

சில ஆண்டுகளுக்கு முன்பு, நான் என் நண்பனுடன் அமர்ந்திருந்த அந்தத் திரையரங்கில் நிலவிய சலசலப்பிலிருந்து பார்வையாளர்களின் அதிருப்தியை என்னால் உணர முடிந்தது. தமிழின் சிறந்த இயக்குநர்களில் ஒருவர் இயக்கிய படம் அது. படம் பார்க்கப் பார்க்க, என் மனதில் மெள்ள, மெள்ள ஒரு துயரம் படிய ஆரம்பித்தது. நமது மகா கலைஞர்கள், நம் கண் முன்பாகத் தங்கள் சிம்மாசனங்களிலிருந்து இறங்கும் தருணங்கள், வாழ்வின் துயரமான கணங்களுள் ஒன்று. படம் முடிந்தவுடன் என் நண்பன், “வயசான காலத்துல படம் எடுத்து நம்ப உயிர எடுக்கிறாங்க” என்றான். அன்றிலிருந்து ஒரு கேள்வி என் மனதில் ஓடிக்கொண்டேயிருக்கிறது. முதுமை ஒரு படைப்பாளியின் படைப்புத் திறனைப் பாதிக்குமா?
நோபல் பரிசு பெற்ற எழுத்தாளர் டோரிஸ் லெஸ்ஸிங் தனது 89 வயதில், ‘எனது படைப்புத்திறன் வற்றிவிட்டது. உங்கள் படைப்புத்திறன் எப்போதும் இருக்கும் என்று கருதாதீர்கள். எனவே, உங்களிடம் படைப்புத்திறன் இருக்கும்போதே அதை முழுமையாகப் பயன்படுத்திக்கொள்ளுங்கள். ஏனெனில், அத்திறன் ஒரு கட்டத்தில் மறைந்துவிடும்’ என்று கூறியுள்ளார்.
மேலும், அமெரிக்க எழுத்தாளர்கள் பிலிப் ரோத் தனது 79 வயதிலும், அலிஸ் மன்ரோ தனது 81 வயதிலும் தங்கள் எழுத்துப் பணியிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தனர். அச்சமயத்தில் இந்நிகழ்வுகள் படைப்பாளிகள் மத்தியில் ஒரு பரவலான விவாதத்தைக் கிளப்பிவிட்டன. முதுமை ஒரு கலைஞனின் படைப்புத்திறனை மெள்ள மெள்ள அழித்துவிடுமா?
இது தொடர்பாக உலகம் முழுவதும் ‘முதுமை மற்றும் படைப்புத்திறன்’ என்ற தலைப்பில் கடந்த அறுபதாண்டுகளுக்கும் மேலாகப் பல்வேறு ஆராய்ச்சிகள் நடைபெற்றுவருகின்றன. எனது ரேஞ்சுக்கு தமிழ்ச்சூழலில் இயங்கும் எழுத்தாளர்களையும், திரைப்பட இயக்குநர்களையும் மட்டும் கணக்கில் எடுத்துக்கொண்டு ஒரு சிற்றாய்வில் ஈடுபட்டேன். நான் கணித்தவரையிலும் 40-50 வயதுகளில் பல கலைஞர்களும் மிகுந்த படைப்பூக்கத்துடன் இருந்துள்ளனர். பலரும் தங்கள் மாஸ்டர்பீஸ்களை இந்த வயதிலேயே படைத்துள்ளனர்.
தி. ஜானகிராமனின் சிறந்த படைப்பான மோகமுள் 1964-ல் வெளிவந்தபோது, அவருடைய வயது 43. எழுத்தாளர் ஜெயகாந்தன் தனது நாற்பது ப்ளஸ் வயதுகளில் தன் படைப்பூக்கத்தின் உச்சியில் இருந்தார்.
