

வீட்டில் உள்ள முக்கியமான அறைகளில் ஒன்று சமையலறை. இன்று கலை அம்சங்களுடன் இணைந்த ஒன்றாகி விட்டன சமையலறைகள். மாடுலர் கிச்சன் தற்போது பிரபலமாகி வருகிறது. வாடகை வீட்டிற்குச் சென்றாலும் பெண்கள் முக்கியமாகப் பார்ப்பது சமையலறை வசதிகளையே. வீடு கட்டும் போது அல்லது பில்டர்களிடம் புக் செய்யும் போது சமையலறை குறித்து உங்களது விருப்பத்தைத் தெளிவாகச் சொல்லிவிட வேண்டும். சமையலறையில் காற்றோட்டத்திற்கு விசாலமான ஜன்னல் முக்கியம். சமையல் சாமான்களைக் கழுவப் பயன்படுத்தப்படும் சிங்க்கில் இருந்து இணைக்கப்படும் ஹோஸ் முறையாக அமைக்கப்படுகிறதா என்பதை நிச்சயம் கவனிக்க வேண்டும். சரிவர இல்லாமல் அடைப்பு ஏற்பட்டால், சமையலறை கலகலத்துவிடும்.
பழைய வீடுகளில் புகை போக்கிகள் கண்டிப்பாக அமைப்பார்கள். ஆனால் இப்போது அதைக் காண்பது அரிதாகி விட்டது. எனவே, காற்றோட்டம் கிடைக்க சமையலறைக்குக் கதவுப் பொருத்தாமல் இருப்பதே நல்லது. அப்போதுதான் ஜன்னல், கதவு வழியாக வெளிச்சமும் காற்றோட்டமும் கிடைக்கும். சமையலறைகளில் போதுமான வெண்டிலேட்டர் வசதி இல்லை என்றால், துர்நாற்றம் ஏற்பட வாய்ப்புகள் அதிகம். எனவே காற்றோட்டம் ஏற்படும் வகையில் வெண்டிலேட்டர் அமைக்க வேண்டும்.