காதலிக்கத் தெரியவில்லையா?

காதலிக்கத் தெரியவில்லையா?
Updated on
2 min read

நம் மனம் சமூகத்தால் கட்டமைக்கப்படுகிறது. இது சரி, இது தவறு, இது நல்லது இது கெட்டது என்றெல்லாம் நாம் பிறந்ததிலிருந்தே நமக்குச் சொல்லிக்கொடுக்கப்படுகிறது. சமூக-கலாச்சாரம் என்பது ஒரு முறைப்பாடு. இது நம் மனத்தின் வழியாகச் செயல்படுகிறது. சமூகம் வெளியில் இல்லை. நமக்குள்ளே நம் மனமாகச் செயல்படுகிறது அது. நம் பெற்றோர்களின் மனங்களின் வழியாக நம் மனங்களைத் தன் ஆதிக்கத்திற்குள் கொண்டுவருகிறது.

சமூக-கலாச்சார சக்திகளைப் பொறுத்தவரை அன்பு, சந்தோஷம், தனித்துவம், மனத் தெளிவு, இவையெல்லாம் முக்கியமே இல்லை. தலைமுறை தலைமுறையாகத் தன் தொடர்ச்சி இருக்க வேண்டும். அதுதான் முக்கியம்.

ஆனால் இது நாம் அறிவுணர்வு அடையாத வரைக்கும்தான் சாத்தியம். நாம் சுயமாகச் சிந்திக்கத் தொடங்கும் வரைக்கும்தான் இது நடக்கும். நாம் வாழ்க்கை பற்றிச் சிந்திப்பதை மற்றவர்களிடம் ஒப்படைத்திருக்கும் வரைக்கும் இது தொடர்ந்து நடந்துகொண்டுதான் இருக்கும்.

நாம் நம்மைக் காதலிக்கக் கற்றுக்கொள்ள வேண்டும். யாரிடமிருந்து? நம்மிடமிருந்துதான். ‘அது சுயநலமில்லையா?’ என்ற கேள்வி பெரிதாகக் காதில் விழுகிறது. எது சுயநலம்? புறவுலகில் பொருட்களையும் சந்தர்ப்பங்களையும் பிறருக்கு விட்டுக்கொடுக்காமல் நான் மட்டுமே அனுபவிக்க வேண்டும் என்று நான் நினைத்தால் அது சுயநலம்தான்.

நான் என்னைச் சந்தோஷமாக வைத்துக்கொள்ளாவிட்டால் சந்தோஷமற்ற ஒருவனை நான் உலகில் நடமாட விடுகிறேன். நான் போகுமிடமெல்லாம் என் துயரத்தைப் பரப்பிக்கொண்டே போகிறேன். இது சரியா? அல்லது, என்னை நான் சந்தோஷமாக வைத்துக்கொண்டு, போகும் இடமெல்லாம் சந்தோஷத்தையும் புன்னகையையும் பரப்பிக்கொண்டு போவது சரியா? நம்மீது நாம் அன்பு செலுத்தினால்தான் பிறர் நம்மீது உண்மையில் அன்பு செலுத்துகிறார்களா இல்லையா என்பதே புரியும்.

நம் அறிவுணர்வு பெருமளவுக்கு அதிகரித்திருக்கிறது. அதைப் பயன்படுத்திக்கொண்டு நாம் சிந்திக்கக் கற்றுக்கொள்ள வேண்டும். நம்மைக் காதலிக்கக் கற்றுக்கொள்ள வேண்டும்.

நான் ஒரு பெண்ணை மனதாரக் காதலிக்கிறேன். எனக்குத் தாழ்வு மனப்பான்மை அதிகம். அதனால் என் காதலைச் சொல்லத் தயங்குகிறேன். அது மட்டுமில்லாமல் என் காதலை நிராகரித்துவிடுவாளோ என்று எனக்குள் பயமாக இருக்கிறது. இதுவே எனக்கு மன உளைச்சலையும் அதிகரிக்கிறது. நான் என்ன செய்வது என்று தெரியாமல் மன உளைச்சலோடு தவிக்கிறேன். தங்கள் ஆலோசனையை எதிர்பார்க்கிறேன்.

உங்கள் நிலை புதிதல்ல. பலருடைய நிலை இதுதான். ஒரு விஷயத்தைப் புரிந்துகொள்ளுங்கள். நீங்கள் இப்போதே துன்பத்தில்தான் இருக்கிறீர்கள். நேரடியாகச் சென்று உங்கள் காதலை அந்தப் பெண்ணிடம் சொல்லுங்கள். அதற்கு உங்களுக்கு உரிமை இருக்கிறது. அவள் உங்களைக் காதலிக்க வேண்டும் என்று கட்டுப்படுத்தும் உரிமைதான் உங்களுக்கு இல்லை. உண்மையைத் தெரிந்துகொள்வது முக்கியம்.

அவள் உங்கள் காதலை ஏற்றுக்கொள்ளவில்லை என்னும் பட்சத்தில்கூட உங்கள் துன்பம் உங்கள் அகவளர்ச்சிக்கு உதவும். உங்களுக்குள்ளேயே நொந்துகொண்டு இருப்பதைவிட இரண்டில் ஒன்று தெரிந்துகொள்ளுங்கள். உங்கள் வாழ்க்கைப் பயணத்தின் அடுத்த கட்டத்தில் தைரியமாக அடியெடுத்து வையுங்கள். அந்தப் பெண்ணைவிட நீங்கள்தான் உங்கள் வாழ்க்கையில் அதிமுக்கியமான நபர் என்பதை மறந்துவிடாதீர்கள்.

எனக்கு இப்போது நடக்கும் சம்பவங்கள் ஏற்கனவே எனது கனவில் நடந்தவை போல் உள்ளன. இது எனது கற்பனையா அல்லது மனநோயா? இதனால் பாதிப்பு ஏதாவது உண்டா?

நீங்கள் என்ன சொல்கிறீர்கள் என்பது தெளிவாக இல்லை. சில கணங்களில் நமக்கு நிகழும் ஒரு அனுபவம் அதேபோல் ஏற்கனவே நடந்திருப்பதாகத் தோன்றும். இதற்கு தேஜா வூ என்று பெயர். இதற்குக் காரணம் என்ன என்பது இன்னும் தெரியவில்லை.

ஆனால் இது ஒரு மன நோயல்ல. எல்லோருக்கும் நடப்பதுதான். ஆனால் நீங்கள் சொல்வது இதுதானா என்பது தெரியவில்லை. எதற்கும் நீங்கள் ஒரு மன நல ஆலோசகரிடம் சென்று விவரமாகப் பேசுங்கள். தெளிவு கிடைக்கும்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in