Last Updated : 06 Jan, 2017 11:34 AM

 

Published : 06 Jan 2017 11:34 AM
Last Updated : 06 Jan 2017 11:34 AM

கிராமங்களை மீட்கும் ‘செல்ஃபி’ இளைஞர்கள்

வாழ்க்கைத் தரத்தை உயர்த்திக்கொள்வதற்காக நகரங்களுக்கு இடம்பெயரும் இளைஞர்களில் பெரும்பாலானவர்கள் தங்கள் சொந்தக் கிராமங்களை ஒரேயடியாக மறந்துவிடுகிறார்கள். அப்படிப்பட்டவர்களுக்கு மத்தியில், பெரம்பலூர், பேரளி கிராமத்தைச் சேர்ந்த இளைஞர்கள் தங்களுடைய ஓய்வு நேரத்தைச் சொந்த ஊரின் மேம்பாட்டுக்காகச் செலவிட்டு ஆச்சரியப்படுத்துகிறார்கள்.

“ஒவ்வொரு விடுமுறைக்கும் கிராமத் துக்குத் திரும்பி வரும்போதெல்லாம் சின்ன வயசுல உருண்டு புரண்டு வளர்ந்த ஊரை, அதோட பாரம்பரியம் கெடாமல் மீட்பதற்கு உத்வேகம் வரும். பால்ய நண்பர்களோடு பேசும்போது அவங்களுக்கும் அந்தக் கனவு இருந்தது தெரிய வந்தது. அப்புறமென்ன களத்துல இறங்கிட்டோம்” என்று உற்சாகமாகப் பேசுகிறார் பேரளியைச் சேர்ந்த ராகவன்.

இணைந்த கைகள்

நகரங்களுக்குச் சென்றுவிட்ட பிறகும், படித்த இளைஞர்களுக்குச் சொந்தக் கிராமத்தின் மீதான பிடிப்பு அழிக்க முடியாதது. இவர்களில் பலர் நேரம் கிடைக்கும் போதெல்லாம் கிராமத்துக்குச் சென்று, தம்மைப் போன்ற இளைஞர்களை ஒன்றுசேர்த்து சொந்த மண்ணின் உயர்வுக்காக உழைக்கிறார்கள். பெரம்பலூர் மாவட்டத்தில் இப்படிச் செயல்படுபவர்களின் வித்தியாசமான உத்திகள், மற்ற இளைஞர்களுக்கும் முன்னுதாரணமாக இருக்கிறது.

“கிராம அரசுப் பள்ளியில் படித்து, உயர் படிப்புக்காக நகரங்களுக்குச் சென்று அங்கேயே ஐ.டி. துறையில் வேலை என்று செட்டிலான ஊர்ப்புறத்து இளைஞர்கள் பலரில் நானும் ஒருவன். இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு, அரியலூர் புத்தகத் திருவிழாவைத் திறந்துவைக்க முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல்கலாம் வந்திருந்தார். எங்களுடைய பகுதிக்கு முதலும் கடைசியுமாக வந்து சென்ற சில நாட்களிலே அவர் இறந்துவிட்டார். அவர் நினைவாக ஊருக்கு ஊர் மரக்கன்றுகளை நட்டார்கள். கலாமின் கருத்துகளால் வசீகரிக்கப்பட்ட இளைஞர்கள் சிலர் ஒருங்கிணைந்து எங்களுடைய பகுதியில் மரக்கன்றுகளை நட்டோம். அடுத்த விடுமுறையில் ஊர் திரும்பியபோது செழிப்பாகத் தலையாட்டி அந்தக் கன்றுகளும் எங்களை வரவேற்றன” என்று தங்களுடைய முதல் முயற்சியைப் பற்றிப் பகிர்ந்துகொள்கிறார் ராகவன்.

