

இந்தியாவில் நான்கு வகைத் தொழிலாளர்கள்/ பணியாளர்கள் (workers/ employees) உள்ளதாக அமைப்பு சாராத் தொழில்களுக்கான தேசியக் குழு (National Commmission for Enterprises in the Unorganised Sector) குறிப்பிடுகிறது.
1. அமைப்பு சார்ந்த தொழில்களில், விதிமுறைகளுக்கு உட்பட்ட வேலை; (formal employment)
2. அமைப்பு சார்ந்த தொழில்களில், விதிமுறைகளுக்குள் வராத வேலை; (informal employment)
இதே போன்று,
3. அமைப்பு சாராத் தொழில்களில் விதிகளுக்கு உட்பட்டது (formal)
4. அமைப்பு சாராத் தொழில்களில் விதிகளுக்குள் வராதது (informal)
உண்மையில், சர்வதேசத் தொழிலாளர் அமைப்புகூட, ‘அமைப்பு சாராத் தொழில்’ என்று குறிப்பிடவில்லை; ஆனால், இதே அர்த்தத்தில், ‘இன்பார்மல்’ என்றுதான், பிரித்துச் சொல்கிறது.
மேலே சொன்ன பிரிவுகளில், 2004-05 ஆண்டின் படி, 4-வது பிரிவில்தான், 86% பணியிடங்கள் உள்ளன என்கிறது தேசிய புள்ளி விவரக் குழுவின் அறிக்கை - 2012. இவர்களில், 52% பேர் (கிராமப்புறங்களில் 65%) விவசாயத் தொழிலாளிகள். பிரிவு 2, 3-ன் கீழ் வருவோரும் அமைப்பு சாராதவர்கள்தாம். மறந்துவிட வேண்டாம். இவர்கள் தம் வாழ்க்கையில் எதிர்கொள்ளும் மிகப் பெரிய சிக்கல், இவர்களின் வேலை சார்ந்ததுதான். இவர்களில் ஒருவருக்கும் வேலை உத்தரவாதம் இல்லை. இந்த உண்மை நிலவரத்தைக் கருத்தில் கொண்டு, அடுத்த தகவலைப் பார்ப்போம்.
நிலைமை முன்னேறியுள்ளதா?
2004-2005 ஆண்டில், இந்தியாவில், துறை வாரியாக அமைப்பு சாராத் தொழிலளர்களின் சதவீதம்: உற்பத்தித் துறை - 87.70% (6.03 கோடிப் பேர்), கட்டிடத் தொழில் - 92.4%, ஓட்டல் / தங்கும் விடுதிகள் - 96.7%, மொத்த/ சில்லரை வியாபாரம் (கடைகள்) - 98.3%, மீன் பிடித்தல் - 98.7% விவசாயம் - 99.9% (பணியாட்கள்: 33.7 கோடி) . இதன்படி, விவசாயத் துறையிலும் உற்பத்தித் துறையிலும் மட்டும் சுமார் 40 கோடிப் பேர் - ‘அன்றாடங்காய்ச்சிகள்’!
இந்தப் பத்து ஆண்டுகளில், நிலைமை முன்னேறி இருக்காதா...? நியாயமான எதிர்பார்ப்புதான். அறிக்கை என்ன சொல்கிறது...?
2004- 05-ல், மொத்தப் பணியாளர்கள் - 55.65 கோடிப் பேர்; இதில், அரசுத் துறைகள், வங்கிகள், இன்சூரன்ஸ் உள்ளிட்ட பொதுத்துறை நிறுவனங்களில் பணிபுரியும், நிலையான வருமானம் கொண்டோர் - 1.66 கோடிப் பேர் (84 லட்சம் - தற்காலிக ஊழியர்).
அதாவது, மொத்தப் பணியாளர்களில், ஏறத்தாழ 3% தனியார் ‘கார்ப்பரேட்’ நிறுவனங்கள் 51 லட்சம் (தற்காலிகம் - 86 லட்சம்) ‘கார்ப்பரேட்’ அல்லாத தனியார் நிறுவனங்கள்- 25 லட்சம் (4.4 கோடி - தற்காலிகம்) அமைப்பு சாராத் தொழில்களில் பணிபுரிவோர் - 47.13 கோடி!
