எளிது, எளிது சமையல் எளிது!

எளிது, எளிது சமையல் எளிது!
Updated on
2 min read

இன்றைய அவசரகதியான வாழ்க்கை முறையில் சாப்பிடுவதற்குப் போதுமான நேரத்தைப் பெரும்பாலானோர் ஒதுக்குவதில்லை. சாப்பிடுவதற்கே போதுமான நேரம் ஒதுக்க முடியாமல் இருக்கும்போது, சமைப்பதற்கு நேரம் ஒதுக்குவதைப் பற்றியெல்லாம் யோசிக்கவே முடியாது. இந்த நேரமின்மை பிரச்சினையால்தான் இன்று பலரும் ‘ரெடிமேட்’ உணவுக் கலவைகளைப் பயன்படுத்தி ஆரோக்கியத்தைக் கெடுத்துக்கொள்கின்றனர். இப்படிச் சாப்பிடுவதற்கும் சமைப்பதற்கும் நேரமில்லாமல் ஓடிக்கொண்டிருக்கும் தலைமுறையினருக்கு உதவுவதற்காகவே ஒரு யூடியூப் சேனலைத் தொடங்கியிருக்கிறார் ‘ராம்கி’ எனும் பி. ராம கிருஷ்ணன். ‘ஓ.பி.ஓ.எஸ் செஃப்’(OPOS chef) என்ற இந்த சேனல் எந்த உணவாக இருந்தாலும் அதைப் பத்தே நிமிடங்களில் சமைப்பது எப்படி என்பதை விளக்குகிறது.

“காலை உணவைச் சாப்பிடக்கூட நேரமில்லாமல் அலுவலகத்துக்கு ஓடுபவர்களை எப்படிப் பாரம்பரியமான ஆரோக்கிய உணவுகளை வீட்டிலே சமைத்துச் சாப்பிடுங்கள் என்று அறிவுறுத்துவது? அத்துடன், நம்முடைய பெரும்பாலான பாரம்பரிய உணவுகளைச் சமைக்கக் குறைந்தது ஒரு மணி நேரமாவது செலவாகும். இந்தப் பிரச்சினைக்குத் தீர்வாகத்தான் ‘ஒபிஒஎஸ் செஃப்’ வீடியோக்களை உருவாக்கினோம்” என்கிறார் ராமகிருஷ்ணன். இவர் சமையல் கலை மீதிருக்கும் காதலால் பொறியாளர் பணியை விட்டுவிட்டு உணவகங்கள் தொடங்கி நடத்தி வருகிறார்.

‘ஓபிஓஎஸ்’ எப்படிச் செயல்படுகிறது?

‘ஓபிஓஎஸ்’ என்பதின் விரிவாக்கம் ‘One Pot, One Shot’. அதாவது ‘ஒரே பாத்திரம், ஒரே ஷாட்’. ஒரேயொரு பிரஷர் குக்கரைப் பயன்படுத்தி எல்லா வகையான உணவுகளையும் சமைப்பதற்கான உத்திகளைக் கற்றுக்கொடுக்கிறது ‘ஒபிஒஎஸ் செஃப்’. இந்த யூடியூப் சேனல் உருவாவதற்கு அடித்தளமாகச் செயல்படுவது ‘யுபிஎஃப்’ (UBF - United By Food) என்ற ஃபேஸ்புக் குழு. உலகம் முழுவதலிருந்தும் பதினொரு ஆயிரத்துக்கு மேற்பட்டவர்கள் இந்தக் குழுவில் உறுப்பினர்களாக இருக்கிறார்கள்.

“இந்த ‘ஒபிஒஎஸ் செஃப்’ சேனலை உருவாக்குவதற்குப் பின்னால் பதிமூன்று ஆண்டு கால கடின உழைப்பு இருக்கிறது. கிட்டத்தட்ட 780 வலைப்பூக்களின் பதிவுகளாலும் ஆயிரக்கணக்கான சமையல் ஆர்வலர்களின் பேரார்வத்தாலும் இந்த முயற்சி சாத்தியமாகியிருக்கிறது. ஓர் உணவு வகையை யூடியூபில் பதிவேற்றம் செய்வதற்கு முன்னர் பல மணிநேர உரையாடல்களை எங்களுடைய ஃபேஸ்புக் பக்கத்தில் நடத்துவோம். எங்களுடைய குழுவினர் குறைந்தது இருபது பேராவது அந்த உணவை முயற்சி செய்துபார்ப்பார்கள். பத்து நிமிடத்துக்குள் செய்யும்போது அந்த உணவின் பாரம்பரியமான சுவையோ, சத்துகளோ குறைந்துவிடக் கூடாது என்பதில் கவனமாக இருப்போம். அதனால், சரியான சுவை வரும்வரை எங்கள் குழுவினர் முயற்சி செய்துகொண்டேயிருப்பார்கள். சில உணவு வகைகளைச் சரியான சுவையில் கொண்டு வருவதற்கு ஒரு மாதம்கூட ஆகிவிடும். இப்படி இந்த சேனலில் பதிவேற்றப்பட்டிருக்கும் ஒவ்வொரு உணவு செய்முறைக்குப் பின்னாலும் நூற்றுக்கணக்கானவர்களின் உழைப்பு இருக்கிறது” என்று சொல்லி ஆச்சரியப்படுத்துகிறார் அவர்.

