

வெளித் தோற்றத்தை எந்தளவுக்கு இன்றைய இளம் தலைமுறையினர் முக்கியமாக நினைக்கிறார்கள்? சிலரிடம் கேட்டோம்:
ஜி. ஜெயராமன்
மென்பொருள் நிறுவனத்தில் குழுத் தலைவராகப் பணியாற்றுகிறேன். என்னுடன் பணிபுரியும் சிலருக்குத் தலையில் வழுக்கை உள்ளது. அதைப் பார்க்கும்போது அது அவர்களுக்குப் பரம்பரையாக வந்திருக்கலாம் என நினைப்பேன். புறத் தோற்றம் நிரந்தரமானதல்ல. அதற்கு முக்கியத்துவம் கொடுக்கக் கூடாது. ஆரோக்கியமும், நல்ல மனமும் இருப்பதே முக்கியம்.
மு. மீனாட்சி சுந்தரம்
நான் சீனியர் இன்ஜினீயராக ரெனால்ட் நிஸ்ஸானில் பணிபுரிகிறேன். காதலில் ஏற்படும் பிரச்சினைகளும் வழுக்கை விழுவதற்கு ஒரு காரணம் என நினைக்கிறேன். எனக்கும் அப்படி முடி கொட்டிவிடுமோ என நினைப்பதுண்டு.
பொதுவாகத் திருமணம் என வரும்போது, படிப்பு; வேலை ஆகியவற்றுக்குத்தான் முக்கியத்துவம் தரப்படுகிறது. படிப்பும் வேலையும் இல்லாத பட்சத்தில் வழுக்கை பெரிய குறையாகக் கருதப்படுகிறது.
ரம்யா
நான் தனியார் துறையில் வேலை பார்க்கிறேன். திருமணத்துக்கு வழுக்கை ஒரு தடையாக இருக்கலாம் என நினைக்கிறேன். வழுக்கை தலைக்காரர்களுக்குப் பெண் கிடைப்பதில் சிரமம் இருக்கலாம். ஆனால் படித்து நல்ல வேலையில் இருக்கும் மணமகனை எந்தப் பெண்ணும் ‘நோ’ சொல்வதில்லை. தேவையில்லாமல் ஹேர் ரீ-பிளாண்டேஷன் போன்றவற்றில் ஈடுபடாமல் தனக்கேற்ற பெண்ணைத் தேடிக்கொள்வது நல்லது.
பூஜா
நான் பன்னிரெண்டாம் வகுப்பு மாணவி. எனக்கு வழுக்கைத் தலை உள்ளவர்களைப் பார்ப்பதற்குப் பாவமாக இருக்கும். என் குடும்ப உறுப்பினர்களில் சிலருக்கு வழுக்கை உள்ளது. அவர்களுக்கு நான் ஆறுதல் கூறுவேன். வழுக்கை இருக்கும் பலர் திருமணத்தின்போது, மொட்டை அடித்துக்கொள்கிறார்கள். வழுக்கை இருப்பவர்கள் அதுபோலச் செய்துகொள்ளலாம்.
டி.வி. அசோகன்
நாம் அவரைவிட உயரமாக இல்லையே, வெள்ளையாக இல்லையே என்ற சஞ்சலம் ஏற்படலாம். அதற்காக வருத்தப்பட்டு வருத்தப்பட்டே, நம் வாழ்க்கையை முடித்துக்கொள்ளக் கூடாது. குறைகள் இல்லாமல் யாரும் இல்லை. மனநலம் என்பது பிரச்சினைகளே இல்லாமல் வாழ்வதல்ல. பிரச்சினைகளோடு வாழப் பழகிக்கொள்வதுதான். இந்தப் புரிதல் இன்றைய இளம் தலைமுறையினருக்கு வேண்டும் என்றார் மனநல மருத்துவர் டாக்டர் டி.வி. அசோகன்.
வழுக்கையைச் சரிசெய்யப் போகிறோம் எனக் கருதி புற்றீசல்போல் முளைத்திருக்கும் மையங்களை நாடினால் விளைவு விபரீதமாகிவிடுகிறது என்பதற்கு உதாரணம் இளம் மருத்துவரின் மரணம். வழுக்கையை மறைப்பதைவிட, அதைப் புரிந்துகொள்வதே வழுக்கை என்ற எண்ணத்திலிருந்து வெளியேற உதவும். முடியைவிட இன்றும் மூளைக்குத் தான் மதிப்பு என்பதை இளம் தலைமுறையினர் மனதில் இருத்திக்கொண்டால், வழுக்கை போன்ற சாதாரண விஷயத் துக்காகத் தங்கள் உயிரையே இழக்கும் அபாயம் இனிமேலாவது நிகழாமல் போகும்.