புல்லட்டில் விரையும் இளைஞர்கள்

புல்லட்டில் விரையும் இளைஞர்கள்
Updated on
1 min read

இளைஞர்கள் என்று சொன்னாலே அவர்களில் பெரும்பாலானோர் பைக் பிரியர்களாகத்தான் இருப்பார்கள். இளைமையின் துள்ளலோடு பைக்கில் பறக்கும் ஆசை இல்லாத இளைஞர்களைப் பார்க்க முடியாது. பைக்கும் ஃப்ரண்டும் கிடைச்சிட்டாப் போதும் வெயில், மழை எதைப் பற்றியும் கவலையில்லாமல், வீடு திரும்பும் ஆசையில்லாமல் நண்பர்களுடன் திரிந்துகொண்டிருப்பார்கள். இது இயல்புதான். ஆனால் குறிப்பிட்ட ஒரு பிராண்ட் பைக்கில் இப்படிச் செல்லும் ஒரு குழுவை உங்களுக்குத் தெரியுமா? ஏ.கே.ஜி. மதராஸ் ரெட் புல் ரைடர்ஸ் (AKG Madras Red Bull Riders) என்னும் பெயர் கொண்டு குழுதான் அது. அவர்கள் மாதம் ஒருமுறை ராயல் என்ஃபீல்டு வண்டியில் குழுவாகப் பயணம் மேற்கொள்கிறார்கள்.

லிவிங்ஸ்டன் என்பவர் 2016-ல் மதராஸ் ரெட் புல் ரைடர்ஸ் குழுவைத் தொடங்கியிருக்கிறார். பேஸ்புக்கில் இந்தக் குழுவுக்கெனத் தனிப் பக்கம் உள்ளது. இவர்கள் வார விடுமுறை நாட்களைக் கழிக்கவும் சமூக விழிப்புணர்வை உருவாக்கவும் இத்தகைய பயணத்தை நடத்திவருகிறார்கள். தமிழகம் மட்டுமல்லாமல் பிற மாநிலங்களுக்கும் பயணம் செய்திருக்கிறார்கள்.

“விழிப்புணர்வு செய்திகளை உள்ளடக்கிய பதாகைகள் ஏந்தி, குழுவாக நெடுஞ்சாலையில் செல்லும்போது பலர் எங்களை வியப்புடன் பார்ப்பார்கள்” என்றார் மனோஜ் கண்ணன். இவர்தான் இந்தக் குழுவின் நிர்வாகி. இந்தக் குழுவில் இணையப் பலர் விரும்புவதால், போக்குவரத்து விதிமுறைகளைக் கறாராகப் பின்பற்றுகிறார்கள். நெடுந்தூரம் பயணிப்பதால் தலைக் கவசத்துடன் உடற்கவசத்தையும் அணிந்துகொள்கிறார்கள்.

குழுவாகப் பயணம் செல்லும்போது 20-25 இளைஞர்கள் ஒன்றாகச் செல்வார்கள். அவர்களை ஒருவர் வழிநடத்திச்செல்வது வழக்கம். குழுவில் ஒருவர் முதலுதவிப் பெட்டியையும் மற்றொருவர் பயணத்தின்போது வண்டி பழுதானால், அதைப் பழுது நீக்கத் தேவையான கருவிகளையும் தன்னுடன் கொண்டுசெல்வார். “பயணத்தின் போது சில வேளைகளில் காவலர்கள் விசாரிப்பார்கள். ஆகவே, பயணத்துக்கு முன்பே உரிய அனுமதியைப் பெற்ற பின்னர்தான் பயணத்தைத் தொடங்குவோம்” என்கிறார் மனோஜ்.

போகும் வழியில் பல கிராமங்களுக்கும் சென்று அவர்களிடையே பெண் உரிமை, கல்வியின் அவசியம் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுதியிருக்கிறார்கள். “ஒன் ரைடு என்பது 14 நாடுகளைச் சேர்ந்த எல்லா ராயல் என்ஃபீல்டு ரைடர்ஸும் ஒரே நாள் ஒரே நேரம் நெடுஞ்சாலையில் பயணிப்பார்கள். இதன் மூலம் ராயல் என்ஃபீல்டு ஓட்டுநர்களிடையே சாகோதரத்துவம் அதிகரிக்கும். மேலும் பிற ஓட்டுநர்களின் அறிமுகமும் கிட்டும்” என்று நெகிழ்ச்சியுடன் கூறினார் மனோஜ் கண்ணன். ஆண்டுக்கு ஒரு முறை புல்லட் ஓட்டுபவர்களுக்கு ரைடர்ஸ் மேனியா எனத் தனியே போட்டிகள் நடைபெறுமாம். இந்த ஆண்டு புல்லட் தூக்கும் போட்டியில் தாங்கள் வெற்றிபெற்றதை மகிழ்ச்சியோடு பகிர்ந்துகொண்டார் மனோஜ்.

கேட்கும்போதே ரெட் புல் ரைடர்ஸில் இணைய ஆசை வருகிறதா? ராயல் என்ஃபீல்டு பைக் இருந்தால்போதும் எந்த நாடாக இருந்தாலும் இந்தக் குழுவில் இணையலாம். தங்களுக்கென்று தனி யூடியூப் பக்கத்தையும் உருவாக்கியுள்ளார்கள். இவர்களது ஃபேஸ்புக் பக்கம்: >https://www.facebook.com/madrasredbulriders/

- வி.பாரதி

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in