

எது நடக்கக் கூடாது என்று நினைக்கிறோமோ எழுதுகிறோமோ அது மறுபடியும் நடந்துவிட்டது. கடந்த வாரம் சென்னையில் ஒரு இளைஞர் தன் காதலியைக் கொலை செய்துவிட்டுத் தானும் தற்கொலை செய்துகொண்டார். தன்னைத் திருமணம் செய்துகொள்ள மறுத்து விலகிச் செல்லும் எண்ணத்தில் இருந்தவரைக் கடைசியாகப் பார்க்க வேண்டும் என்று அழைத்து, சுத்தியலால் தாக்கியே கொன்றிருக்கிறார். எங்கிருந்து வருகிறது இவ்வளவு வன்மம்? ஏன் இப்படிச் செய்கிறார்கள்? தங்கள் முன்னாள் காதலியையோ பிரிய நினைக்கும் மனைவியையோ கொல்லுகிற அளவுக்குப் போவதன் உளவியல் பின்னணி என்ன?
இருவரல்ல ஒருவர்
காதலை விளக்கும்போது fusion model of love என்று ஒன்றைச் சொல்வார்கள். ஆழமாகக் காதலிக்கும்போது நாம் இருவர் இல்லை ஒருவரே என்ற அளவில் சிந்தனை, சொல், செயல் எல்லாம் ஒன்றாகிவிடுகின்றனவாம். உடல் ஒட்டிப் பிறந்த சியாமீஸ் (Siamese) இரட்டையர்களைப் போல என்று வைத்துக்கொள்ளுங்களேன். இருவர் ஒருவராகும் இந்த அதிசயத்தைச் சொல்லாத கவிதைகள் இல்லை. சினிமாப் பாடல்கள் இல்லை. எனக்கான அடையாளமே அவள்தான், என் உலகமே அவள்தான், அவளில்லாமல் நான் ஒன்றுமே இல்லை என்ற முடிவுக்கு வந்துவிடுகிறார்கள் சிலர். சொல்லப் போனால் அப்படி ஒன்றிப்போன காதல் தம்பதியினரை உலகம் வியந்துதான் பார்க்கிறது.
இவ்வளவு ஏன்… நீண்ட கால மகிழ்வான, மன நிறைவான வாழ்க்கைக்குப் பிறகு கணவனும் மனைவியும் உள்ளத்தில் மாத்திரமல்ல, உடல் ரீதியாகவும் பல ஒற்றுமைகளைக் கொண்டிருப்பவர்களாகவே மாறிவிடுவார்கள் என்று ஒரு ஆய்வில் கண்டறிந்திருக்கிறார்கள். கொலை செய்யும் அளவுக்கு, அதுவும் திட்டமிட்டே ஆயுதங்களை எடுத்துக் கொண்டு சந்திக்கச் செல்லும் அளவுக்குக் காதல் நிராகரிப்பு அவ்வளவு துயரமானதா?
வெறுப்புக்கும் கண்ணில்லை
காதலுக்கு மட்டும்தான் கண்ணில்லை என்பதல்ல. வெறுப்புக்கும் கண்ணில்லை என்றுதான் சொல்ல வேண்டும். வன்முறையை எந்த அளவுக்குக் கையிலெடுத்தாலும் தப்பில்லை என்ற அளவுக்குச் சில ஆண்களுக்கு அந்த வெறுப்பு கண்ணை மறைத்துவிடுகிறது. இந்த அளவு வன்முறைக்கு நம் மூளையின் வேதியியலும் ஒரு காரணமே. காதல் நிராகரிக்கப்படும்போது நடக்கும் உளவியல் கதறல்களை ஏற்கெனவே எழுதியிருக்கிறேன். அதாவது, மறுக்கப்பட்டுவிட்டோம் என்றவுடனேயே முதலில் நம்ப மறுக்கிறோம். ஏற்றுக்கொள்ள மறுக்கிறோம். “அய்யோ… இருக்கவே முடியாது.
