

ஒருநாள் முல்லாவின் ஊருக்கு வந்த நண்பர், நேரம் ஆகிவிட்டதால் முல்லா வீட்டிலேயே தங்கினார். அவர் ஒரு விவசாயி. முல்லாவும் அவரை வரவேற்று விருந்தளித்து உபசரித்தார். விவசாயி கிளம்பும்போது முல்லாவுக்குத் தான் கொண்டுவந்த வாத்தைப் பரிசாகக் கொடுத்துச் சென்றார்.
பிறகு அந்த வாத்தைச் சமைத்து முல்லா தன் குடும்பத்துடன் சாப்பிட்டார். அதன் அபார ருசி முல்லாவுக்கு ரொம்பவும் பிடித்துவிட்டது. அந்த விவசாயியை நன்றியுடன் நினைவுகூர்ந்தார்.
அடுத்து இரண்டு நாள் கழித்து முல்லா வீட்டுக் கதவு தட்டப்படும் ஓசை கேட்டது. திறந்து பார்த்தபோது நின்றிருந்தவர், வாத்தைப் பரிசளித்த விவசாயின் பிள்ளைகள் என அறிமுகம் செய்தனர். முல்லாவும் மன மகிழ்ச்சியுடன் வாத்துக் கறி சமைத்து விருந்தளித்தார்.
நாட்கள் கடந்து வாரம் ஆயின. ஒருநாள் மீண்டும் முல்லா வீட்டுக் கதவு தட்டப்படும் ஓசை கேட்டது. வந்தவர்கள், வாத்தைப் பரிசளித்த விவசாயின் பக்கத்துவீட்டுக்காரர் எனக் கூறியுள்ளனர். முல்லா சற்றுத் தயக்கத்துடன் விருந்தளித்தார்.
வாத்தைப் பரிசாகப் பெற்றுக்கொண்டது தவறோ என்றுகூட நினைத்தார். பிறகு மனதைத் தேற்றிக்கொண்டார். அடுத்த வாரம் வந்தது. கதவு தட்டப்படும் ஓசை கேட்டது, வந்தவர்கள் “உங்களுக்கு வாத்தைப் பரிசளித்த விவசாயின் பக்கத்துவீட்டுக்காரரின் நண்பர்கள்” எனச் சொன்னார்கள். முல்லா கடுப்பான முகத்துடன் வரவேற்று உபசரித்தார். இனி வாத்துக்கு ஆசைப்படுவயா? எனத் தன்னைத் தானே கடிந்தும் கொண்டார்.
வாரங்கள் கடந்து மாதமும் முடிந்தது. மீண்டும் கதவு தட்டப்படும் ஓசை கேட்டது. முல்லா கதவைத் திறக்கும் முன்பே கடுப்பாகிவிட்டார். வந்தவர்கள், “உங்களுக்கு வாத்தைப் பரிசளித்த விவசாயின் பக்கத்துவீட்டுக்காரரின் நண்பரின் நண்பர்கள்” எனச் சொன்னார்கள்.
முல்லா ஒன்றும் சொல்லாமல் வரவேற்றார். அவர்களை அமரவைத்துவிட்டு, அவர்களுக்கு கிண்ணங்களில் வெந்நீர் ஊற்றி, “அருமையான வாத்து சூப்” எனச் சொல்லியிருக்கிறார். வந்திருந்தவர்களுக்கு உதடு புண் ஆனதுதான் மிச்சம். ஒருவர், “என்ன முல்லா இது சூப் என்றீர்கள். இது வெறும் வெந்நீர் போலத் தெரிகிறதே” எனக் கேட்டுள்ளார். அதற்கு முல்லா, “இது சூப்தான். உங்கள் நண்பரின் பக்கத்துவீட்டுக்காரரின் பக்கத்துவீட்டுக்காரரான விவாசயி பரிசளித்த வாத்துடைய சூப்பின் சூப்பின் சூப்புடைய சூப்பு” என்றார்.