இயக்குநர் பாலச்சந்தர் தனது நாற்பது வயதுக்குப் பிறகு 1970-களில் வரிசையாகத் தனது சிறந்த படங்களை எல்லாம் அளித்தார். பாரதிராஜாவின் மாஸ்டர்பீஸான ‘முதல் மரியாதை’ வெளிவந்தபோது, அவருடைய வயது 45. பாலுமகேந்திராவின் ஆகச் சிறந்த படைப்பான ‘வீடு’ வெளிவந்தபோது, அவரது வயது 48.
இதையெல்லாம் மனதில் கொண்டு கலைஞர்கள் தங்கள் நாற்பது ப்ளஸ் வயதுகளில்தான் படைப்பூக்கத்தின் உச்சியில் இருப்பார்கள் என்று தவறாக நினைத்துக்கொண்டிருந்தேன். ஆம். தவறாகத்தான். ஏனெனில், மகத்தான கலைஞர்கள் எல்லா ஆய்வுகளையும், கணிப்புகளையும் தங்களின் அற்புதமான கலை ஆற்றலால் பொய்யாக்கிக்கொண்டே இருக்கிறார்கள்.
பாலச்சந்தரின் 58-வது வயதில் எடுக்கப்பட்ட ‘உன்னால் முடியும் தம்பி’ படத்தின் முற்பகுதியில் தந்தை-மகன் மோதலை அவர் சித்தரித்திருந்த விதம் அவருடைய படைப்புத்திறனுக்கு ஒரு சேதாரமும் ஏற்படவில்லை என்று நிரூபித்தது. எழுத்தாளர் சுஜாதா அறுபது வயதுக்கு மேல், ‘கற்றதும் பெற்றதும்’, ‘ஸ்ரீரங்கத்துத் தேவதைகள்’ என்று அடித்துத் தூள் கிளப்பிக்கொண்டிருந்தார்.
எழுத்தாளர் ஜெயமோகன் இப்போது தனது 55 வயதில் மகாபாரதம் நாவல் வெண்முரசு, தத்துவ, அரசியல், கலை இலக்கிய விவாதங்கள், பயணக் கட்டுரைகள், திரைப்பட வசனங்கள் என்று எழுதிக் குவிப்பதுடன், நடுவில் யாருடனாவது கருத்துச் சண்டை போட்டுத் தன்னை ரிலாக்ஸ் செய்துகொள்கிறார். எழுத்தாளர் சாருநிவேதிதா இப்போது தனது 63 வயதில், பல்வேறு இதழ்களில் பத்திகள், நாவல் என்று செம பிஸியாக இருக்கிறார். பல அற்புதமான சிறுகதைகளையும், கட்டுரைகளையும் எழுதியுள்ள எழுத்தாளர் அ. முத்துலிங்கம், சமீபத்தில் ‘பொன்னுருக்கு’ என்ற அருமையான நகைச்சுவை ததும்பும் கட்டுரையை எழுதியபோது அவருடைய வயது 80. எனவே, நாற்பது ப்ளஸ் வயதுகளில்தான் படைப்பாளிகள் மிகுந்த படைப்பூக்கத்துடன் திகழ்வார்கள் என்ற கருத்தை மாற்றிக்கொண்டேன்.
அப்படியென்றால் பல கலைஞர்கள், தங்கள் பிற்காலத்தில் வழங்கிய படைப்புகள் ஏன் சாரமின்றிப் போயின? இதே கலைஞர்கள் தங்கள் இளமைக் காலத்தில் வழங்கிய படைப்புகள் ஏன் அற்புதமாக இருந்தன? இது குறித்து ஆராய்ச்சியாளர்கள் பின்வரும் கருத்துகளைத் தெரிவிக்கிறார்கள்:
பொதுவாக ஒருவர் வாழ்க்கையில் ஒரு நிலைக்கு வரும் வரை, அவர்களின் வாழ்க்கை அனுபவச்செழுமை மிகுந்ததாக இருக்கிறது. அந்த அனுபவங்களே அவர்களுடைய மிகச்சிறந்த படைப்புகளுக்கு ஆதாரமாகின்றன. பிறகு தங்கள் கலைவாழ்க்கையின் உச்சத்தை அடைந்த உடன், பெரும்பாலான கலைஞர்கள் வெளி உலகிலிருந்து தங்களை முற்றிலும் துண்டித்துக்கொள்கிறார்கள். தங்களைச் சுற்றி ‘ஆமாம் சாமி’ போடும் ஒரு ஜால்ரா கூட்டத்தை மட்டுமே அனுமதிக்கிறார்கள். தப்பித் தவறி விமர்சனங்களை எதிர்கொள்ள நேர்ந்தால் எதிர்த்துக் காட்டடி அடிக்கிறார்கள்.