என்னையா வேண்டாமென்கிறாய்” என்று கத்துகிறோம், கதறுகிறோம். இந்த உணர்வுப் பிரளயத்தில் சிக்கி இருக்கும்போது நார்எபினெஃப்ரின் (norepinephrine), டோபமைன் (dopamine) என்ற இரண்டு வேதிப்பொருட்களும் உடலில் பிரவாகமாகப் பொங்குகின்றன. விளைவு? மறுக்கப்பட்ட நபர் பயங்கர உத்வேகத்துடன் ‘எப்படி அவளை மடக்குவது’ என்ற சிந்தனையின் விளைவாகப் பின் தொடர்கிறார் (stalking). அந்தப் பெண்ணின் வீட்டுக்கு, வேலை செய்யும் இடத்துக்கு, அவரது நண்பர்கள் வீட்டுக்கு, அவர் வந்து செல்லும் மார்க்கெட்டுக்கு என்று நிராகரிக்கப்பட்டவரின் பயணம் தொடர்கிறது. நள்ளிரவு, அதிகாலை என்றில்லாமல் பசி, தூக்கம் மறந்து காதலியே கதி என்று அல்லாடுகிறார்கள்.
இதற்கான சக்தியைக் கொடுக்கும் இந்த வேதிப்பொருட்கள்தான் இன்னொன்றையும் செய்கின்றன. அதாவது இவற்றின் அளவு உடலில் ஏற ஏற செரோடோனின் (serotonin) என்ற வேதிப்பொருளின் அளவு குறைய ஆரம்பிக்கிறது. செரோடோனின் குறைந்தால் மனச்சோர்வு, மனப்பதற்றம் போன்றவை மட்டுமன்றி தற்கொலை எண்ணங்களும் ஏற்படும். உணர்வுகளின் பிடியில் சிக்கிக் கட்டுப்படுத்த முடியாத அளவுக்கு வன்முறைகளில் ஈடுபடவும் துணிந்துவிடுகின்றனர்.
காதலின் தீவிரம்?
காதலின் பெயரால் நடக்கும் கொலைகளின் பின்னணியில் ஒருவித பயம், பொறாமை, கட்டுப்படுத்தும் மனப்பாங்கு இவை மட்டுமல்லாது ‘நீ எனக்கு மட்டும்தான்’ என்ற உடைமையாக்கிக்கொள்ளும் தீவிர மனப்பாங்கும் (possessiveness) ஒரு காரணமாக இருக்கும். அவள் இல்லாமல் நான் எப்படி இருப்பேன் என்ற ஆயாசம் இடியென மனதில் இறங்கும்போது அதீத பயத்துக்கு ஆளாகிறார்கள். அந்த வாழ்க்கையை நினைத்துப் பார்க்கவே அச்சப்படும் ஆண்கள் பெண்ணின் உயிரையும் எடுக்கும் ஆபத்தான முடிவுக்கு வருகிறார்கள்.
அடுத்து பொறாமை. வேறு யாரோ அவளை அபகரித்துக்கொள்வார்கள், அதற்கு அவளும் சம்மதம் சொல்வாள் என்ற நினைப்பே இது மாதிரி ஆண்களைப் பித்துப் பிடிக்க வைத்துவிடுகிறது. எனக்கு இல்லாத அவள் வேறு யாருக்கும் கிடைக்கக் கூடாது, அவளைக் கொல்வதுதான் இதற்கு ஒரே வழி என்று முடிவெடுக்கிறார்கள். எந்த அளவுக்குத் தன் காதலியைச் சார்ந்து வாழ எத்தனித்திருக்கிறார்கள் என்பதையே இது போன்ற காதல் குற்றங்கள் அறிவிக்கின்றன. காதல் விவகாரங்களைப் பொறுத்த மட்டில் பலவீனத்தின் வெளிப்பாடுதான் கொலையே தவிர ஒரு போதும் அது பலத்தின் வெளிப்பாடாக இருப்பதில்லை. அடுத்து பொசஸிவ்னஸ்.
இவள் தனக்குரியவள் என்று மனதில் வகுத்துக்கொண்டுவிட்ட நேரத்தில் அந்தப் பொருள் உன்னுடையதல்ல என்று நிஜம் உணர்த்தும்போது மனம் ஏற்றுக்கொள்ள மறுக்கிறது. எல்லோரையும் அப்படிக் குறிப்பிட முடியாது. காதல் தோல்வி அடைந்தவர்களெல்லாம் தம் பார்ட்னரைக் கொல்வதில்லையே. இந்த இடத்தில்தான் அவர்களின் மனப்பாங்கு, ஆளுமைக் கோளாறுகள், உளவியல் பிரச்சினைகள், போதைப் பழக்கங்களுக்கு அடிமையானவர்களாக இருத்தல் போன்ற விஷயங்களை நாம் பார்க்க வேண்டும். கொலை செய்யும் அளவுக்கு வந்தவர்கள் அதற்கு முன்பே கொஞ்சமாகத் தங்களது வெறித்தனத்தைக் காண்பித்திருக்கக் கூடும். அப்போதே எதிராளி சற்று எச்சரிக்கையாக இருந்திருக்க வாய்ப்பு உண்டு.
