்கு 4 கோடி ரூபாய், வெள்ளி வெல்வோருக்கு 2 கோடி ரூபாய், வெண்கலம் வெல்வோருக்கு 1 கோடி ரூபாய் பரிசு வழங்கப்படும் என்று அறிவித்து இன்ப அதிர்ச்சி தந்தார் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால்.

ஒலிம்பிக்கில் வெள்ளி, வெண்கலம் வென்றவர்களுக்குப் பல கோடி பரிசுகள், விலை உயர்ந்த கார்கள் வழங்கப்பட்ட வேளையில், பாராலிம்பிக்ஸ் போட்டியில் தங்கம் என்ற மாரியப்பனுக்குப் பல மாநில முதல்வர்கள் ட்விட்டர் மூலம் வாழ்த்து சொன்னதோடு நிறுத்திக்கொண்டதையும் சமூக வலைத்தளங்கள் திட்டித் தீர்த்தன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x