

இன்றைக்குப் பல இந்தியர்கள் தங்களின் சட்டைக் காலரைத் தூக்கிவிட்டு வானுக்கும் பூமிக்கும் குதித்துக் கொண்டிருக்கிறார்கள். போன வாரம் நம் இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனமான இஸ்ரோ அனுப்பிய மங்கள்யான் விண்கலம் செவ்வாய் கோளை வெற்றிகரமாக ஆராய்ச்சி செய்யத் தொடங்கியிருப்பதுதான் இந்தப் பெருமைக்குக் காரணம்.
மங்கள்யான் போன்ற தொழில்நுட்பத் திறன் மிகுந்த விண்கலம் மட்டுமல்லாமல் வித்தியாசமான பல பொருள்கள் விண்வெளிக்கு போய்த் திரும்பி வந்திருக்கின்றன. அவை என்னென்ன?
நியூட்டனின் ஆப்பிள் மரம்
நியூட்டன், லா ஆஃப் கிராவிட்டியை (Law of Gravity) கண்டுபிடிக்கப் பயன்படுத்திய ஆப்பிள் மரத்திலிருந்து எடுக்கப்பட்ட ஒரு மரத்துண்டு 2010-ல் இண்டர்நேஷனல் ஸ்பேஸ் ஸ்டேஷனுக்குக் கொண்டுசெல்லப்பட்டது.
தங்க இசைத் தட்டு
ஏலியன்ஸ் என சொல்லப்படுகிற வேற்று கிரகவாசிகள் கிட்ட “எங்க பூமியில் பல விதமான உயிரினங்கள் இருக்கின்றன” என்பதை இசை மூலம் தெரிவிக்க 1977-ல் 2 தங்க இசைத் தட்டுகள் அனுப்பபட்டன. இதுகூடவே 55 கிரீட்டிங் கார்டுகளும் அனுப்பப்பட்டன.
பாக்டீரியா
2007-ல் விண்வெளிக்குச் சென்ற வீரர்கள் ஒரு பெட்டியில் பாக்டீரியாக்களை வைத்திருந்தார்கள். 12 நாட்களுக்குப் பிறகு பூமிக்குத் திரும்பியபோது, அந்த பாக்டீரியாக்கள் மூன்று மடங்காகப் பெருகியிருந்தனவாம்.
பீஃப் சாண்ட்விச்
1965 ஜான் யங் என்னும் விண்வெளி வீரர் ஸ்பேஸ் பயணத்தின்போது பசிக்காமல் இருக்க ரகசியமா ஒரு பீஃப் சாண்ட்விச்சை எடுத்துக்கொண்டு போனார். ஆனால், விஷயம் ஆராய்ச்சி மையத்துக்குத் தெரியவர மிக நுட்பமான தொழில்நுட்பக் கருவிகள் இருக்கும் பகுதியில் எப்படி ரொட்டித் துண்டைக் கொண்டுவரலாம் எனக் கேட்டுக் கண்டிக்கப்பட்டார்.
புழு
கொலம்பியா மிஷன் என்ற ஆராய்ச்சியின்போது புழு ஒன்று 2003-ல் விண்வெளிக்குக் கொண்டு செல்லப்பட்டது. ஆனால், திரும்பி வரும் வழியில் இறந்துவிட்டது.
சினிமா நடிகரின் அஸ்தி
சைன்ஸ் ஃபிக்ஷன் (Science Fiction) படங்களில் புகழ்வாய்ந்த தொடர் படமான ஸ்டார் டிரெக் (Star Trek) படங்களில் நடித்துப் பிரபலமடைந்த நடிகர் ஜேமஸ் தூகன் 2005-ல் இறந்தார். பிறகு 2012-ல் அவருடைய அஸ்தி விண்வெளிக்குக் கொண்டு செல்லப்பட்டு அங்கேயே தூவப்பட்டது.
கால்ஃப் மட்டை, பந்து
ஆலன் ஷெப்பர்ட் என்பவர் அப்பல்லோ 14 விண்கலத்தில் சென்றபோது தன் விண்வெளி உடையில் ஒரு கால்ஃப் மட்டையும், கால்ஃப் பந்தையும் மறைத்து வைத்துக்கொண்டார். நிலவில் இறங்கியதும் நிலவை கால்ஃப் மைதானமாக்கி, ‘பொட்டேல்’ என்று மட்டையைக் கொண்டு பந்தை அடித்தாராம். இங்கு சொல்லியிருப்பது கொஞ்சம்தான்! இன்னும் பலபேர் கன்னாபின்னானு விண்வெளியில் விளையாடி இருக்கிறார்கள்.
வீடியோவைக் காண: >http://www.youtube.com/watch?v=Iq3ViOOnZDw