அதற்குப் பிறகு பொங்கல், தீபாவளி போன்ற பண்டிகைகளுக்குக் கிராமத்துக்கு வரும்போது, நண்பர்கள் அனைவரும் சேர்ந்து மரக்கன்றுகள் நடுவதைப் பரவலாகக் கொண்டுசெல்ல முடிவு செய்திருக்கிறார்கள். “அதுவரை ரசிகர் மன்றம், சாதிக்கட்சி பேர்ல தனிக் குழுக்களா இருந்த இளைஞர்கள் ஒரே குடைக்குக் கீழே இப்படித்தான் ஒன்று சேர்ந்தோம்” என்கிறார் ராகவன்.

மரக்கன்றுகளுடன் ஒரு ‘செல்ஃபி’

கிராமங்கள்தோறும் மரக்கன்றுகள் வைக்க முடிவுசெய்ததும், அதை வழக்கமான முறையில் செய்யாமல் வித்தியாசமாகச் செய்ததால் இவர்கள் கவனிக்கப்பட்டிருக்கிறார்கள். “பிறந்த நாள், திருமண நாள், புது வேலை, தனிப்பட்ட சந்தோஷங்கள் எனக் காரணம் எதுவானாலும், ‘மச்சான் ட்ரீட்…’ என்று கேட்கிற மாதிரி சம்பந்தப்பட்டவர்கள் கையால மரக்கன்று நடுவதை வழக்கப்படுத்தினோம். மறக்காமல் அதை ‘செல்ஃபி’ எடுத்து சமூக ஊடகங்களில் ஆவணமாக்கினோம்.

இதனால், எங்களுடைய அடுத்த செயல்பாடுகளுக்கு வரவேற்பு கிடைத்த அதேநேரம், கன்றுகளை வைத்தவர்கள் கூடுதல் பொறுப்புடன் அதைப் பார்த்து வளர்த்தார்கள். அப்பப்போ மரக்கன்றோட அதை நட்ட இளைஞனின் செல்ஃபி பதிவுகள் தொடர்ந்திட்டிருக்கும். அவரை ஊக்குவிக்கும் விதமாக அதுக்கு சக நண்பர்களோட லைக்ஸ், கமெண்ட்ஸ் பிச்சுக்கும்” என்று உற்சாகமாகச் சொல்கிறார் ராகவன்.

வரப்பிரசாதமான சமூக ஊடகங்கள்

மரக்கன்று நடுவதோடு மட்டுமல்லாமல் இவர்களுடைய பகுதியில் இருக்கும் சமூக ஆர்வலர்களோடு இணைந்து கிராமத்தை மேம்படுத்தும் பல விஷயங்களைச் செய்திருக்கிறார்கள் இந்த ‘செல்ஃபி இளைஞர்கள்’. சீமைக்கருவேல மரங்களை அகற்றுதல், தூர்ந்துபோன பொதுக்கிணறுக்கு உயிர் கொடுப்பது, ஏரி குளங்களைச் சீர்ப்படுத்தி மரம் நடுவது, துணிப்பை பயன்பாடு, பனை விதைத்தல் போன்ற விஷயங்களை முன்னெடுத்துச் சென்றிருக்கிறார்கள் இவர்கள்.

“இந்த விஷயங்களையெல்லாம் எங்களோட தனிப் பாணில நடைமுறைக்குக் கொண்டுவந்தோம். சமூக ஊடகங்கள் எங்களுக்கு வரப்பிரசாதமா இருந்துச்சு. நாங்க உள்ளூர் இளைஞர்கள், நகரங்களில் வேலை பார்ப்பவர்கள், பிழைப்புக்காக வெளிநாடு சென்றவர்கள்னு மூன்று பிரிவுகளாக இருந்தோம். வெளிநாட்டு நண்பர்கள் பொருளாதார உதவியைப் பார்த்துக்க, என்னை மாதிரியானவர்கள் புதிய திட்டங்களுக்கு ‘ஸ்கெட்ச்’ போடுவோம்.