1999-2000-ல் 40 கோடியாக இருந்தது; 2004-05-ல், 50 கோடியை விஞ்சிவிட்டது. ஐந்து ஆண்டுகளில், 10 கோடி அதிகமாகி உள்ளது. இதுதான் நிலைமை. அரசு, பொதுத் துறை நிறுவனங்களில், ‘ஒப்பந்தத் தொழிலாளர்’ என்கிற பெயரில், அமைப்பு சாராத் தொழிலாளர்கள் மிகுந்துவருவதே இதற்கு முக்கியக் காரணம் என்கிறது அறிக்கை.
மகிழ்ச்சி தரும் செய்திகள்
ரங்கராஜன் குழுவின் பரிந்துரையின் படி (2001) விவசாயத் துறையில், பயிர் விளைவித்தலுக்கான செலவு பற்றிய முழு ஆய்வு, தொடர்ந்து நடைபெற்றுவருகிறது.
‘Comprehensive Scheme for Study of Cost of Cultivation’ என்கிற இந்தத் திட்டத்தின் கீழ், ஒரு ஹெக்டேர் பயிரிட ஆகும் செலவு, ஒரு டன் உற்பத்தி செய்ய ஆகும் செலவு என்று இரு கோணங்களில் கணக்கு எடுக்கப்படுகிறது. வேளாண் பல்கலைக்கழகங்கள் மூலம், விவசாய அமைச்சகத்தின் பொருளாதாரப் புள்ளியியல் இயக்குநரகம், இந்தக் கணக்கெடுப்பை நடத்துகிறது.
2008-11-ல் 28 பயிர் வகைகள், கணக்கில் கொள்ளப்பட்டன. நெல், கோதுமை, பருப்பு, எண்ணெய் வகைகள், பருத்தி, கரும்பு, வெங்காயம், உருளை, தேங்காய் உள்ளிட்டவை இதில் அடங்கும். ஆராய்ச்சிகள், விவசாயிகளின் உற்பத்தித் திறனை வளர்க்கும்; அதன் வழியே விவசாயத் தொழிலாளர்களின் வருமானம் பெருகும் என்கிற நோக்கத்திலேயே இது போன்ற ஆய்வுகள் செயல்படுத்தப்படுகின்றன. அமைப்பு சாராத் தொழில்களில் புழங்கும் நிதியின் அளவு, இதனைக் கணக்கெடுப்பதில் உள்ள சிரமங்கள் போன்றவற்றை இவ்வறிக்கை ஆய்ந்து பார்த்து விவரிக்கிறது.
அமைப்பு சாராத் தொழில்களின் நிதித் தேவைகள், நெருக்கடிகள் குறித்த துல்லியமான புள்ளிவிவரங்கள் இல்லை. இவர்களுக்கான நிதியுதவி பெரும்பாலும், வங்கிகள் அல்லாது, பிறர் மூலமாகத்தான் கிடைக்கிறது; இங்கெல்லாம் முறையாகக் கணக்கு பதிவுசெய்யப்படுவதில்லை. சிறு, குறு தொழில்களுக்கு, வங்கிக் கடன் கிடைப்பதில் உள்ள தடைகள், கட்டுப்பாடுகள் முற்றிலுமாக நீக்கப் பட வேண்டும்;
இவர்களுக்கு என்று, முறையான நிதிச் சந்தை (formal financial market) ஏற்படுத்தப்பட்டு, தேவை அறிந்து உதவ முன் வர வேண்டும்.
சரியான நடவடிக்கைகள்
‘ஜன் தன் யோஜனா’ போன்ற, ‘உள்ளடக்கிய வளர்ச்சி’ திட்டங்கள், (schemes for inclusive growth) இந்தத் திசையில் எடுக்கப்பட்டு வரும் சரியான நடவடிக்கைகள் எனலாம். ஓர் உண்மையை நாம் உணர்ந்துகொள்ள வேண்டும். இந்தியாவில் குறிப்பாகத் தமிழகத்தில், கூட்டுறவு இயக்கம், மிகச் சிறப்பாகச் சேவை புரிந்துவருகிறது. சிறு விவசாயிகள், நெசவாளர்கள் இன்று ஓரளவுக்கேனும், ‘எதிர் நீச்சல்’ போட்டு வாழ முடிகிறது என்றால் அதற்கு, கிராமக் கூட்டுறவுச் சங்கங்களின் பங்களிப்பே மிக முக்கிய காரணம்.