கொஞ்ச நாள் பின் தொடர்வான். பிறகு விட்டு விலகி விடுவான் என்று எல்லோரையும் ஒரே மாதிரி நினைத்துவிட முடியாது என்பதை இது போன்ற சம்பவங்கள் மீண்டும் மீண்டும் உணர்த்துகின்றன. அந்த வயதில் காதல் தோல்வி என்பது அப்படித்தான் இருக்கும் என்பதை மறுப்பதற்கில்லை. உடல் வலியைப் போன்றே மன வலியும் இருக்கும் என்பதை மூளையில் மேற்கொண்ட ஆய்வுகளின் முடிவுகள் சொல்கின்றன.
வெளிப்படும் உளவியல் கோளாறு
உலகின் ஆரம்பமே அவள்தான் என்று உணர்வுபூர்வமாக முடிவு செய்வதால் அவள் இல்லாத உலகம் முற்றுப்பெற்றுவிட்டதாக உணர்ந்து அவளையும் கொன்று தானும் தற்கொலை செய்துகொள்கிறான். காதல் தோல்வியில் தற்கொலை என்று கேள்விப்பட்ட காலம் போய் காதலியையும் கொன்று தானும் தற்கொலை செய்துகொண்டான் என்பது போன்ற செய்திகளை இன்று அதிகம் கேள்விப்படுகிறோம்.
காதலைப் பெற்றோர் எதிர்ப்பதற்குப் பல காரணங்கள் இருந்தாலும் இதுவும் ஒரு முக்கியக் காரணம். தன் மகனோ மகளோ காதலிக்காமல் தப்பித்தால் நல்லது, அப்படியே காதலில் விழுந்தாலும் அந்தப் பையன் நல்லவனாக இருக்க வேண்டுமே என்றுதான் பெற்றோர் நினைக்கிறார்கள்.
“இவர் குடிப்பது தெரிந்தே காதலித்தேன். எல்லோரையும் மீறி மணம் முடித்தேன். இன்று முழுநேர குடிநோயாளிவிட்டார்” என்று என்னிடம் சிகிச்சைக்குத் தன் கணவரை அழைத்துவருகிறார் ஒரு இளம் மனைவி. “ஃபேஸ்புக் மூலம் அறிமுகமாகி காதலிக்க ஆரம்பித்தோம். இப்போது எப்படி விலகுவது என்று தெரியாமல் பரிதவித்துக்கொண்டிருக்கிறேன்” என்கிறார் மற்றொரு இளம்பெண். “என்னிடம் காதலைச் சொன்ன நீ, இதே ஃபேஸ்புக்கில் என்னைவிட அழகாக யாரேனும் வந்தால் அவனை லவ் பண்ண மாட்டேன்னு என்ன நிச்சயம் என்று கேட்க ஆரம்பித்தார்.
இதோ இன்று ஃபேஸ்புக், வாட்ஸ் அப் என்று எல்லா சமூக வலைத்தளங்களில் இருந்தும் வெளியே வந்த பிறகும் எனக்கு நிம்மதியில்லை. அவருக்குச் சந்தேகமே ஒரு நோயாக இருக்கிறது. எப்படி இவரைத் திருமணம் செய்வது?” என்று குழம்புகிறார். இதுபோன்ற சம்பவங்கள் உளவியல் கோளாறுகள் உள்ளவரையா காதலித்தோம் என்ற அதிர்ச்சியை ஏற்படுத்தலாம். நமது தேர்வு முடிந்தவரை எல்லா வகையிலும் சரியாக இருக்க வேண்டும் எனபதை மீண்டும் நினைவில் கொள்ளுங்கள்.
எல்லாமே பேசலாம்! ஹாய் ஃப்ரெண்ட்ஸ், மத்தவங்க கிட்டே பகிர்ந்துக்க முடியாமல் உங்க மனசுக்குள்ளேயும் ஆயிரம் கேள்விகள் அலையடிச்சுக்கிட்டு இருக்கலாம். அதை எல்லாம் எழுதி அனுப்பினால் மனநல மருத்துவரின் ஆலோசனையும் வழிகாட்டலும் கிடைக்கும். |
(பயணிப்போம்)
கட்டுரையாளர், மனநல மருத்துவர்.
தொடர்புக்கு: drmohanv18@gmail.com