

சைக்கிள் நமது வாழ்க்கையோடு வாழ்க்கையாகப் பின்னிப் பிணைந்த வாகனம். மோட்டர் சைக்கிளின் எண்ணிக்கை பெருகிவிட்ட இன்றைய காலகட்டத்திலும் சைக்கிள் உபயோகிப்பவர்கள் இருந்துகொண்டிருக்கிறார்கள். சைக்கிள் சந்துபொந்துகளில் எல்லாம் வளைந்து செல்லும் சுதந்திர வாகனம். சைக்கிள்களுக்குச் சிக்னல்கள் ஒரு பொருட்டும் இல்லை. இந்த சைக்கிள் பற்றிச் சில சுவாரஸ்யமான தகவல்கள் இருக்கின்றன.
சைக்கிளைப் பயன்படுத்துபவர்களில் 25 சதவிகிதத்தினர் வீட்டிலிருந்து சுமார் 2 கி.மீ. தூரப் பயணத்திற்கே அதைப் பயன்படுத்துகிறார்கள். வாரத்திற்கு 3 மணி நேரமோ 30 கிலோ மீட்டரோ சைக்கிள் பயணம் மேற்கொண்டால் இதயம் தொடர்பான வியாதிகளைத் தள்ளிவைக்கலாம். உலகத்தில் சுமார் 100 கோடி சைக்கிள்கள் சாலையில் பயணிக்கின்றன என்றும் ஆண்டுதோறும் 10 கோடி சைக்கிள்கள் தயாரிக்கப்படுகின்றன என்றும் ஒரு ஆய்வு சொல்கிறது.
டாவின்சி வரைந்த சைக்கிள்
சைக்கிளைக் கண்டுபிடிக்கும் முயற்சி நீண்ட காலத்திற்கு முன்னரே தொடங்கியுள்ளது. கி.பி. 1490இலேயே லியானார்டோ டாவின்ஸி ஏறக்குறைய சைக்கிள் மாதிரியான ஒரு வாகனத்தை வரைந்திருக்கிறார். சைக்கிளை முதலில் டி சிவ்ராக் என்னும் பிரெஞ்சுக்காரர் கிபி 1790இல் வடிவமைத்துள்ளார். இதில் பெடலோ ஸ்டியரிங்கோ கிடையாது. ஆனால் பார்ப்பதற்கு சைக்கிள் போலவே இருந்துள்ளது. இதைவிட மேம்பட்ட சைக்கிளை 1817இல் கார்ல் வான் ட்ரைஸ் என்னும் ஜெர்மன் பிரபு உருவாக்கியுள்ளார். இதிலும் பெடல் கிடையாது. கால்களைத் தரையில் ஊன்றித்தான் இழுத்துச் சென்றுள்ளார்கள். இதற்கு டிரைசைன் (Draisine) எனப் பெயர். இந்த வாகனத்தை 1818ஆம் ஆண்டு ஏப்ரல் 6 அன்று இவர் பாரிசில் காட்சிக்கு வைத்துள்ளார். இந்த இரு சக்கர வாகனம்தான் சைக்கிளை உருவாக்கச் சரியான வழியைக் காட்டியுள்ளது.
இதன் பின்னர் ஸ்காட்லாந்தைச் சேர்ந்த கிர்க்பாட்ரிக் மேக்மில்லன் 1839இல் நவீன சைக்கிளை வடிவமைத்துள்ளார். இதுவும் தோல்வியில்தான் முடிந்தது. சைக்கிள் உருவாக்கும் முயற்சிக்கிடையில் பைசைக்கிள் என்னும் சொல் பிரான்ஸில் 1860இல்தான் புழக்கத்திற்கு வந்துள்ளது.
மேக்மில்லனைத் தொடர்ந்து 1863இல் பிரெஞ்சு நாட்டைச் சேர்ந்த கொல்லரான எர்னஸ்ட் மிச்சௌ என்பவர் இரும்புச் சட்டம், மரத்தாலான சக்கரம் கொண்ட, ஓட்டுவதற்கு எளிதான சைக்கிளைத் தயாரித்துள்ளார். இவர் 1866இல் தொடக்க கால சைக்கிள் தயாரிப்பு நிறுவனத்தையும் அமைத்துள்ளார். மரச் சக்கரத்திற்குப் பதில் கெட்டியான ரப்பர் டயர் பயன்படுத்தப்பட்ட சைக்கிள் 1869இல் உருவாகியுள்ளது. ஆனால் காற்றடைத்த டயரை 1889இல்தான் உருவாக்கியுள்ளனர். சைக்கிள் வடிவம் ஓரளவு முழுமையான பின்னர் 1884இல் ஜே.கே.ஸ்டார்லி என்பவர் பாதுகாப்பான சைக்கிளை உருவாக்கியுள்ளார். 1962இல் நவீன சைக்கிள் பெருகத் தொடங்கியுள்ளது. இப்போது மின்சக்தி மூலமா இயங்குகிற சைக்கிள்கள் சந்தையில் கிடைக்கின்றன.
சைக்கிளால் உலகைக் கடந்தவர்
குறிப்பிட்ட தூரத்தைக் காரில் கடப்பதற்குத் தேவைப்படும் ஆக்ஸிஜனில் பாதியிருந்தால் போதும், அதே தூரத்தை சைக்கிளில் கடந்துவிடலாம். அது மட்டுமல்ல சைக்கிள் சுற்றுச்சூழலுக்கு உகந்த வாகனம். ஒரு கார் நிறுத்தும் இடத்தில் சுமார் 15 சைக்கிள்களை நிறுத்திவிடலாம். சைக்கிளில் செல்ல நாமெல்லாம் ஹெல்மட் அணிவதில்லை. ஆனால் ஆஸ்திரேலியா நாட்டில் சைக்கிளுக்கும் ஹெல்மட் கட்டாயம்.
கிரேக்க நாட்டுத் தலைநகர் ஏதன்ஸின் பிரெட் பிர்ச்மோர் என்னும் சாதனையாளர் 1935இல் சைக்கிளிலேயே உலகம் முழுவதும் சுமார் 40 ஆயிரம் மைல்கள் சுற்றி வந்துள்ளார். இதில் 25 ஆயிரம் மைல்கள் தூரத்தை சைக்கிள் பெடலை மிதித்தே கடந்துள்ளார். எஞ்சிய தூரம் படகுப் பயணம். டூர் த பிரான்ஸ் என்பது ஆண்டுதோறும் பிரான்ஸில் நடைபெறும் உலகப் புகழ்பெற்ற சைக்கிள் பந்தயம்.