ஒரு தெய்வீக அனுபவம்

ஒரு தெய்வீக அனுபவம்
Updated on
2 min read

அதிகாலை, வெளியெங்கும் சாம்பல் போர்வை படர்ந்திருக்கும் வேளை. பொழுது புலரும்பொழுது மனதை மலர வைக்கும் இசை.

இதுதான் பிரபாத சங்கீதம். அதிகாலை சங்கீதம். ஏழெட்டு ஆண்டுகளாகத் தொடர்ந்து மார்கழி மாதம் முழுவதும் அதிகாலையில் வீட்டை ஒரு கோவிலாக, கலைக்கூடமாக மாற்றுவதென்பது எவ்வளவு பெரிய விஷயம்! அதைத் தொடர்ந்து செய்துவருகிறது மயிலாப்பூரில் உள்ள வெங்கட்ராமன் குடும்பம்.

கொஞ்சம் கற்பனை செய்துபாருங்களேன்… அதிகாலை, நாகேஸ்வரராவ் பூங்காவுக்குப் பின்புறம், குடும்ப உறுப்பினர்கள் ஒருசேர அளிக்கும் வரவேற்பு, இயந்திர சக்திகள் ஏதும் இல்லாத அறை, புஷ்ப அலங்காரம் நிறைந்த அம்பாள் அலங்காரம், மனதில் மகேசனை மட்டும் நினைக்கும் சூழல்… பாடுவோரும் கேட்போரும் தம்மை மறந்து இசையிலும் இறை உணர்விலும் லயிக்கக்கூடிய சூழல் அல்லவா இது?

சிறுவர் முதல் பெரியோர் வரை இந்த இசையின் சான்னித்தியத்தில் மெய்மறந்து அமர்ந்திருக்கிறார்கள். கச்சேரி தொடங்குகிறது. ‘மைக்’ இல்லாத மனிதக் குரல் எவ்வளவு ஆழமாக இருக்கிறது. கண்ணைப் பறிக்கும் மின்விளக்குகள் இல்லாமல் வெறும் தீப ஒளி கண்ணுக்கு எத்தனை இதமாக இருக்கிறது…

இவ்வருடம் வீணை ஜெயந்தியையும் அபிஷேக் ரகுராமையும் இந்த பிரபாத் சங்கீதத்தில் கேட்கும் வாய்ப்புக் கிட்டியது. ‘மாயாதீத்த ஸ்வரூபிணி’யில் ஆரம்பித்து, ‘ ராமச்சந்திர கிருபால பஜுமன’ என்ற பஜனில் முடித்த ஜெயந்தியை, ரேவதியும் வாசிக்கும்படி கேட்ட வெங்கட்ராமனின் விண்ணப்பத்துக்கு இசைந்து அவர் வாசித்த ரேவதி, ஈசனுக்குப் பிரியமான ராகம் கரகரப்பிரியாவில் இருந்து ரேவதியாக மாறிவிட்டதோ என்று எண்ண வைத்தது. பிலஹரி, சுத்த தன்யாஸி, கல்யாணி ராகங்களையும் வாசித்த அவர், ‘லலிதே  பிரவருத்தே’ என்ற பைரவி கீர்த்தனையில் தன் முழு வித்வத்தையும் வெளிக்கொணர்ந்தார்.

அபிஷேக்கின் இசையைக் கேட்டவுடன் அவரது மேதைமையை உணர்ந்து வியப்பு ஏற்படும். கௌளை, சஹானா என்று ஆரம்பித்த இவர், சாருகேசியைத் தொட்டவுடன், ‘ஆஹா இன்று இவருக்குச் சாருகேசி கட்டுப்பட்டுவிட்டது’ என்று சொல்லும்வண்ணம் ‘கிருபயா பாலய’ கிருதியைக் கையாண்டார். ‘சுஜன ஜீவன’ என்ற கமாஸ் கிருதியில் ராமனைப் பல விதமாக அழைத்தார். ‘தாரகநாம சுசரித்ர தசரத புத்ர…’ என்ற வரிகளுக்குத்தான் எத்தனை சுகம்.

பல வருடங்களாக இந்த வீட்டில் வீணை, வயலின், வாய்ப்பாட்டுக் கச்சேரிகள் இதேபோல நடக்கின்றன. டிக்கெட் இல்லை, பெரிய ஏற்பாடுகள் இல்லை. கைத்தட்டலுக்காகச் செய்யப்படும் கணக்குகளும் இல்லை. ஏனென்றால் இங்கு கைத்தட்டலே கூடாது.

ஆங்கிலப் புத்தாண்டை டிசம்பர் 31 காலை 5.30 மணி முதல் ஜனவரி ஒன்று காலை 5.30 மணி வரை ‘லலிதா சஹஸ்ரநாம அகண்ட பாராயணம்’ செய்து வரவேற்கும் மரபையும் இவர்கள் பதினைந்து ஆண்டுகளாகக் கடைப்பிடித்துவருகிறார்கள். வெங்கட்ராமன் குடும்பத்தினர் கச்சேரிக்கான அனைத்து ஏற்பாடுகளையும் செய்ய, இசை நிகழ்ச்சிகளை டெல்லி முத்துக்குமார் ஒருங்கிணைக்கிறார்.

பல மேடைகளை அலங்கரித்த புகழ்பெற்ற கலைஞர்களும் வளர்ந்துவரும் இளம் கலைஞர்களும் இங்கு ஏன் வரவேண்டும் என்ற கேள்வி மனதில் எழுந்தது.

எளிமை நிறைந்த அற்புதமான சூழல், மனதுக்கு உகந்த வகையில் பாடும் சுதந்திரம், மேடை நிர்ப்பந்தம் குறித்த டென்ஷன் எதுவும் இல்லை… இவர்கள் ஆத்மார்த்தமாக இங்கு ‘பாட’ முடிகிறது என்பதைவிட ‘வழிபட’ முடிகிறது என்று சொல்லலாம். இதனால்தான் ‘பிரபாத் சங்கீதம்’ மென்மேலும் கலைஞர்களையும் ரசிகப் பெருமக்களையும் இழுக்கிறது என்று சொன்னால் அது மிகையாகாது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in