

உலக ஒளிப்பட அமைப்பு (World Photography Organisation) நடத்தும் 2017-ம் ஆண்டுக்கான உலகின் மிகப் பெரிய ஒளிப்படப் போட்டிக்கு இந்திய ஒளிப்படக் கலைஞர்கள் நால்வரின் ஒளிப்படங்கள் 10 பேர் கொண்ட இறுதிப் பரிந்துரைப் பட்டியலுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளன.
பத்து ஆண்டுகளாக வழங்கப்படும் இந்த மதிப்புமிக்க விருதுப் போட்டிக்கு, இந்த ஆண்டு 183 நாடுகளிலிருந்து 2.27 லட்சம் படங்கள் வந்தன. இந்தப் படங்களிலிருந்துதான் நான்கு இந்தியர்களின் படங்கள் பரிசு பரிந்துரைப் பட்டியலுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இன்றைய ஒளிப்படக் கலையை நேர்த்தியான வகையில் பிரதிநிதித்துவப்படுத்தும் படங்களையே பரிந்துரைப் பட்டியலுக்கு நடுவர்கள் தேர்ந்தெடுத்துள்ளனர்.
இந்தப் போட்டிக்கான முடிவுகள் மார்ச் 28, ஏப்ரல் 20 ஆகிய தேதிகளில் அறிவிக்கப்பட உள்ளன. விருதுகளை சோனி நிறுவனம் வழங்க உள்ளது. தேர்ந்தெடுக்கப்பட்ட படங்கள் ஏப்ரல் 21 முதல் மே 7 வரை லண்டனில் கண்காட்சிக்கும் வைக்கப்பட உள்ளன.
இமாலயத் தேடல்
நிலக்காட்சி - தொழில்முறைப் பிரிவு, கொல்கத்தாவைச் சேர்ந்த ஜெயந்தா ராய்
இமய மலைத்தொடர் எப்போதுமே நம்மை வியப்பில் ஆழ்த்தக்கூடிய ஒன்று. வண்ணங்களின் இடையூறு இன்றி அதன் அழகையும் கம்பீரத்தையும் கறுப்பு வெள்ளையில் பதிவு செய்துள்ளார் ஜெயந்தா ராய். பூமிப் பந்தின் மிகப் பெரிய மலைத்தொடரான இமய மலை தொடர், பருவநிலை மாற்றத்தால் அதிகம் பாதிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் இவருடைய படங்கள் எதிர்காலத்தில் முக்கிய ஆவணமாகவும் மாறக்கூடும்.
அழிக்க முடியா பக்கங்கள்
மாணவர் பிரிவு, விஜயவாடாவைச் சேர்ந்த ஷ்ரவ்யா காக்
வாசிப்பு, தேடலை வெளிப்படுத்தும் புத்திசாலித்தனமான சுய உருவப்படம் இது. நியூயார்க்கில் உள்ள ஸ்டிராண்ட் புத்தகக் கடையின் மாடத்தில் எடுக்கப்பட்ட படத்துடன் மற்ற அம்சங்கள் தனியாக எடுக்கப்பட்டு சர்ரியலிச காட்சி உருவாக்கப்பட்டுள்ளது. நியூயார்க்கில் தற்போது காட்சிக் கலைகள் படித்து வரும் ஷ்ரவ்யா வீடு, அடையாளம், தனி வெளி ஆகியவற்றை ஆவணப்படுத்த விரும்புகிறார்.
இந்தியாவில் இனவெறி
உருவப்படம் - தொழில்முறைப் பிரிவு, பெங்களூருவைச் சேர்ந்த மகேஷ் சாந்தாராம்
மேற்கத்திய நாடுகள் நம் மீது இனவெறி தாக்குதலைத் தொடுப்பது மீண்டும் மீண்டும் கவனம் பெற்றுவரும் அதே நேரம், இந்தியாவில் நிலவும் இனவெறி அதிகம் கவனம் பெறுவதில்லை. மகேஷ் சாந்தாராமின் இந்த ஒளிப்படங்கள் இந்தியாவில் ஆப்ரிக்கர்கள் சந்திக்கும் நெருக்கடிகளைக் கலாபூர்வமாகப் பதிவு செய்துள்ளன.
இலையுதிர்காலப் பதிவுகள்
பயணம் - திறந்தநிலைப் பிரிவு, மகாராஷ்டிராவைச் சேர்ந்த ஸ்வப்னில் தேஷ்பாண்டே
சட்டென்று பார்க்கும்போது, இந்தப் படத்தில் இருப்பது என்னவென்று புரியாதது போலத் தோன்றும். ஐஸ்லாந்தில் உள்ள மேற்கு ஃபியார்ட்ஸ் பகுதியில் உள்ள கல்டாலன் பனிப்பாறைச் சமவெளியில் உள்ள அழகான சிற்றருவிகளின் அற்புதக் காட்சி. இலையுதிர் கால வண்ணங்களும் சூரிய அஸ்தமனம் கசியவிடும் ஒளிச் சிதறலும் இணைந்து இந்த நிலக்காட்சியின் தனித்தன்மைக்குக் கூடுதல் அழகைச் சேர்ந்துள்ளன.