எல்லோராலும் சமைக்க முடியும்!

இந்த சேனல் ஆரம்பித்து சில மாதங்கள்தான் ஆகின்றன. அதற்குள் 150-க்கும் மேற்பட்ட உணவு வகைகளுக்கான செய்முறை வீடியோக்கள் பதிவேற்றம் செய்யப்பட்டிருக்கின்றன. மைசூர்பாக், பாஸ்தா, பருப்பு உசிலி, சர்க்கரைப் பொங்கல், பிரியாணி, நூடுல்ஸ், பாலக் பனீர், பாதாம் அல்வா, சாம்பார், செட்டிநாடு கறி, சட்னி என விதவிதமான உணவுவகைகளின் செய்முறை வீடியோக்கள் பதிவேற்றம் செய்யப்பட்டிருக்கின்றன. “சில ஆண்டுகளுக்கு முன், என்னுடைய பணி நிமித்தமாக பக்ரைன் நாட்டில் ஓர் ஆண்டு வசிக்க நேரிட்டது. அப்போது சரியான சாப்பாடு கிடைக்காமல் ரொம்பக் கஷ்டப்பட்டேன். சரி, நாமே சமைத்துப் பார்க்கலாம் என்று முயற்சி செய்யும்போதுதான் இந்தச் சமையல் செய்முறைகள் ஏன் இவ்வளவு கடினமாக இருக்கின்றன என்பதை யோசிக்க ஆரம்பித்தேன். இந்தச் செய்முறைகளை எளிமைப்படுத்தினால் எல்லோராலும் எல்லாவற்றையும் சமைக்க முடியுமே என்ற எண்ணத்தில் உருவானதுதான் இந்த ‘ஓபிஓஎஸ்’ சமையல் உத்தி” என்கிறார் ராமகிருஷ்ணன்.

பொதுவாக ‘மைசூர்பாக்’ போன்ற இனிப்பு வகைகளை வீட்டில் சமைப்பது கடினம் என்று பலரும் நினைப்பார்கள். சமையலைச் சுற்றி உலவும் இதுபோன்ற பல வகையான பிம்பங்களை உடைக்கிறது இந்த சேனல். இவர்களுடைய வீடியோக்களில் உணவு வகைகளை அலங்காரமாகப் பளிச்சென்று காட்டுவதற்கு எந்த முயற்சியும் எடுத்துக்கொள்ளவில்லை. ஏதாவது ஓர் உணவு சமைத்துக்கொண்டிருக்கும்போது அடிபிடித்துவிட்டால்கூட, அந்த வீடியோவை அப்படியேதான் பதிவேற்றம் செய்திருக்கிறார்கள். எந்தக் காரணத்தால் அடிபிடித்தது, அதைத் தவிர்க்க என்ன செய்யவேண்டும் என்பதையும் அந்த வீடியோவில் விளக்கிவிடுகிறார்கள். இதனால், ‘ஓபிஓஎஸ் செஃப்’ சேனலின் பிரபலம் யூடியூபில் அதிகரிக்கத் தொடங்கியிருக்கிறது.

பசியும், உணவும் எப்படி எல்லோருக்கும் பொதுவானதோ அதே மாதிரி, சமையலும் பொதுவானதுதான். அதை எளிமைப்படுத்தப் பெருமுயற்சி எடுத்திருக்கும் ‘ஓபிஓஎஸ் செஃப்’ குழு பாராட்டுக்குரியது.

மக்களே கமான்… அந்த ஸ்டவ்வைப் பற்ற வைங்க!

‘ஒபிஒஎஸ் செஃப்’ சேனலைப் பார்க்க: >https://www.youtube.com/channel/ UCASbW92DB_F-hC5Xo9TqCjw

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in