ஆனாலும், ‘நுண்ணிய நிதி வழங்கல்’ (micro financing) துறையில், நாம் இன்னமும் மிக நீண்ட தூரம் பயணிக்க வேண்டி இருக்கிறது. அமைப்பு சாராத் தொழில்களை வலுப்படுத்தி, மேலும் லாபகரமாக மாற்றினால் மட்டுமே, அங்குள்ள தொழிலாளர்களின் வாழ்க்கை நிலையில் முன்னேற் றத்தைக் கொண்டுவர முடியும். தொழிலே நிச்சயமற்றதாக இருக்கும் போது, தொழிலாளர்களின் நிலைமையும் அப்படித்தானே இருக்க முடியும்...?
‘இப்படிச் செய்யலாம்; பிரச்சினை தீர வழி பிறக்கும்’ என்று தீர்மானமாக எதையும் அறிக்கை சொல்லவில்லை. மேலும், ஆய்வு முடிவுகள் மட்டுமே போதா; அவற்றின் மீதான தொடர் நடவடிக்கைகள் மிக முக்கியம். இங்குதான் நம் பொருளாதார முடிவுகள், எதிர்பார்ப்புக்கு ஏற்ற அளவுக்கு இல்லை என்று பரவலாகக் கருதப்படுகிறது.
வலுவான அமைப்பு கொண்டவர் களின் உரத்த கோஷங்கள், அமைப்பு சாராத் தொழிலாளர்களின் அழுகையை, ஆழ அமிழ்த்துவிடுகின்றன. குறிப்பிட்ட கால அளவை நிர்ணயித்து, அதற்குள்ளாகத் தீர்க்கமான முடிவுகளை உறுதியாகச் செயல்படுத்தி, அமைப்பு சாராத் தொழில்கள்/ தொழிலாளர்கள் வளம் பெற, அரசின் கவனம், ‘இந்தப் பக்கம்’ முழுவதுமாகத் திரும்ப வேண்டும். திரும்பும். நம்புவோம்.
முதல் மரியாதை
நம் முன் உள்ள பொருளாதார சிக்கல்கள்/ சவால்கள், முழுமையாக இங்கே பதிவுசெய்யப் படவில்லை. தேர்வுக்குச் செல்லும் இளைஞர்களுக்குத் தேவையான அளவுக்கு, அடிப்படைத் தகவல்கள் மட்டுமே இவை. ஆகவே, இன்னும் ஆழமாகப் படித்துப் புரிந்துகொண்டு, சொந்தக் கருத்துகளை வளர்த்துக் கொள்ளுதல் நலம்.
பொதுவாக எந்த நாட்டிலுமே, பொருளாதாரக் கோட்பாடுகள் குறித்து சாமான்யர்கள், நேரடியாகக் கேள்வி கேட்பதில்லை. ஆனால் விலைவாசி உயர்வு, அன்னிய நேரடி முதலீடு,
ஊதிய உயர்வு போன்ற காரணங் களுக்காக எழும் குரல்களும் நடக்கும் போராட்டங்களும், அரசியலைத் தாண்டி, பொருளாதாரச் செயல் பாடுகளையே முன் நிறுத்துகின்றன.
அந்த வகையில், சமீப காலங்களில் தேசிய அளவில் மக்கள் மத்தியில் பரபரப்பாக விவாதிக்கப்பட்ட பொருளாதாரப் பிரச்சினைகளைப் பற்றிய பார்வைதான், இத்தொடரை நிறைவு செய்ய முடியும். ஒவ்வொரு துறையிலும் ஒவ்வொருவருக்கும், குறைகளும் கோரிக்கைகளும் இருக்கத்தான் செய்கின்றன. ஆனாலும் ‘முதல் மரியாதை’, சந்தேகம் இன்றி, இவர்களுக்குத்தான் - வேளாண் பெருங்குடி மக்கள்!
- வளரும்.