உள்ளூர் இளைஞர்கள் களத்தில் இறங்கி எல்லாத்தையும் தயார் செய்து வைப்பார்கள். இதற்கென ஃபேஸ்புக்கில் ‘ஈவன்ட்ஸ்’, வாட்ஸ்அப்பில் பிரத்யேகக் குழுக்கள் உருவாக்கப்படும். கிராமத்தில் காதுகுத்து, கல்யாணமென்று ஒண்ணு சேரும்போது எங்களோட சமூக செயல்பாட்டு நிகழ்ச்சிகளையும் ஒரு விஷேசமா செய்வோம். இந்த ஒளிப்படங் களைப் பகிர்ந்துகொள்ள ஆரம்பித்ததில், பக்கத்துக் கிராமங்களில் இருந்தெல்லாம் இளைஞர்கள் புதிய படையாக உருவானார்கள்” என்கிறார் ராகவன்.

மாற்றத்தை நோக்கிய பயணம்

இந்த இளைஞர்கள் குழு விரிவானதால், அவர்களின் உதவியோடு அரசுப் பள்ளிகளில் தூய்மைப் பணி, பள்ளி மாணவர்களுக்கு ஆளுமைப் பயிற்சி, கற்றல் குறைபாடுள்ள மாணவர்களுக்கு பிரத்யேகப் பயிற்சி, நூலகம் இல்லாத ஊர்களில் படிப்பகங்கள் போன்ற வசதிகளை ஏற்படுத்திக் கொடுத்திருக்கிறார்கள். அத்துடன், கிராமப்புறங்களில் அழிந்துகொண்டிருக்கும் புவியியல், வரலாற்றுப் பெருமைகளை மீட்பதற்கான விழிப்புணர்வு, குறைதீர் கூட்ட நாளில் கிராம மக்களின் கோரிக்கைகளைப் புகார் மனுக்களாக அளிப்பது என்று அடுத்தடுத்த கட்டங்களுக்கு நகர்ந்திருக்கிறார்கள்.

“எங்க எல்லாருடைய பெயரிலேயும் ஊருக்கு ஊர் மரக்கன்றுகள் உண்டு. நாங்கள் யாரும் நெகிழிப்பை பயன்படுத்துவதில்லை. துணிப்பையை மட்டுமே பயன்படுத்துகிறோம். இளைஞர்கள் மட்டுமே இயங்கிட்டிருந்த இந்தப் பணிகளில், ஃபேஸ்புக் மூலமாக ஓய்வுபெற்ற அதிகாரிகள் பலரும் கைகோத்திருக்காங்க. அவர்களோட வழிகாட்டுதல் மேலும் எங்களைப் புடம் போட்டிருக்கு. ஊருக்கு ஊர் இளைஞர்கள் ஒண்ணுசேர்ந்தா அடிக்கிற கொட்டமும் விளையாட்டும் சந்தோஷமும்தான் எங்களுடையதும். சின்ன வித்தியாசம் என்னன்னா, அதிலும் ஒரு தொலைநோக்கு, சேவை மனப்பான்மை, அதில் கிடைக்கும் திருப்தி அப்படின்னு கொஞ்சம் பெரிய விஷயங்கள் அடங்கியிருக்கு,” என்று நம்பிக்கையுடன் சொல்கிறார் ராகவன்.

இந்தச் செயல்களில் பள்ளி மாணவர்களையும் ஈடுபடுத்தியதில், அவர்களும் தங்களுடைய பங்களிப்பைச் செய்ய ஆரம்பித்திருக்கிறார்கள். “இருட்டை இகழ்வதைவிட ஒரு மெழுகுவர்த்தியை ஏற்றி வைன்னு சொல்வாங்க. அதைத்தான் விதவிதமாக முயற்சி பண்ணிட்டிருக்கோம். சில ஆண்டுகள்ல எங்க கிராமங்களின் அடையாளத்தை நிச்சயம் மாத்திருவோம்” உறுதியுடன் ராகவன் சொல்ல, அதை வழிமொழிவதுபோல அவருடைய நண்பர்கள் உற்சாகக் குரல் எழுப்பி அந்தத் தருணத்தின் ‘செல்ஃபி’க்குத் தயாரானார்கள்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x