அவர்களுடைய படைப்புகள் குறித்த விமர்சனங்கள் வரும்போது, அவை ஏன் நன்றாக இல்லை என்று அந்த விமர்சகரிடம் விவாதிக்க வேண்டும். பிறகு தனது நம்பிக்கைக்குரிய நண்பர்களிடம் இந்த விமர்சனம் சரிதானா, இல்லை வெறுப்பேத்துறதுக்காகச் சொன்னதா என்று பேசி ஒரு தெளிவுக்கு வர வேண்டும். ஆனால், இதைப் பலரும் செய்வதே இல்லை. பல கலைஞர்களின் பிற்கால வீழ்ச்சிக்கு இது ஒரு முக்கியமான காரணம்.
சரி, தொடர்ந்து படைப்பூக்கத்துடன் செயல்பட கலைஞர்கள் என்ன செய்ய வேண்டும்? வித்தியாசமான காரியங்களில் ஈடுபட வேண்டும். வித்தியாசமான புத்தகங்களைப் படிக்க வேண்டும். புதிய இடங்களுக்குப் பயணம் மேற்கொண்டு புதிய மனிதர்களைச் சந்திக்க வேண்டும். விமர்சகர்கள் சொல்வதைக் காது கொடுத்துக் கேட்க வேண்டும். இவ்வாறு அவர்கள் செயல்பட்டால் ,தொடர்ந்து படைப்பூக்கத்துடன் செயல்படமுடியும் என்கிறார்கள் விஞ்ஞானிகள்.
மேரிலி ஷாபிரோ என்ற அமெரிக்கப் பெண் சிற்பி ஓவியங்களும் வரைவார். வயதாக ஆக 4 முதல் 5 அடிவரை உயரமுடைய வெண்கல சிற்பங்களைக் கையாள்வதில் அவருக்குச் சிரமம் ஏற்பட்டது. எனவே, அவர் கம்ப்யூட்டர் டிசைனிங் கற்றுக்கொள்ள ஆரம்பித்தார். இது குறித்து அவர், “எனது சக மாணவர்கள் தங்கள் இருபது வயதுகளில் இருந்தனர். அவர்களுக்கு ஒரு கணினியை எப்படி இயக்க வேண்டும் என்று தெரியும். எனக்கு எதுவும் தெரியாது.
அப்போது எனக்கு வாழ்க்கையே மிகவும் வெறுப்பாக இருக்கும். ஆனால், போட்டோஷாப்பை கற்றுக்கொண்ட பிறகு எனது பழைய ஓவியங்களை போட்டோ ஷாப்பில் புதிய பிம்பங்களாக மாற்றினேன். அது பலராலும் ரசிக்கப்பட்டது. புதிய விஷயங்கள் எப்போதும் நமக்குப் புதிய வாய்ப்புகளை உருவாக்கித் தருகின்றன” என்று கூறும் ஷாபிரோ கம்ப்யூட்டர் டிசைனிங் வகுப்பில் சேர்ந்தபோது அவருடைய வயது 88.
‘எல்லாம் சரி, உங்க வயசு என்ன சார்?’ என்று கேட்கிறீர்களா? அட போங்க... வயசெல்லாம் ஒரு மேட்டரா..?
கட்டுரையாளர். எழுத்தாளர்
தொடர்புக்கு: grsnath71@gmail.com